அன்னபூரணி தண்டபாணி/தேடல்

“ஏய்! என் கண்ணாடிய எங்க வெச்சித் தொலச்ச?” சங்கரன் தாத்தா காட்டுக் கத்தல் கத்தினார்.

பதிலில்லை.

“ஹூம்.. வர வர இவளுக்கு காது கேக்க மாட்டிது.. இவளால எம் பிராணன் போகுது..” என்று சத்தமாய் முணுமுணுத்தபடியே உள்ளறையை எட்டிப் பார்த்தார்.

மங்களம் பாட்டி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஏதோ துணியை தைத்துக் கொண்டிருந்தார்.

“நா கேக்கறது உன் காதில விழலயா?”

“விழுது.. விழுது..” என்றார் பாட்டி அசுவாரசியமாய்.

“அப்ப எழுந்து வந்து தேடிக் குடேன்..” சலித்துக் கொண்டார் தாத்தா.

“இங்க வாங்க!”

வயதான காலத்தில் கூட தன்னை இத்தனை அலைக்கழிக்கிறாளே என்ற கோபமிருந்தாலும் அவள் சொல்வதைக் கேட்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்பதால் மனைவியருகில் சென்றார் தாத்தா.

“உங்களுக்கு கண்ணு தெரியல.. இத ஒத்துக்காம எனக்கு காது கேக்கலைன்னு சொல்ல வேண்டியது..” என்று முணுமுணுத்துக் கொண்டே அவருடைய தலையில் மாட்டியிருந்த மூக்கு கண்ணாடியை எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டு பாட்டி பழிப்புக் காட்ட, தாத்தா அசட்டு சிரிப்பு சிரித்தார்.