
இன்று (15/11/23) சொல் புதிதில் நிகழ்ந்த 28 ஆவது இணைய கால கவியரங்கத்தில் மாலை 6.15 மணிக்கு நான் வாசித்த கவிதை 👇🏻
முறுக்கு சாப்பிட்டால்
கோபித்துக் கொள்கிறது
பல்
இனிப்பு சாப்பிட்டால்
வாயில் ருசிப்பதற்கு முன்
சேர்ந்துவிடுகிறது
ரத்தத்தில் அது
கனவில் வந்து பயமுறுத்தக் கூடிய அளவில்
அடுத்த பரிசோதனை அறிக்கை மூலம்
எனது வண்டவாளங்களை
உலகிற்கு பறைச் சாற்ற
பட்டாசு வெடித்தால் காது பிராது கொடுக்கிறது
மூச்சுத் திணறலுக்கு பயந்து
மூடிய ஜன்னல் வழியே
ஒளி பட்டாசை பார்த்தால்
கழுத்து வலிக்கிறது
தினம் தினம் செய்வது போல்
இட்லி
சோறு
சக்கரையில்லா காபி
ராகி ரொட்டி
சாப்பிட்டு
இணைதிரை பார்த்து…
வெறும் எண்ணைக் குளி
தீபாவளியாகுமா?
வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் (1991-2023) தொகுப்பு
