மேலிருந்து கீழ்…. 

வாசுதேவன் ஸ்ரீதர் 

சென்னை 

ஜனவரி 12

அடுத்து  வரப்போகும் தொடர்-விடுமுறை நாட்களை  முன்னிட்டு  அந்த மன-நல மருத்துவரைக் காண்பதற்கு மருத்துவ மனையில் கூட்டம்  அதிகமாய் இருந்தது.  

மருத்துவர்  நல்ல அனுபவசாலி  என்றும் கைராசிக்காரர் என்றும்  சொல்லக் கேட்டதால்  வரிசையில்    தனக்கு முன்  பதினைந்து  நபர்கள் இருந்ததைக் கூடப்  பொருட்படுத்தாமல் அவரைக் காண தன் மகன் லக்ஷ்மணுடன் பொறுமையாகக்  காத்திருந்தார் சிவனேசன்.

லக்ஷ்மண். ….

சிவநேசன் பார்வதி  இருவரும் தவமிருந்து பெற்ற செல்ல மகன் .. சொத்துக்கு ஒரே ஆண் வாரிசு.

மன-நல மருத்துவரை ஆலோசிப்பது  அவரைப் பொறுத் தவரை  லக்ஷ்மணின் மனநோய் தீர்க்க அவர் கையாளும் மூன்றாவது யுத்தி.

முதலாவதாக  மனைவியின் ஆலோசனை பேரில் கோயில் கோயிலாக சென்று மனம்-ஒன்றிய  பிரார்த்தனைகள், அங்க  -பிரதக்ஷணங்கள்,  பரிகாரம் என்ற பெயரில் அன்ன,  வஸ்திர தானங்கள் இவற்றைக்  கடந்து இரண்டாவதாகப் பையனின் ஜாதக அமைப்பின் பேரில்   மாந்திரீக முறைப் படி,  மந்திரிப்பது, செய்வினையெடுப்பது,    என்ற முறைக்கு மாறி  பிரபல சாமியார் ஒருவரின்  சொல்லுக்குக் கட்டுப் பட்டு  பணமாகவும் நகையாகவும் செலவு செய்து,  பின் அதுவும்   பலன் இல்லாமல் போகவே  முயற்சியின் இறுதிச் சுற்றாக குடும்ப நண்பன் ஒருவன் ஆலோசனையின் பேரில் இந்த  மருத்துவரை நாடி  இப்போது வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்.

அந்த அறையைச் சுற்றி  மருத்துவரின் திறமையைப்  பாராட்டும் வகையில் ‘லாமினேட்’ செய்யப்பட்ட நம்  நாட்டு  மற்றும் பன்னாட்டு அரசாங்கத்திடம்  வெவ்வேறு தருணங்களில் மருத்துவத் துறையில் அவர் வாங்கிய பல் வேறு விருதுகள் அடங்கிய படங்கள்  மற்றும் சிறு வயதில் அவர் வாங்கிய வெற்றிக் கோப்பைகளும் கண்ணாடி அறையை அலங்கரிப்பதைக் கண்ட சிவநேசனின் மனதில் தன் மகனின் நோயைக் குணப் படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டது ..  அதே சமயம் அவரின்  எண்ணங்கள் சில வருடங்கள்  பின் நோக்கி நகர்ந்தன…..

லக்ஷ்மணுக்கு அப்போது சற்று நினைவு தெரியும் வயது … ஏழு ..

வெளியூரில் தன் உயிர்-சினேகிதன் ஒருவன்  மகளின் திருமணத்திற்கு ..தம்பதி சமேதராய்  வீட்டை விட்டுக் கிளம்பி விமான நிலையம் அடைந்த  சிவநேசன்  விமானத்தில் மூவரும் ஏறப் போகும் நேரத்தில் லக்ஷ்மண் ஏற  மறுத்து மயங்கி விழுந்ததால்  அப்  பயணத்தை ரத்து செய்தார்..அன்று பிடித்தது  அவர் வாழக்கையில் ஏழரைச் சனி..அன்றிலிருந்து  லக்ஷ்மணன்  போக்கு கொஞ்சம்  வித்தியாசமாய் மாறியது  …உயரமான எந்த இடத்திற்கும் வர மறுத்தான்….. உயர் கட்டிடங்களில் ஏற மறுத்தான்….  ..இவ்வளவு ஏன்? எட்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பு சென்றதால்  பள்ளிக் கட்டிடம் மாறி புதுக் கட்டிடத்தில் வகுப்பைத் தொடர வேண்டியவன் ..தன்னுடைய வகுப்பு அந்தக் கட்டிடத்தில் இரண்டாவது  தளத்தில்  இருப்பதால் பள்ளிக்குப்  போக  மறுத்துவிட்டான்.

