மதுவந்தி/அவனும் அவளும் கடலும்

இன்று இணைய கால கவியரங்கில் 25.11.23,நான் வாசித்த கவிதை கீழே.
( கவிதைக்குள் கவிதை என செய்த முயற்சி. உள்ளே ஆறு சிறு கவிதைகளை தனியே வாசிக்கலாம். அவைகள் இல்லாமல் தனியே வாசிக்கலாம். )

அவன் –அறிவுஜீவி.
மூளையால்
உலகை
அளக்கிறவன்.
அவள் –
உணர்வுகளின் உருவகம்.
உள்ளத்தால் உலகைப்பார்க்கிறவள்.

அவனும் அவளும்
அலுக்காமல் கரை
தொட்டுப் போகிற
அலைகளைப் பார்த்தபடி
அமர்ந்திருந்தனர்.
கேட்டாள் அவள்.
கடலைப் பார்த்தவுடனேயே
கவிதை பொங்குமே
சொல் ஒன்று இப்போது.

“சுமை தாங்காமல்
புலம்புகிற பூமித்தாயை
ஆறுதல் சொல்லி
தடவிக் கொடுத்தன
அலைக் குழந்தைகள்”

கவிதை இன்னொன்று சொல்லென்றாள்.
“பதிலொன்றும் சொல்லாமல்
கருத்து எதுவும் உதிர்க்காமல்
மௌனமாய்கரை இருக்க
எதிர்விளைவு ஏதுமின்றியும்
மீண்டும் மீண்டும்
பேசியபடி இருந்தது
கடல்”

சொல் மற்றொரு கவிதை என்றாள்.

“போகிறபோக்கில்
இரைத்தவற்றையே
பொறுக்கி முடியவில்லை
இன்னும் உள்ளே
புதைந்திருப்பவை
நினைத்தால் பிரமிப்பு”

சொல்லேன் மேலும் ஒரு கவிதை
என்றாள்.
“கால் நனைக்கும்
கரையோரம் தான்
ஆரவாரம்
மலை முழுகும்
கடல் நடுவே
மகா மௌனம்”

இன்னுமொரு கவிதை சொல்லென்றாள்.

“ஏன் என்று தெரியாது
எதை என்று தெரியாது
அதுதான் என்று தெரியாது
ஆனாலும்
தேடல் தான் வாழ்வு
கடலலைகளுக்கு”

சொல்லிப் பாரேன் இன்னொன்று
என்றாள்.

“வளைந்து கொடுத்த
படகுககளுக்கு
அலைகளின் முதுகில்
சவாரி
எதிர்த்து நின்ற
பாறைகளுக்கு
விளாசலும் அறையும்”
இன்னுமொன்று சொல்லென்றாள்.

அவன் யோசித்தான்.
வான் பார்த்து பின்
மணல் வெறித்து
எதிரே பார்த்தான்.
கண்ணெதிரே விரிந்த
பிரம்மாண்டமாய் கடல்.
கைப்பிடி மணலாய்
சுருங்கிய அறிவு.
ஆயாசத்தில் சோர்ந்து
அவள் மடி சாய்ந்தான்.
கடல் இன்னும்
இரைந்து கொண்டிருந்தது.
அவள் இன்னும்
கேட்டுக் கொண்டிருந்தாள்.


.( ஆளுக்கொரு வானம் தொகுப்பிலிருந்து )

2 Comments on “மதுவந்தி/அவனும் அவளும் கடலும்”

  1. கவிதைக்குள் கவிதைகள் மிக மிக அருமை கடலைப்பற்றி எத்தனை நூதனமான பார்வைகள் பிரமாதம் மதுவந்தி சார்

Comments are closed.