சசிகலா விஸ்வநாதன்/எப்படியும் செய் .. எப்படியாவது அல்ல

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
செவ்வாய்க்கிழமை
மாலை மணி 5.15
இணைய கால கவியரங்கம்
கவிதையின் தலைப்பு

எட்டா லட்சியங்கள்!
விடாமல் கனவுகள்
தொடரும்;
அன்றாடம் எப்படியும் செய்து
முடிக்கும் முனையும் திட்டம்;
அது வேண்டுவதே!
தப்படி ஒவ்வொன்றையும்
தப்பாமல், தீவிரமாக
துடிப்புடன் வைக்கத்தான் வேண்டும்.
முயற்சி பலிதமாக,
பலவிதமாக முயலத்தான் வேண்டும்.
ஆனால்…
கவனம் வையுங்கள்!
எப்படியும் வெல்ல வேண்டும்…
என்ற ஆர்வம்;
எப்படியாவது வெல்ல வேண்டும்
எனும் வேட்கைக்கு
வித்திட்டு விடும்
அபாயம் உண்டு!
எத்தனை தலைகள்
தலைகுப்புற விழுந்துள்ளன…
நாம் அறிவோம்.‌ . அன்றோ?
இப்படி..அப்படி.என்று படிப்படியாய், தப்பு தப்பாக
வைக்கும் ஒவ்வொரு
அடியும் தப்படியாக
வைக்கும் தவறு செய்து;
படிப்படியாக
கீழ் இறங்கும்
இடுக்கண் உண்டு.
மதம் எனும் மலை ஏறி..‌
மாச்சரிய ஆழ் கடலில் அமிழ்ந்து
இருள் எனும் இனமான வெஞ்சுரத்தில்
தன்னைத்தானே
தொலைத்து விட்டு
தன் லட்சயத்திற்கே
அன்னியயமாகி
கர்ம அந்தகன்
எனும் இழிநிலையை அடைவீர்கள் அல்லவோ?


28-11-2023