
பேஞ்சு கெடுத்தாச்சு
கம்மாய் ஒடப்பெடுத்து ஊருக்குள் வந்தாச்சு
கதிரு மணியெல்லாம் தண்ணிக்குத் தந்தாச்சு
மண்ணும் களியாகி வரப்பெல்லாம் கரைஞ்சாச்சு
மானம் கொட்டியதில் வயலெல்லாம் மறைஞ்சாச்சு
இடிக்கும் மின்னலுக்கும் இறுமாப்பு ஏறியாச்சு
இறங்கும் மழைவேரும் பூமிக்குள் ஊறியாச்சு
துடிக்கும் மரமெல்லாம் துவண்டு போயாச்சு
துள்ளும் செடியெல்லாம் தூள்தூளாய் ஆயாச்சு
பேயாமல் கெடுத்தப்போ வெயிலிலே காஞ்சாச்சு
பேஞ்சு கெடுக்கிறப்போ மழையிலே சாஞ்சாச்சு
ஓயாமல் ஊத்தியதில் ஊரே காடாச்சு
ஓஞ்சு நொம்பளத்தில் உசிரை விடலாச்சு
பக்கத்து ஊருக்கும் பாதை மறைஞ்சாச்சு
பாழும் தண்ணியிலே தீவாய் ஒறைஞ்சாச்சு
திக்கத்த எங்களுக்கு தெருவே கதியாச்சு
திங்கவும் பொங்கவும் தீனியில்லா விதியாச்சு
ஊரு ஒலகத்தில் ஊர்கோலம் போறவரே
காரு பணத்தோட கண்காட்சி ஆறவரே
நாறிப் பொழப்பெல்லாம் நாராகி உரியிறது
நாங்க கெடக்கிறது கண்ணுக்குத் தெரியறதா
தூங்காத பூங்கா
தூங்காத பூங்காவில்
தூங்குதற்குப் போகாதீர்
வேரோடும் விழுதோடும்
பழுப்புபச்சை இலையோடும்
வரியோடும் கிளையோடும்
வளர்ந்து நிற்கும் மரத்தோடும்
மென்பச்சைத் தண்டோடும்
மெலிதான வளைவோடும்
காற்றோடு கலந்தாடிச்
சிரிக்கின்ற செடியோடும்
மஞ்சளில் அத்தனையும்
சிவப்புக்குள் அத்தனையும்
நிறத்துக்குள் நிறம் பிரித்து
நெளிந்தாடும் பூவோடும்
சலசலக்கும் நீரோடை
சங்கீதக் குரலோடும்
விளையாடும் சிறுமியரின்
வாயோசைக் குழலோடும்
கண்ணுக்கும் காதுக்கும்
விருந்தளிக்கும் பூங்காவை
உண்ணுவதை விட்டு விட்டு
உறங்குதற்குப் போகாதீர்
அப்பாவி எதிரிகள்
என் கழுத்து அறுபட்டபோது
உன் உறுப்பு அவமானப்பட்ட போது
ரத்தம் கொட்டியபோது
கோபம் கொப்பளித்தபோது
எனக்கு நீ எதிரியா
உனக்கு நான் எதிரியா
குண்டுமழை பொழிந்தபோது
கட்டிடங்கள் இடிந்தபோது
கூட்டமாய் அழிந்தபோது
குழந்தைகள் அழுத போது
எனக்கு நீ எதிரியா
உனக்கு நான் எதிரியா
கிழக்கும் மேற்கும் சேரும்போது
நானும் நீயும் மாறும்போது
எனக்கு நீ நண்பன்
உனக்கு நான் நண்பன்
சா’தீ ‘
சாகுபடி இல்லையென்றால்
சாகும்படி தலையெழுத்து
சோம்பேறிக் கோபத்தில்
சாதிக்குச் சேதி வரும்
போட்டுப் பார்த்துவிட
புகை மூட்டிக் குளிர் காய
காட்டுக் கூட்டமொன்று
கச்சிதமாய் வேலை செய்யும்
சாமியினைப் பிரித்து வைக்கும்
சாலையினைத் தடுத்து வைக்கும்
பேச்சுத்தீ வெறியாலே
சாதித்தீ எரிய வைக்கும்
குத்தீட்டி அரிவாளும்
ரத்தத்தின் சுவை கேட்கும்
பக்கத்து ஊரெல்லாம்
பரவிவிடும் சாதிவெறி
உணர்ச்சிக்கு இரையான
உள்ளத்தில் அனல் ஏறும்
உயிருக்கு உயிர் வாங்கும்
ஊரெல்லாம் காடாகும்
