சிறகா/மஹா ரகசியம்

சொல் புதிது 31 வது இணைய கால கவியரங்கம்.
கவிதை வாசிப்பது சிறகா .

சிறியதும் பெரியதும் ஆன

பல மொழிகள் சார்ந்த ரகசியங்கள்

அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றாக கூடின

யாரும் அறியாமல் ரகசியத்தை ரகசியமாக

எப்படி பாதுகாப்பது என்று ஆராய்ந்த ன

ஒரு உறுதியான முடிவை

எடுத்தே தீருவது என்று

கண்காணிக்கும் கண்களில் இருந்து

தப்பிக்கும் வழி தேடியபடி

பல்வேறு மாறுபட்ட ஆலோசனைகளும்

கருத்து ஆய்வுகளும் பேசி விவாதிக்கையில்

காலம் மெதுவாக கரைந்தபடி இருக்க

இறுதியாக

ஒரு முடிவிற்கு வந்தன

இயன்ற வரையிலும் அதி கவனத்துடன்

ரகசியத்தை பாதுகாப்பான வழிகளில்

பத்திரப் படுத்துவது

அக்கறை இல்லாதது போன்ற செயல்களால்

கவனத்தை திசை திருப்புவது

அவசியமெனில் பொய் சொல்வது

பேச்சு அல்லது செயல்களின் மூலம்

ஒளித்து வைப்பது

இப்படி பல வழிகளில் மறைமுகமாக

பயிற்சி கொடுப்பதன் மூலம்

இரகசியங்களை பேணிக் காப்பதனால்

ஆரோக்கிய வளர்ச்சிகள் மற்றும்

மீட்கபடாத அழிவுகளும் உண்டு

இருப்பினும்

ரகசியத் தின் ரகசியம் அறியப் படாமல் வைக்கப்படுவது

மிகவும் அத்தியாவசியமானது என

மஹா ரகசியத்தை கண்டறிந்த தன் மூலம்

திருப்தியாக ஒன்றுடன் ஒன்று கை குலுக்கி

விடை பெற்று ரகசியமாக கலைந்து சென்றன.