இரவு

சௌவி

யாருமற்ற கடற்கரையில்

யாருமற்ற கடற்கரையில்
கரையைத் தட்டிக்கொண்டிருக்கும்
கடலலைகளை
யாருக்கும் தெரியாமல் நான் எடுப்பதை
பார்த்துக்கொண்டேயிருந்தது இரவு
யாரிடமும் சொல்லவேண்டாமென
இரவிடம் சொன்னேன்
இரவு எதுவுமே பேசவில்லை
இரவு கோபமாக இருக்கிறதென நினைத்து
அதன் மேல்
என் கையில் வைத்திருந்த
சுத்திகரிக்கப்பட்ட புட்டி நீரைத் தெளித்தேன்
குளிர்விக்கலாமென.
அதற்குப்பிறகும் இரவு எதுவும் பேசவில்லை.
இரவின் கோபத்தைத் தணிக்க
என்ன செய்யலாமென
யோசித்துக்கொண்டிருக்கையில்
யாரோ வரும் சப்தம் கேட்டது
கையிலிருந்த அலைகளை அவசரமாக
கடலுக்குள் எறிந்துவிட்டு
மறைந்து நின்றுகொண்டேன்
உதட்டில் நெருப்புக் கனல
வாயில் சிகரெட்டோடு வந்தவன்
இரவின் மீது புகையை ஊதினான்
இரவு ஒன்றும் பேசவில்லை
புகை பிடித்துக்கொண்டே இரவின் மீது
சிறுநீர் பொழிந்தான்
அப்போதும் இரவு எதுவுமே பேசவில்லை
பின் தன் சிகரெட் நெருப்பை
இரவின்மீது போட்டுத் தேய்த்தான்
இரவு எதுவுமே பேசவில்லை
அதற்குப்பிறகுதான் தெரிந்தது
இரவு ஒரு வாய் பேசமுடியாத ஊமை என்று.
இந்த இரவா
என்னைக் காட்டிக்கொடுத்துவிடப்போகிறது?
இப்போது இன்னும் அதிகமாக
அலைகளை எடுத்துக்கொண்டு
இரவைப் பற்றிய பயமேதுமின்றி
இரவின் மீது நடக்கத் தொடங்கினேன்
வீடு நோக்கி.

-சௌவி

One Comment on “இரவு”

Comments are closed.