பூவா தலையா!

ப.மதியழகன்

காற்று கைப்பிடித்து
இழுத்து வந்தது மழையை
ஈரக்காற்று நோட்டம் பார்த்தது
விதைகள் தன்னில் அழிந்தது
நாளை நீ மரமாவாய் என
மழை ஆறுதல் சொன்னதை
விதையால் நம்ப முடியவில்லை
அறையின் தாழிடப்படாத
கதவு வழியே
காற்று எட்டிப்பார்த்தது
வெளிச்சம் குறைந்ததால்
தெருவிளக்குகள் மஞ்சள் நிறத்தில்
மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தன
முன்பு காற்று ஊளையிட்டுச்
சென்றதை மறக்க முடியவில்லை
மேகம் தன்போக்கில்
போக முடியாது
காற்றின் கரம் பற்றித்தான்
பயணிக்கும்
வானம் நாணயத்தைச்
சுண்டிவிட்டு பூவாதலையா
போட்டுப் பார்த்தது
உத்தரவிட கடவுள் இல்லையேல்
இப்படித்தான் நடக்கும்
காற்று மெல்ல சலித்தது
மரம் மெல்ல அசைந்தது
இருளைக் கிழித்துக் கொண்டு
மழை கொட்டத் துவங்கியது
ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு
அலைபேசியை உயிர்ப்பித்த போதும்
சோ என்ற சப்தம்
அறை முழுவதும் வியாபித்து இருந்தது
சூல் கொண்ட மேகம்
பாரத்தை இறக்கி வைத்தபின்பு தான்
வானம் வெளிச்சம் காட்டியது!