இன்று அவனுக்கு வயது இருபது … பாம்பைக் கையில்  பிடிக்கும் பருவத்தில் உயரத்தைப் பார்த்துப் பயந்து மயங்கும் பிள்ளை ..  இந்த பிரச்சினைக்கு முடிவு தேடப்  போய்  முதல் இரண்டு யுத்திகளில் தோல்வியுற்று மனம் வெறுத்து  இப்போது மூன்றாவது யுத்தியாக  இந்த மருத்துவ மனையில் மருத்துவரைச் சந்திக்க வரிசையில் காத்திருக்கிறார் சிவநேசன்.

” டோக்கன் நம்பர் பதினாறு ” என்று  அந்த அறையின் மூலையில் நிறுத்தப் பட்டிருந்த  சின்ன திரையில்அறிவிப்புதோன்ற.சிவநேசன் லக்ஷ்மணுடன் 

மருத்துவரின் அறை உள்ளே சென்றார்.

ஆறடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாய் அமர்ந்திருந்தார் மருத்துவர் வீரராகவன்  ..வயது ஒரு ஐம்பது இருக்கும். கண்களுக்குமேல் தோன்றிய அடர்த்தியான நரைத்த புருவம்  தொழிலில் அவருக்கு உண்டான அனுபவத்தைப் பறை சாற்றியது.

“வணக்கம் டாக்டர்”

“வணக்கம் …..! சொல்லுங்க…”

” இவன் என்னோட பையன்  லக்ஷ்மண் … ரொம்ப புத்திசாலிப் பையன் .. ஏழு வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தான்..ஒரு நாள் வெளியூர் போக எல்லா ஏற்பாடு பண்ணினதுக்குப்புறம்  முதலில் ஃபிளைட்டில் ஏறத்   தயங்கி ..அதைத்  தொடர்ந்து பிடிவாதமாய்   ஏறவே  மறுத்தான் ..காரணம் கேட்டால் அவனுக்குசொல்லத்தெரியல….எந்தஉயரமானகட்டிடத்தை  பார்த்தாலும்

 உள்ளே வரத் தயங்கினான்

 … எதனாலங்கறது இன்றைக்கு வரைக்கும் எங்களுக்குப் புலப் படல.. அதுதான்.. “

” அப்படியா ?  சரி …நீங்கக் கொஞ்சம் வெளில இருங்க நான் இவரைப் பரீட்சை பண்ணிப் பார்த்துட்டு கூப்பிடறேன் .. “

“சரி டாக்டர்”

சிவநேசன் வெளியே  வந்து அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்தார்.  முகத்தில் சோகம் படர்ந்து இருந்தது.

சில நிமிடங்கள் கழித்து மருத்துவர் அவரை உள்ளே அழைத்தார்.

டாக்டர் , “உங்க பையனைப்  பரிட்சை பண்ணிப் பார்த்தேன் ..கவலைப் படறதுக்கு ஒண்ணும் இல்லை  ..குணப் படுத்திடலாம்….”

“அப்போ அவன் இப்போவே அட்மிட் பண்ணிடணுமா டாக்டர் ?”

“அவசரப் படாதீங்க …!  ஆமாம் ….உங்களுக்குச் சொந்த ஊர் எது?”

”  இதே ஊர்தான். …நான் பிறந்ததே இந்த ஊர்ல தான் டாக்டர் “

“அப்படியா ? உங்க பையன் பிறந்தது ?”

