இந்திரநீலன் சுரேஷ் /நிஜங்களின் தரிசனம்

தூக்கம் தொலைத்த, செயற்கை சாயத்தைப் புன்னகையாய் பூசிய இளம் பெண்ணிடமிருந்து போர்டிங் பாஸ் பெற்று, இமிக்ரேஷனை கடந்து, செக்யூரிட்டி’யில் கலந்து, கன்வேயர் பெல்ட் ட்ரேயில் லேப்டாப்பை படுக்க வைத்தபோது, மொபைல் போன் அடித்தது. பிரசன்னா அதை அமைதிப்படுத்தி மற்ற வஸ்துக்களுடன் வைக்க, Xray ஸ்கேனர், அனுமதியின்றி அனைத்தையும் நிர்வாணப்படுத்திப் பார்த்தது.
‘ஷரத், எதற்காக இந்த ராத்திரியில் கூப்பிடறான்?’
வாய்ப்பிருந்தாலும் எக்ஸிக்யூடிவ் லவுன்ச் போன்ற அழகு சாதனங்களை அவர் உபயோகிப்பதில்லை. அவருக்கு மனிதர்களை, அவர்களின் உணர்ச்சிகளைப் பருகுவதில்தான் விருப்பம்.
உடைமைகள், பல இருக்கைகளை ரிஸர்வ் செய்து வைத்திருக்க, காலியான ஒன்றைத் தேடி அமர்ந்தார்.
“ஆமா ஜெர்ஸிதான் போறேன் ருக்கு, குழந்தைக்கு இரண்டே கால் வயசுதான் ஆகுது. என்னமா விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்றது தெரியுமோ ?” – அதன் எதிர் முனையில் நம்பிக்கையின்மையோ, பொறாமையோ தென்பட்டிருக்கவேண்டும். ‘அப்புறம் பேசறேன்’ என துண்டிக்கப்பட்ட ஏமாற்றம் தெரிந்தது
“ஏண்ணா ஆத்துல கிளம்பும்போதுதானே, காபி சாப்பிட்டேள், இத்தனை செலவு பண்ணி இங்கயும் குடிக்கணுமா?”
“ஆமாண்டி, இங்க குடிச்சாத்தான் உண்டு, அங்க கருப்பு வெந்நீர்ல நுரை விட்டுக் கொடுப்பான்”
சுற்றிலும் மனிதர்கள். அம்மா – டீன் ஏஜ் பெண்ணிடம் போடும் அற்ப சண்டை, விளம்பரத்தைத் தானே ஸ்கிப் செய்து டேனியல் டைகர் பார்க்கும் குழந்தை, காதலையும் நேற்றைய காமத்தையும் கண்களில் பேசும் புதுமணத் தம்பதியர், புளிக்காய்ச்சல் பாட்டில் ஏர்போர்ட் குப்பைத்தொட்டிக்குப் போனதன் அங்கலாய்ப்பு – என மனிதர்களுக்குப் பரிமாறிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்க, தனக்கு மட்டும் ஏன் தனிமை ?
‘ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் விட்டேன்?’ கோபமா, தியாகமா ?, காலம் ஒவ்வொரு நொடியும் காலடியில் நழுவிக்கொண்டிருக்கும் என்பதை அறியாத மௌனமா..
அப்பா விரைவில் உலகத்தை விட்டுப் போன குடும்பத்தில், தான் ஒரே பையன். இரண்டு தங்கைகள் கரையேத்த வேண்டிய சுமை இருந்தது. இன்னும் தங்கைகள் எதற்கெடுத்தாலும் எங்க அண்ணா மாதிரி வருமா?, என்றாலும், குழந்தைகள், குடும்பங்கள் பெரிசாகி வார்த்தைகள் குறைந்து போயின. ஆயினும் அடிமனது அன்பு குறையவில்லை.
ஏதோ டெக்னாலஜி கம்பெனியில் வேலை செய்வதால் தினம் ஒரு மாற்றம், அதி அவசர ப்ரோபோசல் என்று வாழ்வின் நகரல்களை, வேலையை ஒரு கவசமாக வைத்து தனிமை பூதத்தோடு சண்டை போட்டுச் சமாளித்தாயிற்று.
