மனித வாழ்க்கையின் சகலவிதமான../எஸ்.பார்த்தசாரதி

மனித வாழ்க்கையின் சகலவிதமான பிரச்சனைகளும், வேதனைகளும் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கி அவனைத் திக்குமுக்காட வைத்தது.

அவனுக்கிருந்த ஒரே ஆறுதலும், ஆதரவும் அப்போது நமது சுவாமி யோகி ராம்சுரத்குமார் ஒருவர் மட்டும்தான்.

அன்று அவன் அதிகாலையிலேயே சுவாமியின் சந்நிதித் தெரு வீட்டிற்கு வந்தடைந்தான்.

பசியிலும், துன்பங்களிலும் தளர்ந்திருந்த அவன் வீட்டின் தாழ்வாரக் கதவை மெதுவாகத் தட்டினான்.

வீட்டின் பெரிய மரக்கதவு திறந்தது. சுவாமி காட்சி அளித்தார்.

அவனைக் கண்டதும் சுவாமியின் முகமலர் மலர்ந்தது.

“வாங்க”
சுவாமி வாய்நிறைய அழைத்தார்.

அன்றைய நாட்களில் அவனைக் கண்டாலே விலகிச் செல்வோரே அதிகம். சுவாமி ஒருவரே அவனை அன்போடு வரவேற்பவர்.

தாழ்வாரக் கதவைத் திறந்து அவன் உள்ளே வந்தான். சுவாமி அவன் கரம் பற்றி வீட்டினுள் அழைத்துச் சென்றார். அவர் எதிரே அவனை அமரவைத்தார். கருணையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் உணர்வற்று வெறித்துப் பார்த்தவாறு இருந்தான்.

காபி வந்தது. குடித்தான். காலைச் சிற்றுண்டி வந்தது. புசித்தான்.

“வாழ்வின் துன்பங்களும், வேதனைகளுமே ஒருவனைத் தெய்வீகத்திற்கு அருகில் அழைத்துச் செல்கிறது. அப்பாவை நினைக்கத் தூண்டுகின்றது. நண்பா, அப்பா நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார். எல்லாம் சரியாகிவிடும். கவலை தேவையில்லை நண்பா.

நீ அறிவாயா, குந்தி கிருஷ்ணனிடம் என்ன வரம் கேட்டாளென? கிருஷ்ணா, நான் இனி எத்தனை ஜன்மம் எடுத்தாலும் எனக்குத் தாங்க முடியாத கஷ்டத்தையே அருள்வாயாக. அப்போதுதான் நான் உன்னை என்றென்றும் மறவாது நினைத்திருப்பேன் கண்ணா.

நண்பா நீயும் என் தந்தையையே நினைத்திருப்பாயாக.”

சுவாமியின் அருள் நிறைந்த வார்த்தைகள் அவன் உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தியது. அவன் சற்றே தெளிவடைந்தான்.

சுவாமி அவனை அண்ணாமலையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அவரின் திருக்கரம் அவனின் கையைப் பற்றியவாரே இருந்தது.

கோவில் கடையில் இரண்டு பொட்டலம் புளியோதரை வாங்கினார். மகிழமரத்தைச் சுற்றிச் சிதிலமடைந்திருந்த சுவரின் மேல் அமர்ந்து சுவாமியும் அவனும் உணவு அருந்தினர்.

அப்போது ஒரு மத்திய வயது மாது ஒருவர் வந்தார். சுவாமியின் திருவடி பணிந்தெழுந்தார். கை கூப்பி நமஸ்கரித்தவாறே அம்மாது சுவாமியின் முன் நின்றார்.

சுவாமி தனது இரு கரங்களையும் உயர்த்தி அம்மாதை ஆசீர்வதித்தார். அம்மாதின் முகம் தேஜஸுடன் ஜொலித்தது.

“சாப்பிட்டீர்களா அம்மா”
சுவாமி வினவினார்.

“இரவு வீடு சென்றுதான் சமைத்து பசியாறவேண்டும் சுவாமி.”

அம்மாது புன்னகையோடு கூறினார். சுவாமி அந்த மாதரசிக்கு விடையளித்தார்.

அவரும் சுவாமியை மீண்டும் நமஸ்கரித்துச் சென்றார்.

“இம்மாதரசியின் கணவர் இவரைத் திருமணம் செய்த அதே நாளன்றே இறந்து போனார். அவரது அந்திமச் சடங்குகள் முடிந்த மறுநாளிலிருந்தே இம்மாதரசி தினமும் அதிகாலையில் கோவிலுக்கு வந்துவிடுவார்.

கோவிலின் எல்லா பிரகாரங்களிலும் சஞ்சாரம் செய்வார். எவரிடமும் பேசமாட்டார். எப்பொழுதும் அருணாச்சல சிவ, அருணாச்சல சிவ என்று என் தந்தையின் நாமத்தை உச்சரித்தவாறே இருப்பார்.

இரவில் வீடு சென்று எளிமையான உணவு சமைத்து உண்பார். மீண்டும் மறுநாள் காலையில் கோவில் வந்துவிடுவார்.

என் தந்தை இம்மாதரசியுடன் எப்பொழுதும் இருக்கின்றார்.”

சுவாமி அந்த அம்மையின் கதையைக் கூறக் கேட்ட அவனின் உள்ளம் தன் கவலையை மறந்தது. மானுட வாழ்வைப் பார்க்க வைத்தது.

வழி தெரியாது தவித்த அவனுக்கு இப்போது காணும் இடமெல்லாம் ஒளி வெள்ளம் சூழ்ந்த பாதையாகத் தெரிந்தது.

அவனின் மனமும் நாவும் யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் என இசைத்துக் கொண்டிருக்க ஆரம்பித்தது.

சுவாமி ஆனந்தம் பொங்கச் சிரித்தார். அந்தப் பேரானந்தம் அவனையும் பற்றிக் கொண்டது.

இன்று அவன் நன்கு இருக்கின்றான். சுவாமியை மறவாது இருக்கின்றான். வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

      - S. Parthasarathy