எஸ்.எல். நாணு/அபயம்

வணக்கம் அன்பர்களே.. இப்ப நான் “அபயம்” அப்படின்கற என் சிறுகதையை பதிவு பண்ணறேன். இதைப் படிச்சிட்டு உங்க ரியாக்‌ஷனை (அதான் திட்டறது / கல்லடி இத்யாதிகள்) ஆவலோடு வரவேற்கிறேன்.
அபயம்
“மாமி.. வாழக்காயை கொஞ்சம் பொடிசாவே நறுக்குங்கோ.. பெரிய துண்டம் துண்டமா நறுக்கினா இங்க யாருக்கும் பிடிக்காது”
“சரி மாமி”
“அப்புறம் ரெண்டு வாழக்கா வட்டம் ஹோமத்துக்கு வெந்து வெச்சிருங்கோ.. மறந்துராதேங்கோ”
“வெச்சுடறேன்”
சமையல்கார மாமிக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டே கூடத்துக்கு வந்தாள் அபயம்.
மருமகள் சாந்தி வீட்டைப் பெருக்கித் துடைத்து குளிக்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
“சாந்திம்மா.. குளிச்சிட்டு மடியா உலர்த்தியிருக்கிற புடவையைக் கட்டிக்கோ.. பழக்க தோழத்துல நைட்டியை மாட்டிண்டுரப் போறே..”
“இல்லைம்மா.. மடித் துணி தான்“
சொல்லிவிட்டு சாந்தி குளியலறைக்குள் நுழைந்தாள்.
அபயம் சுற்று முற்றும் பார்த்து..
“அடேய் சீனு.. எங்கடா போயிட்டே? கூடத்தை சுத்தம் பண்ணியாச்சு. ஹோம குண்டத்தைக் கொண்டு வந்து வெக்கலாம். அப்படியே தோட்டக்கார தாத்தா கொண்டுவந்த மணல் வாசல்ல இருக்கு. அதையும் ஹோம குண்டம் பக்கத்துல எடுத்து வெச்சுரு.”
“சரிம்மா..”
சீனு உள்ளிருந்து குரல் கொடுத்தான்.
“சிராய்.. வராட்டியும் எடுத்து வெச்சுரு”
“சரிம்மா”
“அப்படியே பரண்லேர்ந்து மனை எடுத்துரு.. அஞ்சு போறும்”
“சரிம்மா”
”துளசி வாங்கியிருக்கியா? சிராத்த காரியத்துக்கு நம்மாத்துச் செடிலேர்ந்து துளசி பறிக்கக் கூடாது. கடைலேர்ந்து தான் வாங்கணும்”
“நேத்தே வாங்கிட்டேம்மா”
அப்படியே வராண்டாவை எட்டிப் பார்த்தாள் அபயம்.
அங்கே அவள் கணவர் சிவராமன் டைம்ஸ் ஆப் இந்தியாவில் மூழ்கியிருந்தார்.
“ஏன்னா.. இன்னிக்குக் கூடவா அந்த பேப்பரை நெட்ரு பண்ணிண்டு உட்கார்ந்திருக்கணும்?”
சிவராமன் நிமிர்ந்து மூக்குக்கண்ணாடி வழியாக அவளைப் பார்த்து..
“இப்ப என்ன பண்ணணுங்கறே?”
அபயத்துக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“என்ன பண்ணணுமா? எவ்வளவு வேலை கிடக்கு.. மொதல்ல சாஸ்த்ரிகளுக்கு போன் பண்ணி பிராமணா இன்னும் எண்ணை சீயக்காய் வாங்கிக்க வரலைன்னு சொல்லுங்கோ. அப்புறம் அவர் எத்தனை மணிக்கு வரார்னு கேளுங்கோ.. போன தடவை மாதிரி இன்னொரு காரியம் இருந்தது.. முடிச்சிட்டு வர லேட்டாயிருத்துன்னு பன்னெண்டு மணிக்கு வந்து சிராத்தம் ஆரம்பிச்சா.. ரொம்ப லேட்டாயிரும்.. பித்ருக்கள் பசியோட காத்திண்டிருப்பா.. உங்களுக்கும் பசி தாங்காது”
”சரி.. டென்ஷனாகாதே.. உடனே போன் பண்ணறேன்”
“சாஸ்த்ரிகள் வந்து மொதல்ல புண்ணியாகவசனம் பண்ணணும்னு ஞாபகப்படுத்தணும்.. ஆத்துல எல்லாம் தொட்டும் தொடாமலும் மங்களகரமா இருக்கு..”