இன்னும் ஐந்து வருடத்தில் ரிடையர்மென்ட். வேலையைத் தொடர இஷ்டமில்லை. ஓடி ஓடிச் சேர்த்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய.. திவ்ய தேசமா? சமூக சேவையா? ஜும் வழியே திருப்புகழா? காவி கட்டிக்கொண்டு ஏதாவது மடத்தில் சேர்ந்து விடுவதா? வாழ்க்கைக்கு என்ன ‘பர்ப்பஸ்’?
பிஸினஸ் க்ளாஸ்ஸின் தற்காலிக மரியாதைகளைப் பெற்று, சீட்பெல்ட் போடும் பொழுதுதான் ஞாபகம் வந்தது
“ஷரத் என்னடா விஷயம்? சீக்கிரம் சொல்லு மொபைலை ஆஃப் பண்ணனும்” – இரண்டாவது தங்கையின் பையன். ஜார்ஜியா டெக்கில் படித்து, அட்லாண்டாவில் நல்ல வேலை.
“US இல் இருக்கும் போது எனக்காகக் கொஞ்சம் அட்லாண்டா வரணும் அங்கிள்”
“சாரி, இன்வெஸ்டார் மீட்டிங் முடிஞ்சவுடன் அடுத்த ஃபிளைட் பிடிச்சி ஐயர்லாந்த் போயாகணும். ஒரு டீல் ஸைன் பண்ண வேண்டி இருக்கு, அடுத்த தடவைப் பார்க்கலாம்”

“இல்லை அங்கிள் முக்கியம், ஸ்ருதியை உங்களுக்கு அறிமுகப்படுத்தணும்; அதைவிட முக்கியம் நீங்க அப்ரூவ் பண்ணினால்தான் அம்மா கல்யாணத்துக்கு ஓகே ன்னு சொல்லியிருக்கா. என் வாழ்வு உங்கள் கையில் ப்ளீஸ்”

அட்லாண்டா துடைத்து மெழுகினார் போல் இருந்தது. 10 வருடங்கள் முன்னால் இங்கு கோககோலா ம்யூஸியத்திற்குள் நுழைந்து எல்லாவித நாட்டு கோக் திரவங்களை ருசி பார்த்தது, அக்வேரியத்தில் சென்று மீன்கள் அடிக்கும் லூட்டியை கண்டது. CNN ஸ்டூடியோ ‘பிரேக் பாஸ்ட்’ ஷோவில் பார்வையாளராக கலந்து கொண்டது எல்லாம் நியாபகம் வந்தது
“அதோ தெரியுதே அந்த இரண்டு எழுத்து ஆடிட்டிங் கம்பெனிலதான் ‘ஸ்ருதி’, ஸ்டேட்டஜி அனலிஸ்டா இருக்கா” – மேகத்தை முத்தமிட்டுக்கொண்டிருந்த ஒரு கட்டிடத்தைக் காட்டினான் ஷரத்.
“சமத்து குட்டி; அப்பா கிடையாது. அவ அம்மாவைத்தான் இப்ப மீட் பண்ணப் போறோம்”
‘ரங்கோலி’ ரெஸ்டாரண்ட் சற்று ஜெய்ப்பூர் வாசனை அடித்தது. “ஹாய் அங்கிள் !” என்ற ஸ்ருதி, வெளிர் பிங்க் குர்தா மற்றும் கிழியாத ஜீன்ஸில் வரவேற்று ஒரு அமைதியான மூலைக்கு அழைத்துச் சென்றாள்.
40 வயது மதிக்கத்தக்க, 50’கள் கடந்த பெண்மணி வெளிர் காட்டன் சாரியில் எழுந்தாள்.
“ஐ அம் லாவண்யா”
“பிரசன்னா”
“ஒரு வெஜ் க்ளியர் சூப் சொல்லட்டுமா அங்கிள்? நீங்க பூண்டு வெங்காயம் சாப்பிட மாட்டீங்களாமே. அம்மா கூட பேசிட்டு இருங்க. நாங்க ஃபுட் ஆர்டர் பண்ணறோம்’ – ஸ்ருதி இயல்பாகப் பேசினாள்
“நீங்க.. நீ, லாவண்யா ஃப்ரம் திருச்சிதானே?”
“ஆமாம் பிரசன்னா” – ஆச்சரியம் மற்றும் மெல்லிய சோக இழையின் கலவை அவள் முகத்தில் தெரிந்தது.
