
கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வின் 17/11/23 அன்று நடந்த 17 ஆவது மெய்நிகர் கூட்டத்தில் நான் வாசித்த 4 கவிதைகள் “வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்(1991 – 2023)” தொகுப்பிலிருந்து 4 கவிதைகள்
- சாட்சி
–
உள்ளங்களை உடைக்கும்
உயர்நீதி மன்றம்
சட்டத்தில் ஓட்டை தேடும்
கறுப்புக் கோட்டுகள்
விலங்கிட்டவனை நெட்டித் தள்ளி
தன் பொருளாதார பிரச்னைகளுக்கு வடிகால் தேடும்
காக்கிச் சட்டைகள்
உயர்ந்த உத்திரங்கள்
காரை உதிர்ந்த சுவர்கள்
அழுக்கேறிய பெஞ்சு
அதன் மேல் ‘க்ரேயானா’ல் சித்திரம் தீட்டும்
குழந்தை
அதை அணைத்தபடி
விறைத்த மார்புடன்
இல்லாத திடத்தை
இருப்பதாக காண்பிக்கும்
தாத்தா
“நானிருக்கிறேன்
விடுங்கள் கவலையை”
என அபயமளிக்கும்
கறுப்பு கொட்டொன்று
எதிரில் தலை குனிந்து நின்று
இமைகளை கொட்டி
பொங்கும் கண்ணீரை உள்ளடக்கும்
அந்த பெண்
எங்கு பார்த்திருக்கிறேன் அவளை…?
வாய்ஜாலம் காட்டுகிறது
கறுப்பு கோட்டு
“இங்கு ஆனால் என்ன விவாகரத்து?
இருக்கவே இருக்கிறது சுப்ரீம் கோர்ட்”
ஃபீஸ் வாங்கும் அவசரம் – தொனியில்
ஞாபகம் வந்து விட்டது
எங்கு பார்த்தேன் என்று
யாரோ கொடுத்த அழைப்பை ஏற்று
பன்னீர் தெளிக்கப் பட்டு
அடுத்த நாற்காலியுடன் உரத்த குரலில் அரசியல் பேசி
பழரசம் குடித்து
யாரோ கொடுத்த
தஞ்சாவூர் தட்டை பரிசுத் தாளில் சுற்றிக் கொடுத்து
குழம்பை குறை கூறி
பாயசம் ரசித்து
சாத்துக்குடி பை வாங்கி வந்த
ஒரு திருமணத்தில்
அம்மி மிதித்தவள் அவள்
- அதிர்ஷ்டம்
ஐந்தில்
சிறியவன் என்பதனால்
தம்பிக்கு சாக்பீஸை
இருபதில்
பெரியவன் என்பதனால்
கணவனுக்கு முதல் டிகாக்ஷனை
முப்பதில்
பெரியவள் என்பதால்
மாமியாரின் டிவி ஆசைக்காக
என்னுடைய ஃபிரிட்ஜ் தேவையை
நாற்பதில்
“பெரிய இடம்” என்பதால்
மகளுக்கு கல்வளையை
அறுபதில்
சிறியவள் என்பதனால்
பேத்திக்கு கேட்பரீஸை
இப்படி
விட்டுக் கொடுத்த
நான்
ஏன் சரியான சமயத்தில்
சிறியவளாகவோ பெரியவளாகவோ இருப்பதில்லை?
- எண்ணம்
வீட்டின் எதிரே எதற்கோ தோண்டுகிறார்கள்
ஆணும் பெண்ணுமாக
சாலையோர வேப்பமரத்தில் தொங்கும் அழுக்குத் தூளிக்குள்
சதா அழும் சிறு மூட்டை
தூளியை ஆட்டிக் கொண்டே
மூக்குச் சளி ஒழுக
கற்களால் கோட்டை கட்டும் சிறுமி
கஞ்சி போட்ட என் புடவையின் மேல்
அவள் கிழிசல் பாவாடை பட்டுவிடாமல்
எச்சரிக்கையுடன் கடக்கையில்
அவளுடைய விரித்த கண்களை தவிர்க்கிறேன்
எண்ணுகிறேன் –
‘வீடு திரும்பியதும்
மிச்ச சோற்றையும் ‘பிரிஜ்‘ஜிலிருக்கும் குழம்பையும்
பீங்கான் தட்டில் போட்டு
கொடுக்க வேண்டும், பாவம்‘
எண்ணம் தந்த நிம்மதியுடன் எல்.கே.ஜி மகளுக்கு
பளபளக்கும் கேரியரில்
முட்டை கறியும்
ரஸம் சாதமும்
தயிரும்
ஆப்பிள் துண்டுகளும்
சாக்லேட்டும்
‘வைரஸ்‘ இல்லாத நீரும்
ஊட்டி விட்டு திரும்புகையில்
தூளியை காணோம்
சிறுமியின் சிதிலமாகிய கோட்டையும்
பழுப்புநிற ரேஷன் சோற்று பருக்கைகளும்
அதிகாலை ‘க்யூ‘வில் சில்லறை காசுக்கு
தண்ணி லாரிக்காரர் அருளிய
கார்ப்பரேஷன் நீருமாய்
வெறிச்சோடி கிடந்தது சாலை
- யான் பெற்ற துன்பம் இவ்வையகமும் பெற
ஆர். வத்ஸலா
பெரிதான கண்கள்
எடுப்பான நாசி
சிவந்த உதடுகள்
அலையலையாய் நீள் முடி
சிகப்புத் திட்டு படிந்த பள்ளி சீருடையில்
திடீரென மொட்டவிழ்ந்த மலராய் நிற்கும்
பேத்தியை கண்டு பிரமித்தாள் பாட்டி
நேற்று வரை தாயிடம் திட்டு வாங்கினால்
தன் மடியில் முகம் புதைக்கும்
அம்மொட்டின் மூச்சு முட்ட பாயும் அழுகையில்
கரையும் பாட்டி
அம்மலர் பால்
சட்டென்று ஒரு கணம் பொங்கி வடிந்த பொறாமையின்
வேரை அறியாமல்
தன்னையே வெறுத்து நின்றாள்-
மொட்டைத் தலையிலிருந்து வழுக்கிய
பதினாறு முதல் கட்டிப் பழகிய
காவிப் புடவையை
மறுபடியும் காதின் பின் பொருத்தியபடி