என்றதும் ஞாபகம் வந்தவளாக உள்ளே பார்த்து..
”டேய் சீனு ஒரு கொத்து மாவிலை பறிச்சு வை.. புண்யாகவசனத்துக்கு வேணும்”
சிவராமன் அபயத்தைக் கெஞ்சலாகப் பார்த்து..
“எல்லாம் சரி.. இப்ப ஒரு வாய் காப்பி கிடைக்குமா?”
“எல்லாம் தரேன்.. செத்த இருங்கோ.. அடுப்பு ஒழிய வேண்டாமா?”
என்று சமையலறையை நோக்கி நடந்துக் கொண்டே..
“மாமி.. அடுப்பைக் கொஞ்சம் சின்னதாக்குங்கோ.. ஏதோ தீயற வாசனை வரதே”
சிவராமன் சிரித்துக் கொண்டார்.
வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அபயத்துக்கு ஒரே பரபரப்பு தான். அதுவும் சிராத்த காரியம் என்றால் கேட்கவே வேண்டாம். இரண்டு நாட்களுக்கு முன்னாலிருந்தே ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்து விடுவாள்.
சிராத்த காரியத்துக்காகவே தனியாக வைத்திருக்கும் பித்தளை பாத்திரங்களையும் கிண்ணங்களையும் தாம்பாளங்களையும் சாதம் வடிக்க வெண்கல பானையையும் பரணிலிருந்து இறக்கச் சொல்லி அதை புளி போட்டு தேய்த்து பளிச்சென்று வைத்திருப்பாள்.
சமையலுக்குத் தேவையான மளிகை சாமான்களை லிஸ்ட் போட்டு பாண்டியன் கடைக்கு அனுப்பிவிடுவாள். அதுவும் எல்லாமே அளவாக..
”எதுக்கு இப்படிக் கணக்கு பார்த்து லிஸ்ட் போடறே? தாராளமாத் தான் போடேன்.. கொஞ்சம் கூட இருந்தா அப்புறமா சமையலுக்கு உபயோகப் படுத்திக்கறது”
சிவராமன் ஒரு முறை சிரித்துக் கொண்டே கேட்டார்.
“என்ன பேசறேள்? சிராத்தத்துக்கு உபயோகிச்ச மளிகை சாமான்களை நித்ய சமையலுக்கு உபயோகப் படுத்தக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?”
அது ஏன் என்று சிவராமனுக்கு இன்று வரை புரியவில்லை. கேட்கவும் துணிவில்லை.
இத்தனை சூப்பர் மார்கெட்டுகள் வந்தாலும் பாண்டியன் கடையிலிருந்து மளிகை சாமான்கள் வாங்குவதில் தான் அபயத்துக்கு திருப்தி. கடைப் பையன் சாமான்கள் கொண்டு வந்ததும் அதை லிஸ்டுடன் சரிபார்த்து.. வேறு யாராவது சரி பார்த்தால் அபயம் ஒப்புக் கொள்ள மாட்டாள்.. அவளும் ஒரு முறை சரி பார்க்க வேண்டும். பிறகு அந்த சாமான்களையெல்லாம் ஒரு பையில் போட்டு சமையலறையில் தனியாக எடுத்து வைப்பாள்.
வறுத்த ரவையுடன் சக்கரையை மிக்ஸியில் அரைத்து ரவாலாடு பிடிக்க மாவு தயாராக வைத்திருப்பாள்.
காய்கறி கடை கோமதியிடம் முந்தின நாள் காலையிலேயே கறிகாய் லிஸ்ட் கொடுத்து விடுவாள்..