“உன்னை நான் வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை சந்திக்க நேரிடும் என்று நினைத்ததே இல்லை.. – சாரி, ஒருமை இயல்பாக வருது. எப்படி இருக்க ?”
“பார்த்தவுடன் நீயா இருக்குமோன்னு நினச்சேன், சரியா இருந்தது. நான் அப்படியே இருக்கேன். ஒரு மாற்றமும் இல்லை, மாசம் ஒருதடவை தலைக்கு கருப்பு பூச்சு என்கிறதைத் தவிர மனத்தளவில் அதே பிரசன்னாதான்”
அம்மா இருக்கிற வரை தினமும் சமைச்சுப் போட்டாள். இப்பொழுது ஒரு மாமி வந்து இரண்டு வேளைக்கு எல்லாம் செஞ்சு ஃப்ரிட்ஜில் ஏற்றி விட்டு போயிடுவாள். கேட்டட் கம்யூனிட்டி,18’ஆவது மாடி, நான்கு பெட்ரூம்களில் ஏதாவது ஒரு பெட்ரூமில் தூங்குவேன். ஒன்று எம் எஸ் வீக்கு, இரண்டாவது இளையராஜாவிற்கு, மூன்றாவது ரஹ்மானுக்கும் அர்ப்பணித்து விட்டேன்
“கல்யாணம் பண்ணிக்கலையா, ஏன்?”, லாவண்யா இடைமறிக்க
“உன்னை இழந்த வடு இருந்தாலும், சோகம், தியாகம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். தங்கைகளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி, அப்புறம் முன்னேற்றம், பணம்’னு துரத்தி, காலண்டரை பார்க்கும் போது வயது 45’னு காட்டிடுச்சு. அம்மாதான் புலம்பிண்டேயிருப்பா. மற்றபடி யாரும் என்னை வற்புறுத்தலை, வற்புறுத்தி இருந்தா ஒருவேளை கண்டிப்பாகக் கல்யாணம் செய்து கொண்டிருப்பேன். சாரி, உன்னைப் பத்தி சொல்லு”
“கல்யாணம் ஆகி ஏழே மாதம், ஸ்ருதி வயிற்றில் இருக்கும் பொழுது, தலை வலிக்கிறதுனு ஆஸ்பத்திரி போனவர் அங்க இருபது நாள் இருந்தார். பிரைன் டியுமர் என்றார்கள். வீட்டிற்கு திரும்பவில்லை. காற்றில் கலைந்த புகை போலத்தான் அவர் உருவம் என் நினைவில இருக்கு”
தலையைக் குனிந்து கொண்டாள். 7 மாதம் என்பது வாழ்க்கையில் எத்தனை சிறிய காற் புள்ளி தெரியுமா பிரசன்னா?. கண்ணாடியைக் கழற்றி துடைத்துக்கொண்டாள்.
“….”
“அந்த திடீர் பிரிவிலிருந்து மீள்வதற்கு எனக்கு இரண்டு வருஷமாயிடுத்து ; என் ‘இன்-லாஸ்’ என்னை பிறந்த வீட்டுக்கு துரத்தாம தாங்கினாங்க. மாமனார் ஒரு ஜெம். அவர்தான் ஸ்ருதியை வளர்த்தார். என்னை மேல்படிப்பு, அதுவும் யு.எஸ் சென்று படிச்சே ஆகணும்னு ஒத்தைக் கால்ல நின்னார். இங்குதான் எம் எஸ், டாக்டரேட் முடிச்சேன்.
பெரிய வேலை, கை நிறைய சம்பளம். ஸ்ருதியை 5th கிரேட்டில்தான் கொண்டுவந்து சேர்த்தேன். மாமாவும் அத்தையும் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்வார்கள். என் மாமனார் இல்லை என்றால் நான் வெறும் பிணம் பிரசன்னா”
கண்களில் நீர் தேங்கி இருந்தது.
“உன் மாமனார் உன்னை இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லலையா ?
“பலமுறை சொன்னார். எனக்கு விருப்பமில்லை, அவர் மாதிரி நல்லவர்கள் சூழ்ந்த உலகத்திலிருந்து வெளியே காலடி வைக்கப் பயம். இளமைக் காலங்களை எப்பவாவது நினைச்சுப்பேன். “
“நானும் என்னுடைய காதலை மனதில் பத்திரமாக ஒரு வைர மோதிரம் போலப் பூட்டி வச்சிருக்கேன். அவ்வப்பொழுது திறந்து பார்த்துப்பேன். உனக்கு ஞாபகம் இருக்கிறதா நம் 88 பஸ் ?”
