ஜெயதேவன் கவிதை

வாழ்க்கை அழகாய்த் தெரிகிறது
மரணம் மணி அடிக்கும்போது

அன்றாடம் சலிப்பை விநியோகித்துகிடந்த உடம்பு
ஒரு தேவதையின் சிறகைப்போல்
லேசாக இருக்கிறது வாழ்க்கை
முற்றும் தருவாயில்

சிலந்தி வலைக்குள் சிக்கியிருந்த உயிர்ப்பூச்சி
தளையறுபடும் தருணத்தில்
தன் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு ஓடத் தயாராகிறது.

தீக்குச்சிக்குள் இருந்த தீ தெரியாமல்
தீப்பெட்டியை சுமந்துகொண்டே
அலைந்துகொண்டிருக்கிறோம்

மரணக்குஞ்சு வெளிவரும்வரை
நாம் அறிவதில்லை
நாம் அடைகாத்தது
நமக்கானது என்று
எல்லாக் கோழிகளும் அப்படித்தான்

உருட்டிக்கொண்டே இருக்கிறோம்
பந்தை
“இன்னிங்ஸ்” முடியும்வரை
“பெளலிங் ” செய்ய நினைக்கும்போது ஆட்ட முடிவுக்கான கை தூக்கப்பட்டுவிடுகிறது

“தீ இனிது ” என்ற கவிதை வரி இனிக்கிறது
நம்மைச் சுடும்போது ரசிப்பு
நம்மைவிட்டுப் போய்விடுகிறது

கவிஞனின் இரங்கற்பா பிடிக்கிறது
அது நமக்கானது அல்ல எனும்போது

எல்லா மரணங்களும் செய்தியாகிறது
நம் கதவைத் தட்டும்போதுதான்

அது மரணமாகிறது