எஸ் வி வேணுகோபாலன் /டிசம்பர் 3 மாற்று திறனாளிகள் தினம் ..

“எப்போ வெளியே விடுவாங்க?” என்று என்னைக் கேட்ட அந்த மனிதர் சராசரிக்கு மிகவும் குறைந்த உயரம் தான். இயக்க நிகழ்ச்சிகளில் அதிகம் பார்த்துப் பரிச்சயமாகி இருந்த முகம். 

“நீங்க இப்பவே புறப்படலாம் தோழர், போலீஸ்காரங்க கிட்ட பேசிறலாம்” என்ற என்னை உடனே தடுத்துவிட்டு,”எல்லோரையும் எப்போ விடுவாங்கன்னு தான் கேட்டேன் தோழர்… எல்லோரையும் அனுப்பும்போது போய்க்கிறேன், எங்க பகுதி தோழர்களோட” என்று சொன்னார் அவர். 

தோழர் வீராவோடு சேர்த்து 37 பேர் இந்த செப்டம்பர் 7 ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிரான மறியலில் பங்கேற்று இருந்தனர். சமூகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு நாடி மாற்று திறனாளிகள் நடத்தும் இயக்கங்களில் நூற்றுக் கணக்கில் பங்கேற்கும் தீரர்களைப் பார்க்கிறோம். சில நேரம் இந்தப் போராட்டங்களில் பங்கேற்கப் புறப்படுவோரை அந்தந்த ஊரில், ரயில்வே சந்திப்புகளில், பேருந்து நிலையங்களில் அரட்டியுருட்டி நிறுத்தி விடும் அதிகாரப் போக்கையும் பார்க்கிறோம். அதனையும் எதிர்கொண்டு தங்கள் இலக்கை அடைந்தே தீருவோம் என்று களங்களில் திரள்வதையும் காண்கிறோம்!

அண்மையில் மத்திய சென்னை மாற்று திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் தோழர் சுரேந்திரன் தன்னுடைய அன்புத் தாயாரைப் பறிகொடுத்த செய்தி வந்தபோது, மாலை நேரே நுங்கம்பாக்கம் இடுகாட்டிற்குச் சென்று மரியாதை செலுத்தப் போகையில் நல்ல மழை பிடித்துக் கொண்டது. அன்னையின் அடக்கத்திற்கான பணிகள் நடந்துகொண்டிருக்க சிரமத்தோடு ஓரிடத்தில் மண்மேட்டில் அமர்ந்திருந்த சுரேந்திரன், மழைக்கு இடம் கொடுத்துக் குழைந்து போயிருந்த மண் பாதையில் தடுமாறி நான் அவரை நெருங்கும்போது, இத்தனை சிரமத்தோடு வந்தீர்களே, நன்றி தோழா என்று கைகளில் கண்களைப் பொத்திக் கொண்டார். ஒரு மாநகரத்தில் இயக்க நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் வந்து போகும் உங்கள் கஷ்டங்களைப் பார்க்கையில் இதெல்லாம் சிரமமா என்று சொல்லவும், அருகே குழுமி இருந்த சங்கத்தின் தோழர்கள் சிலரது முகத்திலும் பெருமை ஒளிர்ந்ததைப் பார்க்க முடிந்தது. 

பல்வேறு விதங்களில் ஊனங்களைச் சுமக்கும் உடலும், அவற்றின் காரணமாகவே சந்திக்க நேரும் அவமதிப்புகள், வலி வேதனைகள், இழப்புகளைச் சுமக்கும் உள்ளமும் மீறித் எல்லோருக்குமான சமூகமாக இந்த வெளியைத் திருத்தி அமைக்கும் வேகமும் நம்பிக்கையும் முனைப்பும் ஆற்றலும் பொங்க எழும் பல்லாயிரக் கணக்கானோர் சமூகத்தின் பெருமைக்குரியவர்கள்!