“ம்”
“ஒரு பாட்டிமா காலை தெரியாமல் நான் மிதிக்க, அவர் விட்ட டோஸை பார்த்து ‘கிளிக்’ என்ற உன் சிரிப்பைக் கேட்டுத்தான் உன்னை முதல்ல பாத்தேன்,
அப்ப நீ கே.கே நகரிலிருந்து வருவாய். நான் சுந்தர் நகரில் ஏறுவேன். புத்தகங்களை உன் கையில் கொடுத்துட்டு நிப்பேன். ஒருநாள் ரகசியமாக நோட்டைத் திறந்து என் பெயரை நீ படிச்சதைக் கவனிச்சேன். ரெண்டு பேரும் திருச்சி சர்ச் ஸ்டாப்ல இறங்குவோம். நீ இடது பக்கம் உன் காலேஜ்க்கு நான் வலப்பக்கம் என் காலேஜுக்குமா, ஒரு மின்னல் புன்னகையுடன் பிரிவோம்”
“ஆம், உன் பெயர் எனக்கு பிடிக்கும், அபூர்வராகங்களில் ‘கமலின்’ பெயர்..!”
“ஒரு சமயம் தொடர்ந்து, ஒரு வாரம் உன்னை பஸ்ஸில் காணாமல் தவித்தேன். அன்று மாலை தெப்பக்குளம் அருகில் நீ, பூ வாங்கும் போது பிடித்தேன். ‘ஏன் வரலை, சொல்லிட்டு போயிருக்கலாமில்ல..? னு கேட்டதுக்கு ‘ஏன் சொல்லணும்?’ னு கண்களைப் பாத்து கேட்டாய் !
அட்லீஸ்ட், ஒரு வாரத்திற்கு மொத்தமா புன்னகை கொடுத்திட்டு போயிருக்கலாமில்ல..?
முதல் முதலாக மைக்கேல்ஸ் ஐஸ்கிரீமின் நெருக்கடியான பெஞ்சில் நிறையப் பேசினோம். அதன் பிறகு கைகள் கூட தொடாமல், காதல் வளர்த்தோம். நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை. ஆனாலும் மூன்றாவது வருடம் முடிந்து அந்த பிரியும் நாள் வந்த பொழுது அடுத்து என்னங்கிற திகைப்பு !”
சூப்..பில் மஞ்சள் நெடி சற்று தூக்கலாக இருந்தது
“மும்பையில் ஒரு விமான கம்பெனியில் வேலை செய்யும் வரன் உனக்குத் தயாரா இருக்க, நானோ எந்த வேலையும் கிடைக்காமல் ஒரு வக்கீல் ஆபீஸ்ல குமாஸ்தா என்ற பெயரில் தடுமாறிக் கொண்டிருக்க, காதல் மலைக்கோட்டை படிகளில் அனாதையாக விடப்பட்டது. 70’/80’களில் கைவிடப்பட்ட பல காதல்களுக்கு இன்னும் அந்த படிகளே மௌன சாட்சியாக இருக்கு லாவண்யா..”
அந்த காலத்தில் சொற்ப சம்பளத்தில் நிலையில்லாத வேலையிலிருந்த எனக்கு எப்படி உன்னைக் கொடுப்பாங்க?. நீ திருமணமாகி தொடர்பு எல்லைக்கு வெளியில போயிட்ட. கஷ்டப்பட்டு PG முடிச்சேன், நல்ல வேளை ‘பேங்க்’ தன் கதவுகளைத் திறந்து விட, அடுத்தடுத்து முன்னேற்றங்கள் வந்து, வேலை மாறி ஐ.டி கம்பெனி ஜோதியில் கலந்து உச்சங்களைத் தொட்டாலும் கைவிட்டது, காதல் மட்டும் அல்ல வாழ்க்கையும் கூட..”
