கோ.வைதேகி/தாத்தாவின் தேவதை

புதிய மாதவியின் தாத்தாவின் தேவதை கதை விமர்சனம்.

தாத்தா பேத்தியை தூங்க வைக்க முற்பட இருவருக்குமிடையேயான உரையாடலாகத் துவங்கும் இக்கதை உணர்வுகளை அழுத்தமாக கிள்ளிப் போகிறது. தேவதைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவர்கள். அன்பானவளாக உயர்வானவளாக உதவும் குணம் கொண்டவளாக தெய்வத்தன்மைக்கு ஒப்பானவளாக  இருக்கும் தேவதைக்கான வரையறை ஆணைப் பொறுத்த மட்டில் சற்று மாற்றாக தன்னை முதலில் காதலித்தவளாக இழந்த பின் தன் பிரியத்திற்குரியவள் என்று உணரப்படுபவளாக இருந்து விடுகிறாள்.

தாத்தா  பேத்திக்குச் சொல்லும் விதமாய் தன் மேல் பிரியம் கொண்டவளை தேவதை என்று உணராமலே இருந்ததும்

அவள் தேடி வந்த போதெல்லாம் காரணங்கள் ஏதேதோ சொல்லி கதவை அடைத்ததையும் நினைவு கூர்கிறார்.தேவதையை மிஸ் பண்ணிட்டியே தாத்தா என்று பேத்தி கூறும் போது  அதை ஒத்துக் கொண்டு  கண்கலங்குகிறார்.கதவை அடைத்து விட்டு சாளரத்தை திறந்து வைத்தால் தேவதை வருவாளா என்ற ஏக்கத்துடன் வாழும் தாத்தாவின் மனவுணர்வுகள் கதையை படிக்கும் நம் கண்களையும் பனிக்கச் செய்கிறது.அடுத்த நொடி நமதில்லை எனும் நிச்சயமற்றதன்மையில் வாழ்வின் தாத்பர்யம் அந்தந்த கணத்தில் பொருந்தி வாழ்வதே..மேலும் வாழ்தலின் வேருக்கு நீர் வார்ப்பது பரஸ்பர அன்பு ஒன்றுதான்.

நம்மீது அன்புகாட்டுபவர்களை இறுகப் பற்றிக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தி விட்டு வாழ்வில் எத்தகைய உயரம் எட்டினாலும்  திரும்பிப் பார்க்கையில் அது ஒன்றுமில்லாததாகி விடுகிறது.மனிதர்களில் 99.5%பேர் இப்படித்தான் தேவதைத்தன்மையுடையவர்களை போலித்தனமான கௌரவம் சமூகம் சூழல் இன்னும் ஏதேதோ காரணத்துக்காய் விலக்கி விட்டும் உணராமலும் உணர்ந்தாலும் வெளிக்காட்டாமலும் வெற்று பந்தாவுக்கென ஒரு வாழ்க்கை வாழ்கிறோம்.இழப்பின் வீரியம் உள்ளத்தை உலுக்குகையில் கையருகே இருந்தது கண்காணாது போனது புரிகிறது.வலி நிரந்தரமாகிறது.காலம்

 கடந்த காயங்களை காலமும் ஆற்றாது என்பதை கதாசிரியர் வெகு நேர்த்தியாய் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது.

வாழ்த்துகளுடன்

One Comment on “கோ.வைதேகி/தாத்தாவின் தேவதை”

Comments are closed.