ஜெ.பாஸ்கரன்/அறிமுகம்

“அம்மா, வாட் இஸ் கெணறு?”

புன்னகைத்தபடி விஷால் தலையைக் கோதி விட்டாள் கீர்த்தனா. ஆறு வயது விஷால் பிறந்தது முதல் அமெரிக்காவில்தான் எல்லாம், ஆறாம் மாதம் அன்னப்பிராசனம் உட்பட! தமிழில் கேட்டால் அமெரிக்கன் டமிலில் பதில் சொல்வான். இந்த முறை கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதால், விஷாலிடமிருந்து இந்த எதிர்பாராத கேள்வி.

நிலத்தடி நீர், வீட்டுக்கொரு கிணறு, சுழலும் ஜகடை, இரும்பு வாளி, தாம்புக் கயிறு என முடிந்தவரையில் ஆங்கிலத்தில் சொன்னாள் கீர்த்தனா. விஷால் முகத்தில் தெரிந்த சந்தேகக்குறிகள், கிணற்றை நேரில் பார்த்தால் சரியாகிவிடும் என்று நினைத்தாள்.

கிராமத்துக்கு வந்தவுடன், வீட்டுக்கொல்லைப் புறத்தில், மரங்களுக்கிடையே இருந்த கிணற்றைப் பார்த்த விஷாலின் கண்கள் விரிந்தன. குட்டி முயல் போல எட்டிப்பார்த்தான். கிணற்று நீரில் விஷாலின் முகம் சிரித்தது!

இடுப்பில் சின்னத் துண்டுடன் குளிக்க வந்து நின்றான். ஷாம்பூ, சோப்பு, டவல் எல்லாம் கிணற்றுப் படியில் இருந்தன. கிணற்றிலிருந்து இரும்பு வாளியில் தண்ணீர் இறைத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் நிறைத்தாள் கீர்த்தனா. வெது வெதுப்பான நீரில் தலை நனையக் குளிப்பாட்டினாள். புடவைத் தலைப்பைத் தூக்கிச் சொருகியிருந்த அம்மாவின் புடவை, கால் செறுப்பு நீரில் நனைந்ததை வியப்புடன் பார்த்தான் விஷால்!

கிணற்று நீரை வாளியிலிருந்து நேராக விஷாலின் தலையில் ஊற்றியபோது, அவன் உடம்பு ஒரு முறை சிலிர்த்தது. “இது ஷவரை விட ரொம்ப ஃபோர்ஸா இருக்கு” என்றான்.

தலை துவட்டி, உடம்பு துடைத்து உள்ளே வர மனமில்லாமல், திரும்ப ஒரு முறை கிணற்றை எட்டிப்பார்த்தான். அங்கிருந்த இரண்டு நாட்களும், கிணற்றடிக் குளியல்தான்!

“அப்பாவை, இதே மாதிரி ஒரு கிணற்றை அமெரிக்காவில் தன் வீட்டிற்கு வாங்கச் சொல்ல வேண்டும், அமேசானில்” என்று நினைத்துக்கொண்டான்.

ஊருக்குத் திரும்பி வந்தவுடன் அவன் அப்பா முரளி கேட்டான்: “விஷ், கிணற்றுக் குளி எப்டி இருந்தது?”

“சூப்பர். ஆனா பாத் ரூம்லெதான் சுவரே இல்லை. ஓபன்ல குளிக்க ‘ஷை’யா இருந்தது!”

One Comment on “ஜெ.பாஸ்கரன்/அறிமுகம்”

Comments are closed.