துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்! (2).‘

.ஜெ.பாஸ்கரன்

அரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். பெருமாள் பிஸியாக இருந்ததால், பக்கத்திலேயே இருந்த சிவனைக் காணச் சென்றோம்!

காவிரியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற தலம் திருவானைக்காவல். வெளியிலிருந்து கருவறை வரை ஐந்து பிரகாரங்கள். ஐந்தாம் பிரகாரத்தில் தரை மட்டத்திற்கும் கீழே சுயம்புவான ஜம்புகேஸ்வரர் – எப்போதும் கசிந்துகொண்டிருக்கும் நீர்க் கசிவு இந்த தலத்தினைகப் பஞ்சபூதத் தலங்களுள்’நீர்’ தலமாக வழிபடக் காரணமாகிறது.

காவிரி வறண்டிருந்தாலும், ஜம்புகேஸ்வரனின் கருவறையில் நீர்க்கசிவு நிற்பதில்லை! வெண் நாவல் மரம் தலவிருட்சம். நான்காவது உட்பிரகாரத்தில் உள்ளது அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி. பூமிக்கு வந்த அம்பிகை, தான் வழிபட காவிரியிலிருந்து கொண்டுவந்த நீரில் பிடித்து வைத்த லிங்கம் ஜம்புலிங்கம் என்கிறது

தலபுராணம். நீண்ட, அழகிய பிரகாரங்கள் – இரண்டு புறமும் சிமெட்ரிகலாக வளைவுகள் போல அமைந்துள்ள தூண்களும், அவற்றின் சிற்ப வேலைப்பாடுகளும் கண்கொள்ளாக் காட்சி!

மூன்றுகால் முனிவர் சிலை, ஏகநாதர் சிலை, பிரமிக்க வைக்கும் கூந்தல் அலங்காரங்களுடன் மங்கைகள், சிறு குழந்தையை ஏந்திக்கொண்டிருக்கும் பெண் சிலை என கலையம்சமான தூண்கள்!

நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே சித்தரைப் போல நேரில் வந்து எழுப்பி, பணியாளர்களுக்குத் திருநீறை கூலியாகக் கொடுக்க, உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகத் தலவரலாறு கூறுகிறது.

மூன்றாவது பிரகாரம் வரையில் கோபுர வாசல் வழியாக கார், வேன்கள் செல்கின்றன. கடைகள், வீடுகள், மடங்கள், இத்யாதிகள் மூன்று பிரகாரங்களிலும் உள்ளன. ஶ்ரீரங்கம் போலவே ஒரு கோட்டையே கோயிலாக இருந்திருக்கிறது என்று தோன்றியது.

அதிகக் கும்பல் இல்லை பத்துப் பதினைந்து நிமிடம் காத்திருந்து, ஐந்தாறு பேர்களே நிற்கக் கூடிய அளவிலான சிறிய கருவறைக்குள், கசியும் நீரில் பளிச்செனக் காட்சி தரும் ஜலகண்டேஸ்வரர். நெய்தீப ஆராதனை பார்த்து, வெளியேறினோம்.

அம்மன் சன்னதி செல்லும் வழியில் பெரிய குருக்கள் கையில் தோசை, பொங்கல் பிரசாதம் சாப்பிட்டவாறு எதிரில் சென்று கொண்டிருந்தார். நான்காம் பிரகாரத்தின் கடைசியில் சின்ன குருக்கள், தட்டில் பிரசாதம் விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

நாங்கள் அருகில் செல்வதற்குள், பிரசாதம் தீர்ந்து விட்டது. நேரே இருந்த முருகனை வழிபட்டுத் திரும்பினேன். யாரோ என்னையே பார்த்துக் கொண்டிருப்பதாய் தோன்ற, பிரகாரத் திண்ணையில் ’அவர்’ உட்கார்ந்திருந்தார். ஈரம் காயாத வெள்ளை முடி, சிவந்த நிறம், இடுப்பில் ஒரு நாலு முழம் வேட்டி, அதை இறுக்கிக் கட்டிய துண்டு, முகத்தில் இரண்டு மூன்று நாளைய முள் தாடி, நெற்றி முழுதும் திருநீறு, தீர்க்கமான கண்கள், புன்னகை!

