ஜெ. பாஸ்கரன்/பாரதியை அறிவோம்

(கலைமகளில் வெளியான “கட்டுரையிலிருந்து….)

தமிழின் சிறுகதைகளில் முதலில் தடம் பதித்தவர் பாரதிதான் என்றும், வ.வெ.சு.ஐயர் அல்ல என்பதும் ஆய்வுலகம் முன்வைக்கும் முடிவு! காலத்தினால் அழியாத, கருத்தாழம் மிக்க கதைகளைப் பாரதியார் படைத்துள்ளார். வேடிக்கைக் கதைகளில் மட்டுமன்றி, எல்லாக் கதைகளிலும் இழைந்தோடும் அங்கதமும், எள்ளலும் வியக்க வைப்பவை. அமானுஷ்யம் (சூப்பர் நாச்சுரல்), சர்ரியலிஸம், மாய யதார்த்தம் (Magic realism), அறிவியல் புதினம் என எல்லா வகைக் கதைகளையும் புனைந்துள்ளார் பாரதி. செட்டி, ஐயர், பண்டாரம், சந்நியாசி எனப் பலதரப்பட்ட பாத்திரங்கள், கழுதை, குயில், பாம்பு, காக்கை, குரங்கு, எறும்பு, புழு என உரையாடும் உயிரினங்கள் அனைத்தும் கதைகளில் வந்து போகும்! அவரது நவதந்திரக் கதைகள், ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ போல சுவாரஸ்யமானவை! சந்திரிகையின் கதை, வேடிக்கைக் கதைகள், ‘பேய்க்கூட்டம்’. ‘சும்மா’, ‘காற்று’, ‘தராசு’ போன்ற குறுநாவல்கள், நாவல்கள் – புதிய கோணங்கி, சின்ன சங்கரன் கதை, வண்ணான் தொழில், காக்காய்ப் பார்லிமெண்ட், கத்திச்சண்டை என சொல்லிக்கொண்டே போகலாம்!

ஞானரதம்’ – கற்பனைத் தேரில் (‘தேர் அத்தனை தீவிரமானது அல்ல; நெடுந்தூரம் போகாது; கொஞ்சம் நொண்டி’ என்கிறார்!) ஏறி விரும்பிய இடங்களுக்கெல்லாம் செல்வது போலக் கதை. உபசாந்தி லோகம், கந்தர்வ லோகம், பந்தாட்டம், மதனன் விழா, பறவைக்கூத்து, கடற்கரை, அருவி, சத்திய லோகம், மண்ணுலகம், தர்ம லோகம் எனச் சுற்றி வருவது சுவாரஸ்யம். தர்மலோகத்தில் மின்னல் போன்ற பர்வதகுமாரியைத் தழுவி நிற்கும்போது, ‘படேர்’ என்ற சப்தத்துடன், ‘கோ’ என்றலறி மூர்ச்சை போட்டு விழுகிறார். பழைய திருவல்லிக்கேணியில், பழைய இடத்திலேயே வீழ்ந்து கிடக்கிறாராம்! ஞானரதக் கனவு முற்றுப்பெறுகிறது.

“தர்மமுள்ள இடத்தில் வறுமை கிடையாது”, “அதர்மம் தர்மத்திற்கு உணவு. ஆதலால், தர்மம் இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். இது நியாயமே. அதர்மம் முற்றிலும் இறந்து, சூன்யமாய்ப் போய்விடுமானால், பின் தர்மம் உண்ண உணவில்லாமல் தானும் மடிந்து விடும்” என்கிறார் ஞானரதத்தில் பாரதி! கவிஞர் பாரதிதாசன் இக்கதையை வியந்து, ”இது போல் ஒரு கதையை வேறு யாரால் இயற்ற இயலும்?” என்று கேட்கிறார்.

பாரதி சொன்ன பாகவதக் கதை:

பாரதி ஈரோட்டிற்கு வந்தபோது, பாரதி நேயர் எஸ்.மீனாட்சிசுந்தரனார், வானொலிப் பேட்டி ஒன்றில் பாரதியார் சொன்ன ‘பாற்கடல்’ கதையைச் சொல்கிறார்.