“மாங்கா பழுத்ததா கொடுக்காதே.. நல்ல காயா புளிப்பா இருக்கணும்.. நிறைய கருவேப்பிலை கொடுத்தனுப்பு.. இஞ்சியும் கொஞ்சம் நிறையவே கொடு.. அப்புறம் திராட்சைல ஒண்ணு கூட புளிக்கக் கூடாது.. சொல்லிட்டேன். இது சீசன் தானே.. மார்கெட்டுலேர்ந்து பலா சொளை வாங்கிண்டு வா.. கொஞ்சம் தாராளமாவே வாங்கு.. பித்ருக்களுக்குப் போட முக்கனில அது தான் பிரதானம்.. அதோட சாந்திக்கு பலாப்பழம்னா ரொம்பப் பிடிக்கும்..”
அபயத்தின் தொடர் உத்தரவுகளில் குழம்பிப் போய் எதுவும் புரியாமல் கோமதி திரு திருவென்று முழிப்பாள்..
வீட்டிலிருக்கும் திரைச்சீலைகளையெல்லாம் கழட்டச் சொல்லி விடுவாள் அபயம்..
“எல்லாம் தீட்டு.. சிராத்த காரியத்தும்போது மேல பட்டுரப் போறது.. அதோட இதை சாக்கிட்டாவது அதையெல்லாம் கழட்டி துவைக்கலாமே”
வீட்டில் இதற்கு யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்.
இவ்வளவு ஏன்.. இருக்கும் எல்லா மிதியடிகளையும் கூட அலசி காயப் போட்டு விடுவாள்.
“பித்ருக்களுக்கு காரியம் பண்ணும் போது முடிஞ்ச வரை சுத்தமா இருக்கணும்.. நம்மை மீறி நமக்குத் தெரியாம ஏதாவது அபசாரம் நடந்தா நம்மால ஒண்ணும் பண்ண முடியாது தான்.. ஆனா தெரிஞ்சே தப்பு நடக்கக் கூடாது”
சமையலுக்கு மாமி வருவது இந்த மூன்று வருடங்களாகத் தான். அதுவரை அபயம் தான் சமையலையும் கவனிப்பாள். யாரையும் பக்கத்தில் சேர்க்க மாட்டாள்.
விடிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து மூணரை மணிக்கே எழுந்து பல் விளக்கி காய் நறுக்க ஆரம்பித்து விடுவாள்.
உடனே குளித்து வந்து பாலைக் காய்ச்சி காப்பி குடித்து சமையல் வேலையை ஆரம்பித்து விடுவாள். ஆறரை மணிக்கு மற்றவர்கள் எழுந்து வருவதற்குள் சமையல் வேலை முடிந்து பட்சணம் பண்ணும் படலம் ஆரம்பமாகிவிடும்.
இதற்கு நடுவில் எல்லோருக்கும் காப்பி கொடுக்கும் வைபவம் வேறு நடக்கும்.
சிவராமனின் குடும்பம் கொஞ்சம் பெரிசு..
சிராத்தம் என்றால் சிவராமனின் பெண் ஜானாவும் மாப்பிள்ளையும் குழந்தையுடன் வருவார்கள். சிவராமனின் அண்ணாவும் மன்னியும் சிவலோக பதவி அடைந்து சில வருடங்கள் ஆகி விட்டன. அவருடைய இரண்டு மகன்களும் குடும்பத்துடன் வருவார்கள்..
ஆக சிராத்த சமையலாக இருந்தாலும் விருந்து போல் கொஞ்சம் தாராளமாகவே பண்ண வேண்டும். ஆனால் அபயம் சளைக்க மாட்டாள்..
ஒம்பதரைக்கு சாஸ்த்ரிகள் வரும்போது எல்லாம் தயாராக இருக்கும்.
இவ்வளவு சீக்கிரமே சமையல் பண்ணினாலும் பிராமணாளுக்கு இலையில் பரிமாறும் போது எல்லாம் சுடச் சுடத் தான் இருக்கும்.. அதன் சூட்சுமம் என்ன என்று அபயத்தைத் தவிற வீட்டில் யாருக்கும் தெரியாது.
”இதப் பாருங்கோ.. எங்க மாமியாருக்கு மத்தவாளுக்கு அன்னமிடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். நீங்க நன்னா சாப்பிட்டாத் தான் அவாளுக்கு திருப்தியா இருக்கும்”
அபயம் சொல்வதைக் கேட்டு..
