சென்னையில் பேய் மழை. இந்த நேரத்தில் இந்தப் பதிவை எழுதுவதுதான் சரி எனத் தோன்றுகிறது.
இதேபோல் 2015 மழையில் ஜெயலலிதாவைத் திட்டித் தீர்த்தார்கள். இது போன்ற பேரிடர் நேரங்களில், நம் போதாமை, முன்னெரிச்சரிக்கையாக இல்லாத தன்மை எல்லாவற்றையும் தாண்டி, அரசுடன் நிற்பதே சரியான வழி. திட்டுவதெல்லாம் மீட்புப் பணிகள் முடிந்த பின்னர். இப்போதும் என் நிலை அதுவே. இது போன்ற மழையில், சென்னை போன்ற நகரங்களில் மழையின் பாதிப்பு தவிர்க்க முடியாததே. ஆனால் ஜெயலலிதாவுக்கு செம்பரம்பாக்கத்தம்மன் என்று பெயரே கொடுத்தார்கள்.
அன்று ஜெயலலிதா செய்த தவறு என்ன? மழை நீர் வரத்தை அவர் பாஸிடிவாகப் பார்த்தார். வெதர் மேன் போன்றவர்கள் அன்று இல்லை என நினைக்கிறேன். அல்லது இத்தனை தீவிரமாக இல்லை. பெரிய மழை வரும்போது நீரை சேமிக்கலாம், அதை முன்னரே திறந்துவிட்டுப் பின்னர் மழை குறைவாக இருந்தால் என்ன செய்வது, சென்னைக்கு இந்த மழை நீரே ஆதாரம் என்று யோசித்துவிட்டார்கள். ஜெயலலிதா தீவிரமாக இறங்கிப் பணி செய்யாமல் இருந்தார். அல்லது தன் அதிகாரிகளை நம்பினார். இதனால் நிகழ்ந்த உயிர்ப் பாதிப்பு அவருக்குப் பெரிய அளவில் கெட்ட பெயரைக் கொண்டு வந்தது.
பல வீடுகளில் நீர் புகுந்தது. ஜெயலலிதாவின் ஆட்சி என்றால் ஊடகங்கள் ஓவர்டைம் செய்யும் என்பது நாம் அறிந்ததே. அத்தனையும் ஜெயலலிதாவுக்கு எதிராக நின்றன.
உண்மையில் அன்று பெய்தது வரலாறு காணாத மழை. அதற்கு முன்பும் பெருமழை பெய்து தீர்த்துவிட்டிருந்தது. அரசு கொஞ்சம் சுதாரித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக சமாளித்திருக்கலாம். ஆனாலும் பாதிப்பு இருந்திருக்கவே செய்யும். அந்த அளவுக்கு மழை. இன்றும் அப்படியே.
ஆனால் இந்த அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க பலர் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். நான் என் வீட்டுப் பக்கம் போய்ப் பார்த்தேன், ரோட்டில் சொட்டு நீர் இல்லை என்று போட எழுத்தாளர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாள்களில் மெல்ல எட்டிப் பார்ப்பார்கள்.
சென்னையில் மழைக்காலம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். அதிமுக ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது. மழை நின்று போய் பார்த்தால் சென்னையின் முக்கியச் சாலைகளில் 95% இடங்களில் சொட்டு நீர் கூட இருக்காது. ஆனால் சிறிய சாலைகளில் சென்று பார்த்தால் தெரியும், சென்னை எப்படி மிதக்கிறது என. எந்த சாலையை எந்த நேரத்தில் நாம் குறிப்பிட்டுச் சொல்லப் போகிறோம் என்பதில் இருக்கிறது அரசியல்.
இன்னொரு பிரச்சினையும் இதில் உண்டு. சென்ற மழையில் நீர் தேங்கி இருக்கும் இடத்தைச் சரி செய்திருப்பார்கள். அதை மட்டும் சொல்லி, இந்த அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்பார்கள். இது அதிமுக ஆட்சியிலும் இப்படித்தான். ஆனால் நீர் வேறொரு இடத்தில் தேங்கி நின்றுகொண்டிருக்கும்.
அதிமுகவைத் திட்டியவர்கள் இப்போது ‘இத்தனை பெரிய மழைக்கு என்ன செய்யமுடியும்’ என்பார்கள். அதிமுக அரசு என்ன செய்துவிட முடியும் என்று சொன்னவர்கள், இன்றைய அரசைத் திட்டிக் கொண்டிருப்பார்கள். அரசியல்வாதிகளும் இப்படியே. இத்தனை செலவு செய்தோம், ஒரு மணி நேரத்தில் நீர் வடிந்துவிடும் என்ற கதை கட்டல்களுக்கு மழை ஒரே அடியாகப் பதில் சொல்லிவிட்டது. அரங்கநாதன் சப்வேயில் நீர் நிற்கும் வீடியோவப் பார்த்துவிட்டுத்தான் இதை எழுதுகிறேன். பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இத்தனை கோடி செலவுக்குப் பிறகு இப்படியா என்று இந்நிலையில கேட்பது தவறு. ஆனால் எந்த ஆட்சியிலும் சென்னை இப்படித்தான் இருந்திருக்கிறது. எள்ளளவு கூட மாற்றமில்லை.
இந்தப் பிரச்சினையை முழுமையாக யார் தீர்க்கிறார்களோ அவர்கள்தான் நிஜமான திறமைசாலிகள். அதுவரை இப்படி மாறி மாறி அரசியல் செய்துகொண்டிருக்கவேண்டியதுதான்.

👏👏👌
True