குரங்குப் புத்தி.!


(மாற்றி யோசி கதைகள்)


ஆர்க்கே.

அந்தக் கதை நடந்து பலகாலம் ஆகியிருக்கும்.

ஆனாலும் வயது மூப்பு காரணமாக மரணப்படுக்கையின் விளிம்பில் இருக்கும் குல்லா வியாபாரி கோவிந்தனுக்கு ந‌ன்றாக ஞாபகம் இருக்கிறது.

தான் தயாரிக்கும் குல்லாக்களை நல்ல கோடைகாலத்தில் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு நடைநடையாய் நடந்து விற்ற நாட்கள். மனைவி இருளாயி விடியல்காலையிலேயே தருகிற வெங்காயம் மிளகாய் அரிந்து போட்ட நீராகாரத்தை குடித்துவிட்டு தூக்குச்சட்டியில் அவள் தரும் கூழையும் கொத்தவரங்காய் வத்தலையும் சுமந்து சென்ற நாட்கள்.

காலையில் துவங்கிய வியாபாரம் போகப்போக சுட்டெரிக்கிற சூரியன்போல அவ்வளவு உஷ்ணமாயில்லைதான். இன்னும் ஐம்பது குல்லா விற்க முடிந்தால் இரண்டுநாள் அடுப்பெரியும். அரிசிச்சோறுடன் கருவாட்டுக்குழம்பு வாய்ப்பு. சந்தையில் துணி வாங்கி
இரண்டுநாள் காலாடத் தைத்தால் இருநூறு குல்லா சாத்தியம். பார்க்கலாம் என யோசித்தபடி நடக்கையில்தான் குரங்குப்பட்டி அவனை ஊருக்குள் வரவேற்றது.

சூரியன் உச்சிக்கு வர ஊர் எல்லையிலிருந்த குளத்தங்கரையில்
வெங்காயத்தைக்கடித்தபடி தூக்கு கூழை தூக்கிக்குடித்துவிட்டு குளக்கரையில் கையையும் தூக்கையும் கழுவிக்கொண்டான். எதிரே ஆலமரத்தடி நிழல்நீட்டி அழைக்க கூடையை இறக்கிவைத்துவிட்டு விளம்பரக் கவர்ச்சிக்காக தான் அடுக்கடுக்காய் அணிந்திருந்த நான்கு வண்ணக்குல்லாக்களை தன் தலையில் அணிந்தபடியே உறங்கிப்போனான்.

கீச்கீச்சென சத்தம் வர எழுந்துபார்த்தபோது தலையிலிருந்த குல்லாக்கள் தவிர கூடையிலிருந்த குல்லாக்கள் எல்லாம் சொல்லாமல் காணாமல் போயிருந்தன. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தால் ஆலமரக்கிளைகளிலெல்லாம் குல்லா அணிந்த குரங்குகள் கூட்டம்.

போச்சு.! மொத்த குல்லாவும் போனதில் கல்லா கட்ட முடியாமல் போனது. கல்லெடுத்து வீசிப்பார்த்தான். ம்ஹூம். கீழே கிடந்த குச்சியை எடுத்து நீட்டி மிரட்டிப் பார்த்தான். குரங்குகள் உர்ரென்றிருந்தன.

அப்போதுதான் அப்பா கிருஷ்ணன் சொன்ன உபதேச புத்திமதி ஞாபகம் வந்தது கோவிந்தனுக்கு.

கிளி சொன்னதைத் திருப்பிச் சொல்லும். குரங்கு செய்வதைத் திருப்பிச்செய்யும்.

தன் தலையில் அணிந்திருந்த குல்லாக்களை கழற்றினான். குரங்குகள் அனைத்தும் உற்றுப்பார்க்க தரையில் விசிறியடித்தான். குரங்குகள் உடனே அவை அணிந்திருந்த குல்லாக்களையெல்லாம் கழற்றி ஒரு சேரத் தரையில் வீசின.

உடனே எல்லா குல்லாக்களையும் எடுத்துக்கொண்டு நேரே தன் கிராமத்தை நோக்கி நடந்தான் கோவிந்தன்.

அந்தக்கதை நடந்து பலகாலம் இருக்கும். படுத்த படுக்கையாய் சில காலம் இருந்ததில் மகன் மருதப்பன்தான் இப்போதெல்லாம் சைக்கிளில் போய் குல்லா வியாபாரம் செய்கிறான்.
குரங்குப்பட்டியில் நடந்த கதையை
தன் மகனிடம் சொல்லியிருந்த கோவிந்தன் தன் மகனை அந்த ஊருக்கு மட்டும் குல்லா விற்க போகவேண்டாம் என சொல்லியிருந்தான் கதைகதையாக.

கோவிந்தன் இறந்துபோய் இப்போது இரண்டு மாதமாகிறது.

போனமாதம்தான் மருதப்பன் அப்பா வழியில் ஊர்ஊராக குல்லா விற்கப்போனான். விதிச்செயல்போல உச்சி வேளையில் குரங்குப்பட்டி. குளக்கரை கூழ். ஆலமரத்தடி தூக்கம்.

கீச்கீச்சென சத்தம்வர எழுந்துபார்த்தபோது எல்லா குல்லாக்களும் குரங்குகள் தலையில்.

தலையிலடித்துக்கொண்ட மருதப்பனுக்கு அப்பா உபதேசம் ஞாபகம் வந்தது.

சட்டென எல்லாக்குரங்குகளும் பார்க்கும்போது தன் தலைக்குல்லாக்களை தரையில் விசிறி அடித்தான். எங்கிருந்தோ ஒரு குட்டிக்குரங்கு ஓடிவந்து அவற்றையும் எடுத்துக்கொண்டு மரக்கிளையில் உட்கார்ந்து தலையில் அணிந்துகொண்டது.

குழப்பமாய் ஏறிட்டுப்பார்த்தான் மருதப்பன்.

மரத்தின் மேலே இருந்த வயதான குரங்கு ஒன்று மருதப்பனை முறைத்துப் பார்த்தது. பிறகு அவனிடம் சொன்னது.

“எங்களுக்கும் அப்பா இருந்தாங்கள்ள…!?”

2 Comments on “குரங்குப் புத்தி.!”

Comments are closed.