“அது …அது …..அப்போ  பிரசவத்துக்காக என்  மனைவி  அவங்க அம்மா வீட்டிற்குப் போய் இருந்தாங்க…ஆனா அதுக்கும் அவன் இப்போ நடந்துக்கற  முறைக்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கு …!   சொல்றேன் …இவன்பிறந்தஆஸ்பத்திரி….இல்லே  மருத்துவ மனையின் பெயரோட  விவரம்  கொஞ்சம்  சொல்லுங்க”

” லக்ஷ்மணுடைய  பாட்டி அதாவது…. என்  அத்தையோடு குடும்பம் வசதி படைத்த  ஒரு பெரிய மிராசுதார் குடும்பம். அதனால என் மனைவிக்கு அவங்க   மருத்துவச்சியை வரவழைத்து வீ ட்டிலயே   பிரசவம் பார்த்தாங்க …அப்படிப்  பிறந்த குழந்தைதான் லக்ஷ்மண்! “

“அப்படியா … ? அந்த மருத்துவச்சியை  இங்க வரவழைக்க முடியுமா ? “

“டாக்டர் ..இவன் பிறக்கும்போதே    ஆவங்களுக்கு ஏறக்குறைய  ஒரு ஐம்பது வயசு இருக்கும்…மேலும்   இந்த சூழல்ல  அவங்கள எங்கேன்னு போய் தேடுவேன் ?  இந்நேரத்துக்கு அவங்க உயிரோட இருக்கணுமே!

” கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க!  …வரவழைக்க முடியுமா?”

“ரொம்ப வருஷங்கள் ஆயிடுச்சு ..இருந்தாலும் முயற்சி பண்றேன்  டாக்டர் “

“நல்லது …அவங்கள எப்படியாவது   இங்க கூட்டிட்டு வாங்க… பிறகு உங்க பையனுக்கு நான் சிகிச்சையை ஆரம்பிக்கிறேன் …சரியா ?  புறப்படுங்க”

“சரி டாக்டர் …நான் வரேன்..   லக்ஷ்மண்!  போலாம் வா “

சிவநேசன் புறப்பட்டார் ….

 2

வீட்டுக்குள் நுழைந்தவுடன் சிவநேசன்,  “பாரு..! ஒரு நல்ல  செய்தி ….லக்ஷ்மண் குணமடைய வாய்ப்பு இருக்குன்னு  டாக்டர் சொல்லிட்டார் …ஆனா அதுக்கு உன்னோட உதவி தேவை …”என்றார். 

”  புரியலையே …! என்  உதவி தேவைப் படற  அளவுக்கு டாக்டர் என்னங்க சொன்னார்? “

“சின்ன விஷயந்தான்  …ஆனா கொஞ்சம் கஷ்டம் …இருந்தாலும் முயற்சி பண்றேன்னு டாக்டர் கிட்டே சொல்லிட்டு வந்தேன்  “

“சரி …விஷயத்தை சொல்லுங்க ! “

“உனக்குப் பிரசவம் பாத்த அந்த மருத்துவச்சியை    உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல?        டாக்டர் அவங்களை சந்திக்கணுமாம்.அப்படி சந்திச்சா  நம்ம பையன் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துடும்னு  அபிப்பிராயப்படறார்  …இப்போ அவங்க எங்க இருப்பாங்கன்னு  உன்னால சொல்ல முடியுமா ? “

“நிச்சயமா ! ஞாபகம் இருக்குங்க .. ..பேச்சிப் பாட்டி ! அவங்க  நாங்க இருந்த  பூஞ்சோலை கிராமத்துல  இருந்தாங்க. அவங்க வீடு கூட  எனக்கு இன்னும் மறக்கல்ல…பிரசவம் முடிந்து நம்ம வீட்டுக்கு வரும்போது கூட அவங்க கிட்டே சொல்லிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு தான் வந்தேன் .ஆனா…”

“என்ன …ஆனான்னு இழுக்கிற ? “

“நாங்க அந்த ஊரை விட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சி … எங்க வீட்டையும் வித்தாச்சு …மேலும் அந்தக் கிளவி இப்போ உயிரோட இருப்பாளான்னே  தெரியலயே …? “

