
இணைய காலக் கவியரங்கம்
துடைத்தெறியும் வேகத்தில் சீறி வரும்
துடிதுடித்துப் பனையெல்லாம் ஊறி வரும்
உடைப்பெடுத்து நீரெல்லாம் ஓடி வரும்
உருக்குலைந்த குடிசைகளை மூடி வரும்
சரிகின்ற குடிசைகளும் ஓரம் போகும்
சாய்கின்ற மண்சுவரும் சேறாய் மாறும்
எரிகின்ற வயிறெல்லாம் ஈரம் ஆகும்
இருக்கின்ற பொருளெல்லாம் தூரம் போகும்
மழைநீரில் வெடவெடக்கும் ஆடும் மாடும்
மயிர்க்காலில் குளிரெடுத்து வாடி ஓடும்
களையோடு சாய்ந்து வரும் நெற் கதிரும்
கலைகின்ற மணியாகி கரைந்து உதிரும்
இயற்கைக்குக் கோபமென்றால் இப்படியா
ஈரத்தால் இழுத்தடித்து ஒப்படியா
வயலுக்கும் வாழ்வுக்கும் வேதனையா
வானத்தால் வந்து விட்ட சோதனையா
வெயிலுக்கு விண்ணப்பம் விரைந்து வா
விழுகின்ற மழைநீரை விரட்டி வா
புயலுக்குத் தடுப்பாகிப் போக்கி வா
புண்ணுக்கு மருந்தாகி நீக்கி வா

ஆஹா 2015 வெள்ளம் கண் முன் பெருக்கெடுத்து ஓடுகிறது வெயில இன்னைக்கே வர சொல்லுங்கள் துணி காய வேண்டும்