வீடு

புஷ்பால ஜெயக்குமார்

நான் அந்த சாலையில்

நடக்கத் துணிந்தேன்

என் எண்ணம் நிறைவேற 

அந்த வீட்டை

நெருங்கும்வரை காத்திருந்தேன்

வாசலில் நின்று பார்த்தபோது

ஒரு பழைய மேஜையின் காலும்

ஓரத்தில் நீர் நிரம்பிய பானையும்

என் கண்ணுக்குத் தெரிந்தது

சில்லென்ற தரையில்

அவளின் வெற்று பாதங்கள்

நடப்பதைப் பார்த்தேன்

இன்றுவரை அக்காட்சியை

ஒரு பொக்கிஷத்தைப் போல்

என் நெஞ்சினில் வைத்திருக்கிறேன்

இப்பொழுதும் நான்

அந்த தெருவிற்கு 

போய் வந்தபடி இருக்கிறேன்

இன்னும் அந்த வீடு

அங்கேயே இருக்கிறது

மாற்றத்தை நம்புவதால்

நான் பிழைத்தேனே ஒழிய

உண்மையில் நான் வாழ்வது 

எனது கற்பனையால் தான்