மீ. விசுவநாதன் /”அண்ணா மலையைக் கைதொழுவோம்”

அண்ணா மலையைக் கைதொழுவோம் – அவர்
அருமை உணர்ந்து வலம்வருவோம்
விண்ணும் மண்ணும் நிறைந்திருக்கும் – அந்த
வித்தின் மூல பலமறிவோம் !
(அண்ணா மலையை)

எண்ணம் எல்லாம் சிவமெனவே – நம்பி
எல்லை இலானைத் தினம்பணிவோம்
திண்ணம் ஓர்நாள் அவரொளியில் – இந்த
தேசம் விழிக்கும் மனம்குளிர்வோம் !
(அண்ணா மலையை)

தீபம், ஜோதி, நெருப்பாக – கொடும்
தீமைக் கெதிராய் நிற்பவராம்
கோபம் கருணை இரண்டிற்கும் – சிவ
குணத்தின் பேரைப் பெற்றவராம் !
(அண்ணா மலையை)

உண்ணா திருக்கும் உயிர்களுக்கும் – சக்தி
உணவாய் இருக்கும் உயிரணுவாம்
பெண்ணாய் ஆணாய் அனைவருமாய் – கூடிப்
பெரிதாய் வாழும் குலமவனாம்!
(அண்ணா மலையை)

நன்மை தீமை வழியறிந்து – தூய
ஞான வழியில் நடப்பவராம்
மென்மைப் பெண்மைக் குணமுண்டாம் – அந்த
மேலோன் பெயர்அண் ணாமலையாம் !
(அண்ணா மலையை)

      (திருக்கார்த்திகைத் திருநாள்:26.11.2023)