முன்பின் அறிமுகமில்லாத மீனாட்சிசுந்தரனாரைப் பார்த்து, “டேய், நீ பாற்கடல் கடைந்ததை நம்புகிறாயோ?” என்று கேட்கிறார் பாரதி. “பாற்கடல் கடைந்தது என்பது சரித்திரத்தில் இல்லை. ஏதோ கதை. பாற்கடல் எனறு ஒன்று பூலோகத்தில் இல்லை” என்கிறார் மீனாட்சி சுந்தரனார். அதற்கு பாரதியார் அளிக்கும் விளக்கம் வியக்க வைப்பது.

“ஒவ்வொருவர் உள்ளமும்தான் பாற்கடல். அங்குதான் திருமால் பள்ளிகொண்டிருக்கிறார். அந்தப் பாற்கடலைத் தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள் என்கிற பொழுது, அதில் தேவர்கள் நல்ல எண்ணம், அசுரர்கள் தீய எண்ணம். இந்த இரண்டு எண்ணமும் சதா நம் உள்ளத்தைக் கடைந்துகொண்டே இருக்கிறது. அதில் முதலில் வந்தவள் மூதேவி. அதற்கு என்ன அர்த்தம்? மனிதன் மிருகத்திலிருந்து உயர்ந்தான். வெகு சீக்கிரம் மிருகமாகிவிடுகிறான். அதனால் முதலில் தோன்றும் எண்ணமெல்லாம் தகாத எண்ணமாகத்தான் தோன்றும். அதற்குப் பிறகுதான் பாற்கடலில் சீதேவி என்கின்ற பொழுது அந்த உள்ளத்தில் நல்ல எண்ணம் வருகின்றது. அந்த ஆலகால விஷமும் அங்கிருந்துதான் வருகின்றது. விஷத்தைக் கண்டு எல்லோரும் அஞ்சி ஓட, சிவபெருமான் அதைச் சாப்பிட்டார். அதுமாதிரி உனக்குப் பயங்கரமான எண்ணங்கள், சிந்தனைகள் வரும்போது இறைவனைச் சரனடைந்தால் அவன் ஏற்றுக்கொண்டு அருள் புரிவான். இதுதான் அந்தக் கதையின் கருத்து.

பாஞ்சாலி சபதம் பற்றி…..

சின்ன வயதில் நண்பன் சுப்ரமணிய சர்மாவுடன் பாரதி நாடகம் பார்க்கச் செல்கிறார். அப்போது பிரபலமாயிருந்த கல்யாணராமன் ‘செட்’ நடத்திய ‘துரோபதை துகிலுரிதல்’ நாடகம் பார்த்து உணர்ச்சி வசப்படுகிறார் பாரதி. பின்னாளில் பாஞ்சாலி சபதம் எழுத இந்த நாடகமே தூண்டுகோலாயிருந்திருக்கிறது! பாஞ்சாலி, பீஷ்மர், துரோணர் போன்ற அனுபவமும் அறிவும் நிறைந்த பெரியோர்களைப் பார்த்துத் தனது கேள்விகளால் தலைகுனிய வைத்த சாமர்த்தியம் அவரை வியக்க வைக்கிறது. பின்னாளில் பெண்களைப் போற்ற வேண்டிய அவசியத்தைப் பேச வைக்கிறது.

ஊர் மக்கள் பாஞ்சாலிக்கு நேர்ந்த அநீதியைத் தட்டிக் கேட்காத போது,

“என்ன கொடுமையிது” வென்று பார்த்திருந்தார்
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமில்லா நாய்கள், விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே
பொன்னையவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்

நெட்டை மரங்களென நின்று புலம்பினார்,
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?”

அவரது அறச்சீற்றம், இன்றைக்கும் தேவையாயிருக்கிறது என்பதே அவர் ஒரு ‘தீர்க்கதரிசி’ என்பதைச் சொல்கிறது.

One Comment on “ஜெ. பாஸ்கரன்/பாரதியை அறிவோம்”

Comments are closed.