ச. திருவேங்கடம்/கழிவு இரக்கம் – மிக்ஜாம் அனுபவம்


நா னும் எனது இணையர் நாச்சியாரும் இந்த டிசம்பர் 3ஆம் தேதி மதியம் எங்கள் மகள் வீட்டிற்குச் சென்று விட்டோம். (2008 மற்றும் 2015 பெரு மழைக் காலத்தில் சூளைமேடு அனுபவங்கள் தந்த முன்னெச்சரிக்கை!) ஜமீன் பல்லாவரத்தில் ஓர் அடுக்ககத்தில் மூன்றாம் தளத்தில் அவர்கள் வசிக்கின்றனர். எனவே எங்களை பாதுகாத்துக் கொண்டோம்.

டிசம்பர் 6 காலையில் பழவந்தாங்கலில் நாங்கள் தற்போது வசித்து வரும் வீட்டிற்குத் திரும்பினோம்.

இதனிடையே எங்களை நலம் விசாரிக்க வந்த கழிவு நீர் எங்களைக் காண முடியாததால் உள்ளேயே டிசம்பர் 3, 4, 5 ஆகிய மூன்று தினங்களும் எங்கள் வீட்டிலேயே தங்கி ஆடிப் பாடி மகிழ்ச்சியாக இருந்துள்ளது தெரிய வந்தது.

இந்தக் குதியாட்டத்தால் ஒன்றரை அடியிலிருந்து 2 அடி வரை நீர் நின்றுள்ளது.

நாங்கள் உள்ளே நுழையும் போது அரை அடிக்குச் சேறும் கழிவு நீரும் மட்டும் காத்திருந்தது!

ஏற்கனவே (சூளைமேடு வாசத்தின்) முன் அனுபவம் கை கொடுக்க அன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்த சுத்தப்படுத்தும் வேலை இரவு எட்டு மணி வரை எங்களுக்கு நேரம் போவதே தெரியாமல் ஆக்கி விட்டது.

மூன்று நாட்கள் தங்கியிருந்த கழிவு நீர் எங்கள் வீட்டுக் கதவை மகிழ்ச்சியில் பூரித்து உப்ப வைத்து விட்டது போலும்!

காலை கடுமையான போராட்டத்திற்குப் பின்தான் கதவைத் திறக்க முடிந்தது. அதுகூட பரவாயில்லை, இரவு எவ்வளவோ போராடியும் கதவை மூட முடியவில்லை!

“செல்விருந்தோம்பி வருவிருந்தைப் பார்த்திருப்பான்” போல் கதவடைக்காமல் கழிந்தது அன்றைய இரவு.

வீட்டு உரிமையாளரிடம் இனி தான் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் இதிலும் கூட என் இணையருக்கு மகிழ்ச்சிதான். நான் ஜோல்னாப் பை மாட்டிக் கொண்டு இயக்கப் பணிகளுக்கு எங்கும் செல்ல முடியாதல்லவா!

ஆக எங்களுக்குத் தொடர் வேலையும் சிறப்பான அனுபவத்தையும் தந்து விட்டுச் சென்றுள்ளது இந்த மிக்ஜாம் புயல்.

தோழர்கள் உடனிருக்கும் போது அனைத்தும் ஆனந்தமே!

7 Comments on “ச. திருவேங்கடம்/கழிவு இரக்கம் – மிக்ஜாம் அனுபவம்”

  1. அருமை அருமை
    அமைதியான திருவேங்கடத்திற்குள்
    ஆர்பரிக்கும் டல்போல் கவித்துவமா
    வியப்பு
    ராஜகேசி

  2. சிரமத்திலும் அதில் சிலேடை…
    நாங்கள் தப்பித்தோம் என மகிழ்வு கொள்ள முடியவில்லை…
    உங்கள் பாடு ரொம்ப சிரமம்

    R.விமலா வித்யா நாமக்கல்

Comments are closed.