லாவண்யா அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் தூரத்தில் அமர்ந்து சுவாரஸ்யமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் ஸ்ருதி, ஷரத் மீது விழுந்தது. பிறகு பிரசன்னா பக்கம் திரும்பி,
“இறைவன், ஒரு குழந்தை போல..ன்னு சொல்லுவாங்க. அவன் போடும் கோடுகள், பல சமயங்களில் தாறுமாறாக இருந்துடறது”
“ஏதோ ஒரு இடத்தில் இந்த கிறுக்கல் கோடுகள் இணையும் போது, இது போன்ற சந்திப்புகளும் நடக்கிறது போல. ஆம், லாவண்யா நாம் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது ?”
திடீரென தீயை மிதித்தவள் போல லாவண்யா பதறி,
“வாட் டிட் யு சே? நீ.. நீங்க இங்க வந்தது எதுக்குன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் பிரசன்னா”
“அது, வந்து..”
“நம்முடைய அனுமதிக்கு காத்திருக்கனும்கிற அவசியம் நம் குழந்தைகளுக்கு இல்லை, இருந்தாலும் காத்திருக்காங்க. உன், உங்கள் மனம் குழம்பி இருக்கு. இது போன்ற தருணங்களில் வாழ்த்திவிட்டு நகர்ந்து விடுவதுதான் நல்லது. வாழ்க்கையில் தியாகம் விலை மதிப்பற்றது. சுயநலம், தியாகத்தின் மிகப் பெரிய எதிரி பிரசன்னா. சாரி, நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம்”
சிறிய மௌனம் நிலவியது. பிரசன்னா எழுந்தார்
லாவண்யா முகம் பார்க்காமல், “மன்னிக்கவும் நாம் மீண்டும் நாம் சந்திக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்”
பிரசன்னா மெதுவாக வாசற் கதவை நோக்கி நடந்தார். தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதி,
“ஷரத், என்னன்னு பாருடா, உங்க அங்கிள் கிளம்பிட்டாரு “
ஷரத் அவசரமாக ஓடி வந்தான்.
“மாமா என்ன ஆச்சு, ஏதும் பிரச்சனையா ?”

“எனக்கு முழுக்க சம்மதம். நான் உன் அம்மாவிடம் சொல்லி விடுகிறேன். ஆல் தி பெஸ்ட்”

“ஸ்ருதி இன்னுமா நீ அலங்காரம் பண்ணிட்டு இருக்க, அங்க முகூர்த்தத்துக்கு நேரமாச்சுன்னு சாஸ்திரிகள் அவசரப்படுத்தறார்”
“கண் மை ஈஷிண்டு பெரிய அவஸ்தை, பியூடிஷியன் வேற சாப்பிட போயிட்டா”
“பரவாயில்ல, சீக்கிரம் வா” – ஷரத் அவசரப்படுத்த
வெளியில் ஸ்ருதியின் தாத்தா,
“என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு ராசாத்தி, எவ்வளவு அழகு என் பேத்தி ! ஷரத் இங்கே வா”
இரு கைகளையும் விரித்து, இருவரையும் ஒரு சேர அணைத்துக் கொண்டார். “நான் சாகறத்துக்குள்ள இந்த கல்யாணத்தை பாத்துடனும்னு ஆசைப்பட்டேன்” – கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்
“கொட்டு மேளம்.. கொட்டு மேளம்..”
ஷரத் மற்றும் ஸ்ருதி நண்பர்கள் படை ‘ஓ ‘என்ற பெருத்த கூச்சலிட, மலர்களும், அட்சதைகளும் பரவ, கேமிராகாரர்கள், பார்வையாளர்களை வழக்கம் போல மறைக்க,
ஸ்ருதி தன் அம்மாவின் கூந்தலில் சிக்கிக் கொண்டிருந்த மலர் துகள்களை எடுத்து அவள் கழுத்திலிருந்த மாலையையும், தாலியையும் சரி செய்தாள். லாவண்யா மணையிலிருந்து எழுந்து பிரசன்னாவின் கரங்கள் பற்ற,
“வலது பக்கமா சுத்தி வாங்கோ”
இரண்டாவது முறையாக அக்னியை வலம் வர ஆரம்பித்தாள் லாவண்யா. ஹோம குண்டத்திலிருந்து இரண்டு அக்னி கீற்றுகள் ஒன்றோடு ஒன்று பிணைந்தன. அவை, இந்த முறை இவளுக்கு நீண்ட மணவாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்திருக்கலாம்..
—— INS 2023 ————