“ஆமாம்!  ..நாம அதை முதல்ல தெரிஞ்சுக்கணும்… காலம் கடத்தாமை நாம இப்போவே புறப்படுவோம்  பூஞ்சோலை கிராமத்துக்கு” 

“என்னங்க …இந்த ராத்திரியிலா ?  லக்ஷ்மண் அதுவரைக்கும் இங்கே தனியா இருப்பானா ? “

“ஒரு ராத்திரிதானே  ? சமாளிச்சுப்பான் ..என்னடா ..லக்ஷ்மண்!  தனியா இருக்க மாட்டே ? வேணும்னா ஒன் ஃபிரண்ட்ஸ் ரெண்டு பேரக் கூட்டி வச்சுக்கோ.., நாங்க  இப்போ போயிட்டு காலையில திரும்பிடுவோம்…சரியா ?  “டிரைவர்,   இந்தா  ..போய் சாப்பிட்டுட்டு வண்டில நாலு வீல்லயும் காத்து பாத்துண்டு வந்துடு …” என்று பணம் கொடுத்து டிரைவரை விரட்டினார்.

சிவநேசனைப் பொறுத்த வரை டாக்டர் சொன்னதைத் தவிர வேறுஎதுவுமேஅந்தநிமிடத்தில்பெரிய தாகவும் முக்கியமாகவும்  அவர் முன் தோன்றவில்லை .

இருவரும் காரில் ஏறிப் புறப்பட்டார்கள் பூஞ்சோலை கிராமத்தை நோக்கி. 

பூஞ்சோலை  என்பது வேலூர் மாவட்டத்தில்   ஒரு அழகிய  கிராமம் .

வெகு நாட்களாகி விட்டதால் அங்கே   இங்கே  என்று விசாரித்து  அந்த ஊருக்குள் நுழையும்போது  கிட்டத் தட்ட விடிய ஆரம்பித்து விட்டது   …ஒரு வழியாய் அவள் வீட்டையும்  அடைந்து 

டக்… டக் …டக் …

கதவைத் தட்டினார் சிவநேசன்.

வீட்டின் உள்ளே இருந்து தூய வெண் பஞ்சில் செய்த செயற்கை முடியைத் தலையில் கவிழ்த்ததுபோன்ற    தலை முடியுடன்  கன்னங்கள் ஒட்டிப் போய் காது துவாரங்கள் பெரியதாகி  காதணிகள்  இரண்டு காதுகளிலும்  தொங்க ஒரு வயதான அம்மாள் வெளியே வந்து , ” யார் நீங்க ? யாரைப் பாக்கணும் ? ”  என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“பாட்டி ..வணக்கம் …நல்லா இருக்கீங்களா ? என்னை ஞாபகம் இருக்கா ? நான்தான் பார்வதி …எங்க  வீட்டுக்கு வந்து எனக்குப் பிரசவம் பாத்தீங்களே …நீங்கச் சொன்ன படியே ஆண் குழந்தை பிறந்ததே “

“தாயீ! !  …நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புரியலை ..நானாவது……உனக்குப் பிரசவம் பாக்கிறதாவது…..நீ விலாசம் மாறி வந்துட்டேன்னு நெனைக்கிறேன் …”

“என்ன பாட்டி அப்படி சொல்லிட்டீங்க? உங்களுக்கு வயசாயிட்டதால மறந்துட்டிங்கன்னு நினைக்கிறேன் ..கொஞ்சம் தயவு செய்து ஞாபகப் படுத்தி பாருங்க”

மகனுக்கு மன-நிலை சரியாக வேண்டுமே என்ற ஆதங்கத்தில்  கிழவியின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் பார்வதி..

“ஏன் தாயீ  …வச்சு கிட்டா வஞ்சனை பண்றேன் ? நான்தான்  ஞாபகம் இல்லன்னு சொல்றேன்! திரும்பத் திரும்ப  கேக்கறியே …சரி …அப்படியே  நான் உனக்குப் பிரசவம் பார்த்ததாகவே இருக்கட்டும் …இப்போ என்ன விஷயமா என்னய  பாக்க வந்தீங்க?  அதை சொல்லுங்கள் ..”

