எம்.டி.முத்துக்குமாரசாமி/கவிதையில் வரும் ‘நான்கள்’ நானல்ல


—-
என்னுடைய கவிதைகளில் வரும் ‘நான்’ என்ற சொல் என்னுடைய சுயமல்ல; அது சிறுகதை, நாவல், நாடகம், போன்ற புனைவுகளில் வருவதைப் போன்ற புனைவே ஆகும். தமிழில் கவிதை எனப்படுவது பெரும்பாலும் subjective expression ஆகவும், கவிஞனின் ஆளுமையின் குரலாகவே, அப்படி மட்டுமே வாசிக்கப்படுகின்றன. அப்படியே பல கவிஞர்களும் எழுதக்கூடும். நான் வாசிக்கும்போதும் சரி, எழுதும்போதும் சரி ‘நான்’ நீ’ ஆகிய சொற்களை குறிப்பிட்ட கவிதையில் இயங்கும் புனைவாகவே எடுத்துக்கொள்கிறேன். இந்த உண்மை என் கவிதா நாடகங்களில் இன்னும் துலக்கமாகத் தெரியும் . மிகச் சிறந்த உதாரணங்களாக ‘மாத்ரி’, ‘அரவான்’ ‘முனகலோசை’ ஆகிய கவிதை நாடகங்களைச் சொல்லலாம் ; அவற்றின் புனைவு வெளிப்படையானது.

எனது வாழ்க்கையிலிருந்தும் நேரடி அனுபவத்திலிருந்தும் எடுத்தவற்றை நான் கவிதைகளில் பயன்படுத்தக்கூடும் அவை கச்சாப்பொருட்களே தவிர என் வாழ்க்கையை பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல. இதைக்கவனப்படுத்தவே என் நீள்கவிதைகளை தனி நபர் நாடகங்கள் என்றும் துணைத்தலைப்பிட்டு வகைமைப்படுத்துகிறேன். அவை நாடகங்களாக நிகழ்த்தப்படலாமென்பது அதிகப்படியான விபரமே தவிர அத்தியாவசியமானது அல்ல. அவற்றை கவிதைகளாக வாசிப்பதே நலம். அச் சொற்களின் நிகழ்த்துதன்மையினை (performative quality) அனுபவிக்க அதுவே நல்ல வழி.

‘நான். ‘நீ’ என்ற சொற்கள் எப்படி பல புனைவு அடுக்குகளைக் கொண்டிருக்கின்றனவோ அது போல பல வகைமைச் சொற்களையும் புனைவுகளகவே நான் கருதுகிறேன். கவிதை நாடகமாக இருக்கலாம், நாவல் நாடகமாக இருக்கலாம் கட்டுரைகள் கட்டுரைகள் போல இருக்கலாம். அதனால்தான் எனது ‘நிலவொளி எனும் இரகசியத் துணை’ நூலுக்கு ‘கட்டுரைகளும் கட்டுரைகள் போல சிலவும்’ எனத் துணைத்தலைப்பிட்டேன்.

‘நகரம்’, ‘நாட்டுப்புறம்’ போன்ற வகைமைச் சொற்களையும் ‘இன்னபிற’, ‘முதலியன’ போன்ற உதிரிகளை அடக்கும் சொற்களையும் நான் பல சமயங்களில் புனைவுகளில் ( கவிதைகளில்) அவற்றை தலைப்புகளின் கீழ்
குழப்பி விடுவதை விளையாட்டாகக் கொண்டிருக்கிறேன். இது வெறும் விளையாட்டா என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லை. For me, it is a way of performing avant-garde epistemological breaks.