மனுஷ்ய புத்திரன் கவிதை

மூடிய கதவை
பின்னால் இருந்து
யாரோ பிடித்துத் தள்ளுகிறார்கள்
கண்ணாடி ஜன்னல்களை
யாரோ அறைகிறார்கள்

அது காற்றின் நூறு கரங்கள்
‘ நான்தான் வந்திருக்கிறேன்
கதவைத் திற’ என உறுமுறுகிறது புயல்
இவ்வளவு அதிகாரமாக
யாரும் கேட்டதில்லை

மரங்கள் தலைவிரித்தாடுகின்றன
மண்ணைத் தொட
கிளைகள் தாழ்கின்றன
முறிந்தும் வீழ்கின்றன

தகரங்களிலானவை
காற்றின் தாண்டவத்தில்
காகிதம்போல கிழிபடுகின்றன

காற்று மழைநீரை
திறந்த சாளரங்களுக்குள்
வாரி இறைக்கிறது

கடலில் இருந்து
டினோஸர் கரை நோக்கி
எழுந்துவந்துகொண்டிருக்கிறது

நான் ஒரு சிறுவனைப்போல
பயப்படுகிறேன்
புயல்கள் வரும்போதெல்லாம்
நாம் சிறுசெடிகளாகிறோம்
சிறு இலைகளாகிறோம்

இந்தப் பின்னிரவில்
இது எதுவுமே தெரியாமல்
ஆழ்ந்து உறங்குகிறவர்கள்
ஒரு நீலக்கனவு காண்கிறார்கள்
கடலின் நீலம்

விடிகிறபோது
இந்த நகரம் கலைந்து கிடக்கும்
முறிந்த மரங்கள்
சாலையை மறித்துக் கிடக்கும்
சாலைகளை
உதிர்ந்த இலைகள் மூடியிருக்கும்

இந்தப் புயல் பற்றி
இன்னொன்றும் சொல்லவேண்டும்
நான் தனியாக இருப்பதை
இவ்வளவு கடுமையாக உணர்வது
இந்தப் புயலில்தான்

புயல் வீசிய இரவில்
யாரோ யாரையோ பிரிகிறார்கள்
யாரோ யாரையோ அடைகிறார்கள்

4.12.2023
அதிகாலை 4.09

One Comment on “மனுஷ்ய புத்திரன் கவிதை”

  1. புயல் பற்றிய கவிதை
    புல்லரிக்க வைக்கிறது 👏🏿👏🏿

    கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள்
    புயலுக்கு
    முன்னும் பின்னுமான காட்சிகளை
    அனுமானமாகச் சித்திரித்தாலும்
    அவ்வளம் உண்மைக்கு
    அருகிலேயே இருக்கின்றன 👏🏿👏🏿

    இந்தக் கவிதையைப் படித்ததும்
    இன்றைய இயற்கைச் சீற்றத்தை
    வீட்டை விட்டு
    வெளியே வந்து
    வாசலில் நின்று பார்த்த உணர்வு
    வருகிறது எனக்கு 👏🏿👏🏿

    கவிஞர் மனுஷ்யபுத்திரன் உண்மையில்
    கடலளவு சாதனைகள் செய்வார்
    கவிதை இலக்கியத்திற்கு👏🏿👏🏿

    மனுஷ்யபுத்திரன் வாழ்க 🙏🏿🙏🏿
    மலையளவு புகழுடன் வளர்க 🙏🏿🙏🏿
    -அணைக்குடி சு.சம்பத்
    தலைமை ஆசிரியர்
    அரசு மேல்நிலைப் பள்ளி
    பெரியபாளையம்-601102
    திருவள்ளூர் மாவட்டம்

Comments are closed.