கையில் பாதி தோசையும், அதன் மேல் ஒரு கைப் பிடி பொங்கலும் இருந்தன. ஒரு வாய்ப் பொங்கலை வாயில் போட்டுக்கொண்டவர் என்னைப் பார்த்து பிரசாதத்தை நீட்டினார். ஒரு வேளை பிரசாதம் கிடைக்காத என் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்திருப்பாரோ?

யாரோ எவரோ என எண்ணி, ‘பரவாயில்லை, நீங்க சாப்பிடுங்க’ என்றேன். நீட்டிய கையை மடக்காமல், ‘வாங்கிக்கங்க. நான் எச்சில் பண்ணலை’ என்றார். ஒரு விநாடி, தயங்கினேன். சிரித்தபடியே ‘ம்..வாங்கிக்கங்க’ என்று அத்தனைப் பொங்கலையும் என் கையில் கொடுத்துவிட்டார். தோசை விள்ளலை என் மனைவியிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்:

“இவன் பிரசாதம் உள்ளூர்க்காரங்களுக்கே கிடைக்கறது அபூர்வம். ஒடனே குடுத்துறமாட்டான். அதுக்கு ஒரு கொடுப்பினை வேணும். அவள் (அகிலாண்டேஸ்வரி) அப்படி இல்லெ. கேட்டவுடன், கேட்டதுக்கு மேல அள்ளிக் குடுத்துடுவா. இது அவள் ஆள்கின்ற இடம். இவன் பிரசாதம் கிடைச்சாலே எல்லாம் இனிமே நல்லதே நடக்கும்!’ – சொல்லிக்கொண்டே எழுந்து போய்விட்டார்.

நல்ல நெய் மணக்கும் பொங்கல், தோசை உடனே வாயில் போட்டுக்கொண்டு அருகிலிருந்த குழாயில் கை அலம்பிக்கொள்ளப் போனோம். துண்டில் வாய் துடைத்தபடி எங்களைப் பார்த்து புன்னகை செய்தபடியே சென்று விட்டார் அவர்! அம்மன் சன்னதியில் சிறிது வரிசையில் நின்று, நகர்ந்து தரிசித்தோம்.

த்வாஜாவந்தியில் ‘அகிலாண்டேஸ்வரி…’ சந்தானம் மனதில் பாடிக்கொண்டிருந்தார் – ஆளுயர அம்மன், காதுகளிலும், மூக்கிலும், கழுத்திலும் மின்னும் ஆபரணங்கள், கிளிப்பச்சை நிறப் புடவையில் ஒய்யாரமாக நின்று அருள் கசிய ஆசி வழங்கியபடி இருந்தாள். கை நிறைய குங்குமம், மனம் நிறைய அமைதி – தூரத்தில் கைக் குங்குமத்தை தூணின் சிலை மேல் போட்டுவிட்டு, ‘சட்’ டென்று திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மறைந்துவிட்டார் அந்தப் பெரியவர்.

அவர் யாரென்று தெரியவில்லை. உள்ளூரில் நீண்ட காலமாக இருப்பவராக இருக்கலாம். சித்தர்களை நான் பார்த்ததில்லை – இப்படித்தான் இருப்பார்களோ என்று கூடத் தோன்றியது. வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

வெகுநேரம் அவரது நினைவுகள் என்னை ஆக்ரமித்திருந்தன.திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரப் பதிகம் – திருவானைக்காவல் ஈசனைப் பற்றி – மனதில் சுற்றி வந்தது.துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.வெளியில் வந்து இடது புறம் இருந்த ‘கோஷாலை’, வலது புறம் இருந்த சிறிய பூங்காவனத்தையும் பார்த்தபடி வெளியே வந்தோம்.

காலையில் ரம்யாஸில் டிபன், மதியம் கருமண்டபத்தில் மாமா வீட்டில் (திருச்சி தேசீயக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் (ஓய்வு), ஐயப்ப குருசாமி, என் அம்மாவின் அருமைத் தம்பி) அயனான லஞ்ச் முடித்து, ஐந்து மணிக்கு மதுரையிலிருந்து வரும் ‘தேஜஸ்’ விரைவு வண்டியில் அரைத் தூக்கத்தில் அமர்ந்தபடி, இரவு 9.15க்கு எழும்பூர் வந்து சேர்ந்தோம்!துலா ஸ்நானமும் ஆலய தரிசனமும் பரவசம் – பிரசாதம் கொடுத்த பெரியவர் லேசாகத் திறந்தது ஆத்ம தரிசனத்தின் நுழை வாயில்….

One Comment on “துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்! (2).‘”

Comments are closed.