நாகேந்திர பாரதி/பள்ளி கொள்ளும் பள்ளி

இணைய காலக் கவியரங்கம்

நாலு கட்டைச் சுவற்றுக்கு
நடுவே அந்தப் பள்ளி

உள்ளிருக்கும்
உடைந்த பெஞ்சுகட்கு
உத்தரவாதப் பாதுகாப்பாய்
சுவற்றுக் கதவில் தொங்கும்
பெரிய பூட்டு

மழையிலும் வெயிலிலும்
மரத்துக் கிடக்கும்
அந்த மரப் பெஞ்சுகள்

சுற்றியுள்ள வயற் பரப்புகளில்
கிராமத்து மக்களின்
வயிற்று வலிப் பரப்புகள்

அந்தச் சுத்தக் காற்றோடு
சேர்ந்தே சுத்தும் பாடங்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை
அங்கே சிந்துகின்ற
மழலைப் பேச்சுக்கு
தலையாட்டும் பனை மரங்கள்

சேர்ந்தே சிந்துகின்ற
மதிய உணவுப் பருக்கைக்கு
காத்துக் கிடக்கும்
காக்கைக் கூட்டம்

ஒன்பது மணிக்கு வரும்
ஒரே வாத்தியாருக்கு
ஊர் திரும்ப
ஒரு மணிக்கு
கடைசி பஸ்

மாலை வரை
மரப் பள்ளி கொள்ளும்
சின்னச் சாமிகளை
வெளியே விரட்டிப்
பூட்டும் பொறுப்பு
பூசாரிக்கு

அடுத்து அவர்
கோயில் சாமிகளையும்
உள்ளே வைத்துப்
பூட்ட வேண்டும்

மழை பெய்யாத
இந்த வருஷம்
எல்லா நாளும் பள்ளி
பரிசு வாத்தியாருக்கு

——————