பேச்சியம்மா அந்தக்  கால மனுஷி  அல்லவா ? …உடனே விஷயத்துக்கு வந்தாள்.

“நீங்கப்  பிரசவம் பாத்துப் பிறந்த  அந்த பையனுக்கு இப்போ உடம்பு சரியில்ல….சரியாகணும்னா .. நீங்க  ஏங்கக் கூட வரணும்”

“ஏன் ?அவன்  உடம்புக்கு என்ன பண்ணுது  ? “

“அது உங்களுக்கு சொன்னாப் புரியாது ..நீங்க  நேர்ல வந்தாத்தான் புரியும் “

“அப்படியா தாயி சொல்ற ?  …!   சரி நான் உங்க கூட வாரேன்… ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க .காப்பி தண்ணி எதாச்சும் குடிக்கிரிகளா ?”  

“அதெல்லாம் வேணாம்மா “

” சரி”

 மாற்று உடை எடுத்துக்கொண்டு  வீட்டைப் பூட்டிக் கொண்டு அவர்களுடன் 

புறப்பட்டாள் பேச்சி அம்மாள். 

பார்வதிக்கும் சிவநேசனுக்கும் ஆச்சர்யத்துக்கு மேல்  ஆச்சர்யம்..முதலில் அவர்கள் சொன்ன விஷயத்தை நம்பாதவள் பையனுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னவுடன் ஒப்புக் கொண்டாளே என்று .  ஆனால் எப்படியோ   கிளவி கிளம்பி வந்தாளே  என்றமட்டில்  திருப்திப் பட்டுக் கொண்டார்கள் .

டிரைவர் உட்பட நால்வரும் திரும்ப ஊருக்குப் புறப்பட்டனர்.  

 3

டாக்டர்  வீரராகவனின் பிரத்தியேக அறை …

மூன்றடி உயரத்தில் ஒரு இரும்பு கட்டில் ..பேச்சி கிழவி அதில் கிடத்தப்பட்டிருக்கிறாள்..நெற்றிக்கும் இரண்டு செவிகளுக்கும்  தொடர்பு கொண்ட  வண்ண ஒயர்கள்   …  மங்கிய விளக்கின் வெளிச்சம் தவிர அறையில் வேறு வெளிச்சம் இல்லை ..

“பேச்சி அம்மா, இப்போ மெல்ல  நான் உங்களை   இருபது வருஷம்  முந்தைய  ஒரு கால கட்டத்துக்கு  கூட்டிட்டு போகப் போறேன்.  நான் கேட்ட கேள்விகளுக்குச்  சரியா பதில் சொல்லி என்னோடு  ஒத்துழைக்கணும்  …”

“சரி ஐயா …”

“சொல்லுங்க……இப்போ உங்க வயசு என்ன ?

“நாப்பத்து ஒன்பது”

“உங்களுக்குப் பார்வதியை எப்படித் தெரியும் ? “

“நான் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் குடியிருக்கேன் அதனால பழக்கம் “

“சொல்லுங்க….! பார்வதிக்கு பிரசவம் பார்த்தது நீங்கதானே ?”

” ஆமாம் “

“அன்னிக்கு பிரசவம் நல்ல படியா முடிந்ததா ? “

“முடிஞ்சது “

“பிறகு  என்ன நடந்தது ?”

“பிரசவம் ஆன கையோட  குழந்தையைச் சுத்தப் படுத்த பக்கத்து அறைக்கு  எடுத்துக் கிட்டு போனேன் “

“அப்புறம்?”

“அதுக்கப்புறம் ….அதுக்கப்பறம் …”

“தயவு செய்து என்ன நடந்ததுங்கற உண்மையைத் தயங்காமல்  சொல்லுங்க ..நீங்க சொல்ற உண்மை ஒரு மன நோயாளியைக் நோயிலிருந்து காப்பாற்றும்”

“..குழந்தையைச் சுத்தப் படுத்திவிட்டுத் திரும்பி வரும்போது ….”

“திரும்பி வரும்போது …? “

“குழந்தையை…..”