உடலியல் ரீதியில் பிரச்சனைகள் உள்ளோருக்கு ஏதுவான மாற்றங்கள் பொது வெளியில் அலுவலகங்களின் படிக்கட்டுகள் உள்ளிட்டுச் செய்ய வேண்டியவை  நீண்ட காலக் கோரிக்கையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. ராஜ பார்வை படத்தில் டாக்சி ஓட்டுநர் இரண்டு ரூபாய் மீதிக்கு ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நகரும்போது கமல் பிடித்துக் கொள்வார், எப்படி டா கண்டுபிடிச்சே என்று கண் பார்வையற்ற கமலை ஒய் ஜி மகேந்திரன் கேட்க, ‘சிம்பிள்…ரெண்டு ரூபா நோட்ட விட ஒரு ரூபா நோட்டு சின்னது” என்பார். இப்போது ரூபாய் நோட்டுகள், நாணயங்களை பார்க்கையில் அந்த வசனம் பின்னிருந்து உறுத்திக் கொண்டிருக்கும் எனக்கு!  அதே படத்தில் கமல் தனது வீட்டில் நாற்காலி இடறிக் கீழே விழும்போது, அங்கிருந்த  இடமாற்றி விட்டதால் தான் அது நேர்ந்தது என்று மாதவி அறிந்து சங்கடப்படும் காட்சி சமூகத்திற்கு எத்தனையோ உணர்த்திவிடும். 

ஆனால், வருத்தப்பட வைக்கும் படங்களே அதிகம். பேரழகன் படத்தில் சூர்யாவின் ஊனத்தை வைத்து விவேக் செய்யும் காமெடியும், தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமை வைத்து சந்தானம் செய்யும் கூத்துகளும் இத்தகைய படங்களின் அடிப்படை கருத்தோட்டங்களுக்கு நேரெதிரானவை என்பது ஏன் இவற்றை உருவாக்குவோருக்குத் தோன்றுவதில்லை என்று எரிச்சல் ஏற்படும். பத்திரிகை துணுக்குகளில், மேடை நாடகங்களில், திரைப்படங்களில் காது கேளாமை போன்ற விஷயங்கள் தான் நகைச்சுவைக்கான வெடி மருந்து என்பது, யானைப் பார்த்த குருடர்களைப் போல் என்று எடுத்துக்காட்டு சொல்வது இன்ன பிற விஷயங்கள் கடுமையான கண்டனங்களுக்குப் பிறகு கொஞ்சம் குறைந்தது. 

பொதுவுடைமை இயக்க மூத்த தலைவராகத் திகழ்ந்த தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாத் அவர்களுக்குத் திக்கு வாய் பிரச்சனை இருந்தது. ஒரு முறை நிருபர் ஒருவர், ‘உங்களுக்கு வாய் எப்போதும் திக்குமா?’ என்று கேட்டு இருக்கிறார். அதற்கு இ எம் எஸ்,’இல்லை..பேசும் போது மட்டும் தான்’ என்று பதில் சொன்னாராம். தவறான கேள்வி கேட்டவர் நாணிப் போயிருப்பார். பல ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி இது என்றாலும் இன்னும் கூட சமூகம் தன்னை மேலுயர்த்திக் கொண்டு போக வேண்டியது நிறைய உண்டு.

“எங்களை மாற்று திறனாளிகள் என்று அழைக்க வேண்டாம்….அது எங்கள் பிரச்சனைகளை சமூகம் ஏற்கெனவே புரிந்து கொள்வதை இன்னும் குறைத்துப் போட்டுவிடும். ஊனமுற்றோர் என்றே விளிக்கலாம்…அதனால் ஒன்றும் நான் காயப்பட்டு விட மாட்டேன்” என்றார் கரிமெல்லா சுப்பிரமணியன். 

நவம்பர் 21, 2007 அன்று பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி மாத இதழின் ஆசிரியர் குழு கூட்டத்தில் உரையாற்ற அழைத்திருந்தோம், தி இந்து ஆங்கில நாளேட்டின் சீனியர் உதவி ஆசிரியரான அவரை!  அன்றைய நிகழ்வில் அவர் ஆற்றியிருந்த உரை, கலந்துரையாடலில் அவர் விளக்கிய அம்சங்கள் இவற்றைத் தொகுத்து பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி டிசம்பர் 2007 இதழில் இம்மாத விருந்தினர் பகுதியில் வெளியிட்டு இருந்தோம்.  கழிவிரக்கம், அனுதாபம், கருணை போன்ற சொல்லாடல்களைக் கடுமையாக நிராகரித்த உரை அது. சமூகம் ஏன் எல்லோரையும் சமமாகப் பாவிக்கப் பழகிக் கொள்ளக் கூடாது, எங்கள் ஊனத்தை மதித்து நாங்கள் அதிக சிரமமின்றி  வாழ்வதற்கான  குறைந்தபட்ச விஷயங்களைக் கூட ஏன் சமூக வெளி செய்துகொடுக்க மறுக்கிறது அல்லது அலட்சியப்படுத்துகிறது என்பது அவரது சூடான முக்கிய கேள்வி. 

இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்களது மாணவரான கரிமெல்லா, அற்புதமான இசைப் பாடகர். ஆனால், அவரது இளம் வயதில் சோதிடர் ஒருவர் பார்வையற்றவர்கள் கலைத்திறமையோடு வருவார்கள் என்று கணித்திருந்ததை அவர் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், குடும்பத்தில் போராடிச் சிறந்த கல்வி கற்று லண்டன் பொருளாதாரக் கல்வி நிலையத்தில் (லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்) சென்று உயர் கல்வி படித்துவிட்டு வந்தவர். பார்வையற்றோருக்கு உதவியாகப் பேசும் திறன் மிக்க (ஹெட் செட் பொருத்திக் கொண்டு கர்சரை நகர்த்தினால் கணினித் திரையில் இருப்பவற்றை அவரால் காதில் கேட்டு அறிந்து வாசிக்கவும், எழுதவும் முடியும்) கணினியை அது உருவாக்கப்பட்டு சந்தைக்கு வந்த புதிதில் நிறுவனத்தில் பேசித் தனக்காகத் தருவித்துக் கொண்ட முதல் மாணவர் என்றார். தி இந்து நாளேட்டில் உலக நாடுகள் பற்றிய முக்கிய தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகள் பங்களிப்பு செய்தவர்.

நேர் காணலில் அவர் குறிப்பிட்டிருந்த விஷயங்களில் முக்கியமானது, ஆட்சியாளர்களது அராஜக பக்கத்தைச் சுட்டிக் காட்டிய ஒரு செய்தி. ஊனமுற்றோர் அகில இந்திய அமைப்பின் தலைவராக இருக்கும் ஜாவேத் அபீதி சக்கர நாற்காலியில் தான் நடமாடிக் கொண்டிருப்பவர், கால்களில் ஊனம். தனது சங்க வேலைகள் மற்றும் சொந்தத் தேவைகளுக்காக எப்போதேனும் விமான நிலையம் சென்றால் அங்கே படிக்கட்டுகளில் ஏறுவது சிரமமாக உள்ளது, ஊழியர்கள் தூக்கிச் செல்வதைத் தவிர்க்க விரும்புகிறேன், எல்லா விமான நிலையங்களிலும் எந்திரத் தூக்கி (ஆம்புலிஃப்ட்) ஏன் நிறுவக்கூடாது என்று பொது நல வழக்கு தொடுத்திருந்தார் அவர். உச்ச நீதி மன்றத்தில் அது உடனே எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரசு வக்கீலாக (அட்டர்னி  ஜெனரல்) இருந்த சோலி சொராப்ஜி அது தேவையற்றது, யாரோ சிலருக்காக அனாவசிய செலவு என்றெல்லாம் வாதிட்டாராம்.  ஆனால், அது பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆம்புலிஃப்ட் நிறுவப்பட்ட போது, மும்பை மருத்துவமனைக்கு மூட்டு சிகிச்சைக்குச் செல்லப் பயன்படுத்தியவர்கள் இதே சோலி சோராப்ஜியும் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயியும் தான் என்று சொன்னார் கரிமெல்லா அவர்கள். அவரது நேர் காணலை வாசித்துவிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் தோழர் மைதிலி சிவராமன் அழைத்து வெகுவாகப் பாராட்டியது மறக்க முடியாதது. 

