மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 164/அழகியசிங்கர்

காத்திரமான உப்பு

தேவசீமா

முதல் தோசை ஊற்றிக் கொண்டு
இருந்தேன். ஒன்றும் தோன்றவில்லை

இரண்டாவது தோசை ஊற்றிக் கொண்டு இருந்தேன்
ஒன்றும் தோன்றவில்லை

மூன்றாவது தோசை ஊற்றிக் கொண்டு இருந்தேன் ஒரு துரோகம்
லேசாய் ஓர்மையில்

நான்காவது தோசை ஊற்றிக் கொண்டு இருந்தேன் ஒரு நட்பு கண் இளக்கத் துவங்கிற்று

அய்ந்தாவது தோசை ஊற்றிக் கொண்டு இருந்தேன் நான் அனாதை
என்ற உணர்வு பக்கத்தில் நின்று கொண்டு இருந்தது

ஆறாவது தோசை ஊற்றிக் கொண்டு
இருந்தேன். சத்தமே இல்லாமல்
தோசை கரிப்பேரிக் கொண்டிருக்கிறது

ஏழாவது தோசை ஊற்றிக் கொண்டு
இருந்தேன். அவசரத்தில்
கரித்துணியால் முகம்
துடைக்கப்பட்டது
மகன் சாப்பிட்டு கொண்டு இருக்கிறான்.

நன்றி : பைன் என்பது குறியீடு அல்ல – தேவசீமா – தேநீர் பதிப்பகம், . 24/1 மசூதி பின் தெரு, சந்தைக் கோடியூர்,ஜோலார்பேட்டை. 635851
தொடர்புக்கு: 9080909600.