“சொல்லுங்கம்மா  குழந்தையை ?”

“குழந்தையை கை தவறி பார்வதி படுத்திருந்த படுக்கையின் மீது  போட்டு விட்டேன்…”

“எவ்வளவு உயரத்திலிருந்து போட்டீர்கள் ?

“சுமார் ஒரு  அடி உயரம் இருக்கும் “

“பிறகு என்ன செய்தீர்கள்  ? “

” குழந்தைக்கு உயிர் இருக்க்கான்னு  பாத்தேன்….! உயிர் இருந்தது … ஆனா … “

“ஆனா ? “

“குழந்தையின் தலைல  லேசாப்  பொடைச்சிருந்தது .  குழந்தை அப்போ தான்  பொறந்ததுங்கற தால  உச்சந் தலையை தேய்ச்சு விட முடியல்லை.

“அப்புறம்  என்ன செய்தீர்கள்?” 

“குழந்தை வழக்கத்துக்கு மாறா அழவில்லை …உடனே குழந்தையைப்  சரியாகப்  பார்வதி அருகே கிடத்தி விட்டு  அந்த அறையில் என்னைத் தவிர யாரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன்.”

“பிறகு ? “

“குழந்தையை லேசாகக் கிள்ளி அழ வைத்துவிட்டு  எதுவும் நடக்காதது போல் பார்வதியையும்  எழுப்பி குழந்தைக்குப் பால் கொடுக்கச் செய்தேன்  ” 

” சூப்பர் ! ! ” என்று தன் கேள்விகளை முடித்துக் கொண்டார் டாக்டர்.

இப்போது  அறையில் உள்ள இரு குழல் விளக்குகளுக்கும் ஒளி  கொடுத்து விட்டு அங்கு நடந்த உரையாடலைப்    பதிவு செய்த ஒலி நாடா பதிவுக் கருவியின்  மின் இணைப்பை துண்டித்தார்.

பேச்சியம்மாவைப் பார்த்து

“சோதனை முடிஞ்சிடுச்சு  …எழுந்திருங்கம்மா!” என்றார்.

   4

டாகடர் கூறும் முடிவைக் கேட்பதற்கு  சிவநேசனும் பார்வதியும்  ஆவலுடன் அவர் முன் அமர்ந்திருந்தனர்.

டாக்டர் தன் விளக்கத்தை ஆரம்பித்தார் .

“லக்ஷ்மணுக்கு ஏற்பட்டிருப்பது  அவன் ஆழ் மனதில் ஏற்பட்ட ஒரு சின்ன மன அதிர்ச்சி  ..இதை ஆங்கிலத்தில் “ஆக்ரோஃபோபியா”ன்னு சொல்வாங்க ..அதாவது உயரத்தில் சென்றால்  நாம நிச்சயமாய் கீழே  விழுந்துவிடுவோம் என்கிற ஓர்  அச்சம்..

அவனை மருத்துவச்சி தன்  கையிலிருந்து தவற விட்டுத் தான்  சற்று  உயர்  நிலையிலிருந்து விழுந்ததால்  அவனோட ஆழ்மனதில் நன்கு பதிவான ஒரு பயம் “

“அப்போ இதற்குச் சிகிச்சை ? “

“அந்த பயத்தை அவன் கிட்டே இருந்து போக்கி புரியவைத்து  இயல்பு நிலைக்கு கொண்டுர்ரதுதான் ..

அதற்குன்னு  சில மன பயிற்சிகள்  இருக்கு ..அத லக்ஷ்மணுக்கு முறையா குடுத்து அவன் குணமாக்கிற  பொறுப்பு  என்னோடது ..மிஸ்டர் சிவநேசன் நீங்கக் கவலை படமா போயிட்டு வாங்க ” என்று உறுதி அளித்தார் டாகடர்.

இரண்டு மாதங்கள் கழித்து ..

இன்று பன்னாட்டு விமானப் பயணம் கூட சர்வ 

சாதாரணமாய் போயிற்று  லக்ஷ்மணுக்கு.

One Comment on “மேலிருந்து கீழ்…. ”

Comments are closed.