மறுபடியும் பிறந்தவன்/நாகேந்திர பாரதி

இணைய காலக் கவி அரங்கம்

அன்று மட்டும்
அதிகம் அடம் பிடித்தாய்
இட்லிக்குப் பதில்
தோசை வேண்டும் என்றாய்
சட்டினிக்குப் பதில்
சாம்பார் வேண்டும் என்றாய்
உன் முதுகில் விழுந்த
என் விரல்கள் வலித்தன

வலுக்கட்டாயமாய்ப் பள்ளிக்கு
உன்னைத் தூக்கிச் சென்ற போது
என் கழுத்தைச் சுற்றிய
உன் கைகளை நீ விடவேயில்லை
வேனை விட்டு இறங்கிய போது
என் விரல்களை இறுகப் பற்றினாய்
நான் விடுவித்துக் கொண்டேன்
பள்ளிக்குள் நுழையும்போது
என்னைத் திரும்பிப் பார்த்துச் சென்றாய்

உன் நினைவு வழிய வழிய
நான் வீட்டுக்குத் திரும்பியபோது
பள்ளியில் தீப்பிடித்து எரிந்த சேதி
என் நெஞ்சத்தில் நெருப்பாகப் பாய்ந்தபோது
அந்த நெருப்பு வளையத்தில்
உன்னைத் தேடிய போது

உன்னை உயிரோடு கண்டபோது
‘அப்பா’ என்று நீ கட்டிக் கொண்டபோது
உன் கைகளை நான் விடவேயில்லை
உன் விரல்களை இறுகப் பற்றிக் கொண்டேன்
உன்னைப் பார்த்துப் பார்த்து
வீட்டுக்கு அழைத்து வந்தேன்

இப்போது வீட்டில்
எப்போதும் தோசையும் சாம்பாரும்தான்
என் விரல்களும் தான்
உன் முதுகைத் தடவ மட்டும் தான்

——————————–