நாகேந்திர பாரதி/கோழிக் குஞ்சுகள்

இணைய காலக் கவிதை – 19/11/23

தவுட்டுப் பானைக்குள்
நாங்கள்
தவழ்ந்து வந்த நாள்

உன்
இறக்கைச் சூட்டில்
இளகிய ஓட்டை
உடைத்து வந்த நாள்

இரவுக்குள்
உன் சிறகுக்குள்
நாங்கள் மூக்கை மட்டும் நீட்டி
முழித்து முழித்துத் தூங்குவதை
நீ
தூங்காமல் ரசித்திருப்பாய்

நீ
‘கெக்கே ‘ கெக்கே ‘ என்றால்
உணவுண்ண அழைப்பு
‘கேக்கேக் ‘ ‘கேக்கேக் ‘ என்றால்
பகையென்ற எச்சரிக்கை

உன்
கால்களின்
வேகக் கிண்டலில்
எங்கள்
விருந்து எழும்பி வரும்

நாங்கள்
பிட்டம் ஆட்டி ஓடி வருவதை
பெருமையுடன் பார்ப்பாய்

நாங்களும்
எங்கள் பிஞ்சுக் கால்களால்
‘விறுவிறு ‘ என்றால்
விருந்து மறைந்து போகும்

நீ
கொத்திக் கொடுப்பாய்
நாங்கள்
கத்திச் சிரிப்போம்

அந்தக்
கழுகின் நிழலுக்கோ
உன் இறக்கை விரியும்
கால்கள் எழும்பும்
கழுத்து உயரும்

இப்படி எங்களை
பொத்திப் பொத்தி வளர்த்தவளே

அது எப்படி ?
நாங்கள் வளர்ந்த பின்னாலே
எங்களைக்
கொத்தி கொத்தி விரட்டுகிறாய்

நாங்கள்
தனியாக வாழ்ந்து பார்க்க
தள்ளி வைக்கிறாயா

தாங்கவில்லை அம்மா ,
உன் இறகு மடிக்கு
இரவெல்லாம்
ஏங்குகிறோம்

—————————

One Comment on “நாகேந்திர பாரதி/கோழிக் குஞ்சுகள்”

Comments are closed.