
அடிக்கடி என்வாசல் கதவுகளைத்
தட்டுகிற அந்த அந்நியன் யார் ?
சிலசமயம் பூச்செண்டுகளைக்
கொடுத்துவிட்டுத் திரும்புகிறான்
சிலசமயம் உடைந்த கண்ணாடிக்
குடுவைகளை ஏந்தி நிற்கிறான்
யார் அவன்
என் பிறந்தநாளுக்கு சரியாக
வந்துவிடுகிறான்
மெழுகுவர்த்திகளை
ஒவ்வொன்றாக நான் ஊதி அணைத்து முடிப்பதற்குள்
தனக்கான ” கேக் “துண்டுகளைக்கூட
வாங்காமல் காணாமல் போகிறான்
அம்மணமாய் நான் நிற்கையில்
பொருத்தமான உடைகளை
பூட்டிவிட்டுப் போகிற அவனேதான்
கடைவீதிகளில் நான் நடக்கும்போது
கட்டியிருக்கும் வேட்டியையும்
கழற்றிவிட்டுப் போகிறான்
யார் அந்த அதிகப்பிரசங்கி?
பஞ்சிலே படகு செய்து
கடலில் ஓடவிட யத்தனிப்பேன்
என் தலையில் குட்டி
மரப்படகு தரும் அவன்
என் நண்பனா எனில் நண்பனும்
அல்ல
அயிரை மீன்களுக்கு தூண்டில்
போடுவேன்
மாட்டிய மீன்களை எடுத்து ஆற்றிலேயே விட்டுவிட்டு
தண்ணீர் பாம்புகளை தூண்டிலில் கோர்த்துவைத்து சிரிக்கும்
அவன் என் பகைவனா எனில் பகைவனும் அல்ல
இலையுதிர் காலத்தில்
சருகுகள் சேகரிக்கவும்
வசந்தகாலத்தில் பூக்கள்
சேகரிக்கவும்
கூடையுடன் வருகின்ற அவன்
வணிகனா எனில்
வணிகனும் அல்ல
யுகவெளிகளில் கோடை மழை கூதிர் என மாறிமாறித் தோன்றுவது அவன் முகம்தான்தானா
ஆம்…அவன் முகமேதான்