ங்களுடைய செல்ல மகள் எவ்லின் க்ளென்னிக்கு காது கேட்கவில்லை என்று மிக தாமதமாகக் கவனித்து எங்கெங்கோ அலைந்தும் சிகிச்சை கிடையாது என்று அவஸ்தைப் பட்ட நாட்களில் அந்த இளவயதிலேயே இசையைக் கூர்ந்து எப்படியோ ரசிக்கிறார் என்று கண்டுபிடித்தனர் பெற்றோர்.  பின்னாளில் அவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் லண்டனில் நிகழ்ந்தபோது, தொடக்க நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சியை க்ளென்னி நடத்தும்போது எத்தனை பெருமையை அவர்கள்  அடைந்திருப்பனர் என்பதை விளக்க முடியாது. க்ளென்னி, செவிப்புலன் வாய்க்காவிட்டாலும், தனது தோல் மூலம் அதிர்வுகளை உற்று அறிந்து பொருள்படுத்திக் கொள்ளும் அசாத்திய திறன் பெற்றிருந்ததால், இசைக்கருவிகளை இயக்கவும், சிறப்பான இசையை வாசிக்கவும், அடுத்தவருக்குப் பயிற்றுவித்துக் கச்சேரி நடத்துபவருமாக உயர்ந்தது ஆகப் பெரிய சாதனையாகக் கருதப்படுவது. இப்படியான பல்வேறு சாதனைகள் படைத்திருப்போர் பட்டியல் உள்ளபடியே பெரிதானது!

சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயிலில் பயணம் செய்வோர் துளசியின் புல்லாங்குழலிசை கேட்டுக் கிறுகிறுத்துப் போகாது இருக்க முடியாது, பார்வையற்ற அவரால், அறிமுகமான மனிதர்கள் குரலை உள்ளத்தில் பதிவு செய்துகொண்டு அடுத்தமுறை அழைக்கையில் பரவசமாகப் பெயர் சொல்லி அன்பு பாராட்டுபவர்! 

கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன் அவர்களுடைய சகோதரி (மறைந்த) பத்மா அவர்கள் பார்வையற்ற மாணவர்கள் பலர் பட்டப்படிப்பும், முனைவர் பட்டமும் பெற உதவியர். அவருடைய மூத்த சகோதரர் (மறைந்த) எஸ் எஸ் கண்ணன் அவர்களது கார்ல் மார்க்ஸ் நூலகத்தை மாற்றுத் திறனாளிகள் எண்ணற்றோர் பயன்படுத்தியதுண்டு. ஆராய்ச்சியாளர் வீரராகவன் உள்ளிட்ட எத்தனையோ பேருக்கு அவரது உன்னத அரவணைப்பு வாய்த்தது.

என் இணையர் ராஜியுடைய சித்தி மங்களம் கணேசன், கண் பார்வையற்ற மாணவர்கள் பலருக்கும் பாடநூல் வாசித்துக் காட்டுதல், தேர்வு எழுதி விட்டு வருதல் என்பதைப் பல்லாண்டுகளாகச் செய்து வருவதோடு, ஏராளமான நண்பர்களையும், உறவினர்களையும் இந்த உன்னதப் பணியில் ஈடுபடுத்தி வருபவர். அண்மையில் மத்திய அரசுப் பணி நியமனம் வாய்க்கப்பெற்ற இளைஞர் ஒருவர், இவரது உதவியினால் அது சாத்தியமாயிற்று என்று கொண்டாடினார். அம்பேத்கர் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கோவை கணேஷ் போட்டி தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள் இடையறாது செயல்படுத்தி வருவதில் அதன் பயனாளிகளில் கணிசமானோர் மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியே அறியப்படாத எத்தனையோ அருமையான மனிதர்கள் இத்தகைய வாய்ப்புகளை உருவாக்கித் தருவது சிறப்பான விஷயம்.

செப் 7 போராட்ட நாளன்று சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக் கூடத்தில் காவல் துறை பாதுகாப்பில் எங்களுடன் அர்ப்பணிப்போடு கலந்திருந்த அன்புத் தோழன் வீரா, அதே மாத இறுதியில் மாரடைப்பால் காலமான செய்தி வந்தபோது உள்ளம் பரிதவித்தது. சொல்லொணாத் துயரம் அது. ஆனால், அவரது தெறிப்புமிக்க பங்கேற்பின் உணர்வுகள் மாற்றத்திற்கான நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். 

ன்று காலை ஆவின் பால் பாக்கெட்டில் மாற்றுத் திறனாளிகள் தினம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. சிந்தனையில் மாற்றம், சமூகத்தின் ஏற்றம் என்ற வாசகம் அதிலிருந்தது.  

************