ஷைலஜா/திருவரங்கம்


மண்ணில் ஒளிரும் மகிழரங்கம்
மாந்தர்போற்றும் மாதவரங்கம்
கண்ணில் தெரியும் ஒரு சுவர்க்கம்-அது
காவிரி பாயும் திருவரங்கம்!

அண்ணல் ராமனின் கம்பன் காவியம்
அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
பண்ணிய புண்ணியத்தாலே-நாம்
எண்ணி மகிழும் அணியரங்கம்!

விண்ணளாவிய ராஜகோபுரம்
வெண்முகில்வருடும் பொன் கலசம்
பன்னிரண்டு ஆழ்வார்கள்-பாடி
அண்ணலைத்துதித்த நல்லரங்கம்!

அணியார் பொழில் சூழ் எழிலரங்கம்
அண்டர்கோன் அமரும் பூவரங்கம்
தண் துழாய் மாலைசூடித்தந்த-கோதை
கண்டு கரம்பிடித்த களியரங்கம்!