எஸ்ஸார்சி/சின்னத்திரைக்குப்பின்னால்

இணையக் கால கவியரங்கம்

24/11/23

சின்னத்திரைக் கலைஞர்களை
யாராவது நினைத்துப்
பார்க்கிறார்களா?
அழுவதும் சிரிப்பதும்
அடுத்தவனோடு
படுத்துச்சுகிப்பதுமாய்
நடிப்பதுவும்
உன்னையும் என்னையும்
மகிழ்விக்கத்தான்
தனது சொந்த வாழ்க்கையைச்
சுட்டுச்சாம்பலாக்கி
அதில் கிடைக்கும்
காசுக்காய் தன்னையே
விற்றுக்கொள்கிறார்கள்
தம்மை ஊரே கொண்டாடுவதாய்
ஏமாந்து போகிறார்கள்
தலை நரைத்துப் பல்
விழுந்து கூனாகிக்
குறுகிக்
கண்ணீர் விடுகிறார்கள்
தன்னந் தனியாய்.
மேடைக் கலைஞர்களில்
ஆண் எப்படியோ
தப்பித்துப் போகிறான்
அதுதான் பார்க்கிறோம்
நடைமுறையில்.
பெண்கள் எதை இழந்தார்கள் என்பதை
அறியவே மாட்டார்கள்.
பளபளக்கும் ஆடை
வெளிச்ச வெள்ளம்
மயக்கும் இசை
சுற்றியும் ஆரவாரம்
கட்டுக் கட்டாய்ப்பணம்
உயரமான மேடை
உல்லாசமான வாழ்க்கை
காரும் பங்களாவும்
வேலைக்கு ஆட்கள் பலரும்
மானுடப்பிறப்பு மட்டுமே பூச்சியமாய்.