“நீங்க சொல்லவே வேண்டாம்.. சமையல் அவ்வளவு பிரமாதமா இருக்கு.. கேட்டு வாங்கி சாப்பிடறோம்”
பிராமணர்கள் சொல்வதோடு நிற்காமல் உண்மையிலேயே திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.. அதுவும் மோர்க் குழம்பும், மிளகு ரசமும், பால் பாயசமும்.. அபயம் கைப்பக்குவமே தனி தான். இவ்வளவுக்கும் பித்ரு காரியம் என்பதால் ருசி பார்க்காமல் சமைத்திருப்பாள்..
பிராமணர்கள் சாப்பிட்டு முடித்து பால்கனி திண்டில் வழக்கமாக காக்கைக்கு சோறு வைக்கும் இடத்தில் சிவராமன் பிண்டம் வைக்கும் போது உடனே காக்காய் வந்து பிண்டத்தைக் கொத்தி விடும். இது ஒவ்வொரு சிராத்தத்தின் போதும் கட்டாயமாக நடக்கும்.
ஒரு முறை மழை காரணமாக காக்காய் வராமல் போகவே அன்று மதியம் வரை அபயமும் எதுவும் சாப்பிடவில்லை. வீட்டில் எல்லோரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அபயம் கேட்கவில்லை..
“பித்ருக்கள் சாப்பிடாத போது.. நான் மட்டும் எப்படிச் சாப்பிட முடியும்?”
இதுபோல விஷயங்களில் அபயத்தின் பிடிவாதம் வீட்டில் எல்லோருக்கும் தெரியும்.
இறுதியில் சிவராமன் கொஞ்சம் சலிப்போடு..
“இதப் பாரு அபயம்.. இன்னிக்கு நீ சாப்பிடாம இருக்கறது கொஞ்சம் கூட நன்னாயில்லை.. இப்படித்தான் அம்மாவோட பிரசாதத்தை வேண்டாம்னு ஒதுக்கித் தள்ளி அம்மாவை அவமானப் படுத்துவியா?”
இதைக் கேட்டவுடன் அபயத்துக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது..
“என்ன சொல்றேள்? அம்மாவை நான் அவமானப் படுத்தறதா? இப்படிச் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது? அம்மா எனக்கு தெய்வம்.. தெய்வத்தை நான் அவமானப்படுத்துவேனா?”
உடனே சாப்பிட உட்கார்ந்து விட்டாள்.
ஆனால் அபயத்துக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் போன பிறகு சமையலுக்கு மாமியை வரச் சொல்கிறார்கள். அபயத்துக்கு அதில் இஷ்டம் இல்லை தான்.. இருந்தாலும் எல்லோரும் வற்புருத்தவே மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டாள்.
மணி ஒன்பது..
“அப்பா”
நாற்காலியில் கண் மூடி சாய்ந்திருந்த சிவராமனை லேசாகத் தட்டி எழுப்பினான் சீனு.
“இப்ப பிராமணா வந்துருவா.. எல்லாம் எடுத்து வெச்சாச்சு.. சரியா இருக்கான்னு ஒரு தடவை பார்த்துட்டேள்னா..”
சிவராமன் சட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்து..
“நான் எதுக்குடா பார்க்கணும்? அதான் காலைலேர்ந்து அபயம் எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து எடுத்து வெக்கச் சொல்லிட்டாளே.. அவ சொல்லியாச்சு.. அது போதும்..”
அப்பாவையே பரிதாபமாகப் பார்த்தான் சீனு.. பின் மெதுவாக..
“அப்பா.. இன்னிக்கு அம்மாவுக்குத் தான் சிராத்தம்”
இதைக் கேட்டதும் சிவராமனின் கண்களில் அதிர்ச்சி..
“இல்லை.. அபயம் தான் இன்னிக்குக் காலைலேர்ந்து..”
முடிக்கமுடியாமல் அவர் குரல் உடைந்தது.. கண்களிலிருந்து நீர் வழிந்தது..
இரண்டு வருடங்களுக்கு முன்னால் அபயம் தெய்வமாகிவிட்டதை இன்னும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது நிதர்சனம்..

One Comment on “எஸ்.எல். நாணு/அபயம்”

Comments are closed.