சாருநிவேதிதா/எழுத்துவும் ஒரு சிறுபத்திரிகை

எத்தனையோ சிறுபத்திரிகைகளைப் போல் எழுத்துவும் ஒரு சிறுபத்திரிகை அல்ல; அது ஓர் இயக்கம். அந்த இயக்கத்தின் ஒரே தலைவனும் போராளியும் செல்லப்பாதான். இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழ்க் கலாச்சார சூழலுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மொழிகளிலும் Pulp writing எழுதப்பட்டு வாசிக்கப்படுகிறது. நான் அதற்கு எதிர்ப்பாளன் அல்லன். ஆனால் ஓர் ஆங்கில வாசகருக்கு சிட்னி ஷெல்டன், ஸோஃபி கின்ஸெல்லா போன்றவர்களுக்கும் கார்ஸியா மார்க்கேஸுக்குமான வித்தியாசம் தெரியும். ஆனால் தமிழில் அசோகமித்திரனை எழுத்தாளர் என்றால் ரமணி சந்திரனும் எழுத்தாளர்தான். இரண்டு பேருக்குமான வித்தியாசம் தமிழ்ச் சூழலில் இல்லை. முன்பு ஒரு எழுத்தாளர் பிரபலமாக இருந்தார். ஏழு வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டிருந்தார். ஆன்மீகமும் எழுதுவார், செக்ஸும் எழுதுவார். பத்திரிகைகளிலிருந்து உதவி ஆசிரியர்கள் போய் அவர் வீட்டில் நிற்பார்கள். எழுத்தாளர் ஓர் உதவி ஆசிரியரைக் கூப்பிட்டு ‘போன வாரக் கதை என்ன, எங்கே முடித்தேன்?’ என்று கேட்பார். அவர் சொன்னதும் அந்த வாரக் கதையை டிக்டேட் செய்வார். அடுத்து, இரண்டாவது பத்திரிகையின் உதவி ஆசிரியரை அழைத்து அதே கேள்வி. அதே பாணியில் அடுத்த அத்தியாயம். அவர் ஏழு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தபோது அவர் பெயரைத் தெரியாதவர் கிடையாது. இப்போது அவர் பெயரை எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆனாலும் தமிழ்ச் சூழலில் ரமணி சந்திரனும் ஒன்றுதான்; அசோகமித்திரனும் ஒன்றுதான். இதைத்தான் தன் வாழ்நாள் பூராவும் எதிர்த்தார் செல்லப்பா. ‘உங்களையெல்லாம் நூறு பேர் தானே படிக்கிறார்கள்; எங்களை லட்சம் பேர் படிக்கிறார்கள்’ என்று சொல்லியே செல்லப்பாவை எதிர்த்தது பாமர ரசனைக் கூட்டம். ஆனால் செல்லப்பா மனம் தளராமல் எழுத்து பத்திரிகையை நடத்தி தமிழ் இலக்கியத்தில் பாரதி துவங்கி வைத்த நவீனத்துவ கால கட்டத்தை மேலும் பல படிகள் முன்நகர்த்தினார். இன்றைய தமிழின் சமகால இலக்கியச் செழுமைக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றால் அதில் முதலில் வருபவர் சி.சு. செல்லப்பாதான். அவர் நடத்திய எழுத்து பத்திரிகைதான் தமிழ் நவீனத்துவத்தின் முக்கியமான தடம் என்று சொல்லலாம்.

அதன் பொருட்டு இரண்டு தடைகளை ஒற்றை ஆளாக நின்று எதிர்க்க வேண்டியிருந்தது செல்லப்பாவுக்கு. ஒன்று, வெகுஜன எழுத்து ரசனை. இரண்டாவது, திராவிட இயக்கம் மற்றும் தமிழாசிரியர் கூட்டம்.

இப்படிப்பட்ட சூழலில் கல்கி போன்ற மாபெரும் வாசகர் பரப்பைக் கொண்ட எழுத்தாளர்களை எதிர்த்து தன் மனைவியின் நகைகளை அடகு வைத்த காசில் ஐநூறு பிரதிகளுடன் ஒரு பத்திரிகையை அச்சடித்து வெளியிட்டு தமிழின் வெகுஜன கலாச்சாரத்தை ஒற்றை ஆளாக நின்று எதிர்த்திருக்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட விஷயம்?