மனநோய் உற்றோர்க்கு உய்வில்லையா?/சிவ.தீனநாதன்

(ஸ்ரீ ரமண விருந்து பாகம் 3 )

(மனநோயாளிகளை மஹான்கள் இவ்விதம் அலட்சியம் செய்திருக்கிறார்கள்.
இரக்கம் காட்டியதாகத் தெரியவில்லை, ஏன்?)

பகவான் பிறர் துன்பங்களுக்கு இரங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். சில சமயங்களில் அவர்களுக்காக இரக்கப்பட்டுத் தகுந்த யோசனைகளைக் கூறியும் உதவுவார்.
ஆனால், மனநோயுற்றவர்களிடம் பகவானின் போக்கு மர்மமாகவும், புரியாத புதிராகவும் இருந்திருக்கிறது. பைத்தியம் பிடித்தவர்களை பகவான் குணப்படுத்துவார் என்று சிலர் அவரிடம் அழைத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் விஷயத்தில் பகவான் அலட்சியப் போக்கு கொண்டவராகவே இருந்திருக்கிறார்.

இது ஏன்?

ஒருசமயம் ஒரு யூதப் (Jew) பெண்மணி ஜெர்மனி நாட்டில் நாஜிகளின் (Nazi) சித்திரவதைக்கு ஆளானவளாக, பைத்தியம் பிடித்தவள் ஆனாள். இவள் எப்படியோ திருவண்ணாமலையில் ஸ்ரீரமணாச்ரமத்திற்கு வந்து சேர்ந்தாள். அரை நிர்வாணமாக ஆஸ்ரமத்திற்கு முன் நின்று ஆவேசமாக மனம் போன போக்கில் கத்த ஆரம்பித்தாள். அவள் ஒரு கட்டுப் பாட்டுக்கும் அடங்கவில்லை. அவளது சேட்டை களைப் பகவான் அலட்சியம் செய்து மௌனமாக இருந்துவிட்டார்.
அவளைப் போலீசார் பிடித்துச் சென்றபின் அவளுக்கு என்னவாயிற்று என்று மட்டும் பகவான் விசாரித்தார். மற்றபடி பகவான் அவளிடம் இரக்கம் ஏதும்காட்டியதாகத் தெரியவில்லை.
மனநோயாளிகளை மஹான்கள் இவ்விதம் அலட்சியம் செய்திருக்கிறார்கள். ஏன்?
ஒருநாள் மனநோய் பிடித்த ஒரு பெண்மணி ஸ்ரீராமகிருஷ்ணரின் குடிலுக்கு முன் நின்று, தான் பரமஹம்சரை காதலிப்பதாகவும், அவரே தனது கணவர் என்றும் பலவாறு பிதற்றிக் கொண்டிருந் தாள். பரமஹம்ஸர் அலட்சியம் செய்தவராக, அவளை அடியார்களைக் கொண்டு விரட்டி விடும் படிச் செய்தார்.
தஞ்சை ஸ்ரீஜானகி மாதாவின் ஆசிரமத்திற்கு பைத்தியம் பிடித்த பெண்மணிகள் சிலர் வந்ததுண்டு. அப்போதெல்லாம் அன்னை அந்த மனநோய்க்காரர்களின் கண்ணில் படாமல் மறைந்து நின்று, ‘அவளுக்கு வேண்டியதைக் கொடுத்து அனுப்பி விடுங்கள்’ என்று சீடர்களுக்கு உத்தரவிடுவார்.
இவ்வாறு பகவான் ஸ்ரீ ரமணரைப் போலவே, பரமஹம்சரும், ஸ்ரீஅன்னையும் மனநோயாளி களிடம் இரக்கம் காட்டாமல் அவர்களைஅலட்சியப் படுத்தியிருப்பதை நாம் காண்கிறோம்.
இது ஏன் என்று நமக்குப் புரிவதில்லை. இது விடுவிக்க முடியாத ஒரு புதிராகும். மனநோயுற்றவர்கள் முற்பிறவிகளில் பெரும் பாவங்களைச் செய்தவர்களாகவும் அவற்றைப் போக்கிக் கொள்ள முடியாத ஒரு நிலையை அடைந்தவர்களாகவும் இருக்கலாமோ!
இவர்களின் கதி என்ன? இவர்களுக்கு உய்வே யில்லையா? எனின், அஞ்ஞானிகளாக மக்களுக்குத் தெரியாமல், மனநோயாளிகளுக்கு அந்தர்முகமாக மஹான்கள் உதவி செய்யத்தான் செய்வார்கள் என்று இதற்குச் சமாதானம் கூறுவதே பொருத்தமாகும்.
கருணைக் கடலான பரம்பொருள் யாரையும் கைவிட்டு விடுவதில்லை.