
சொல் புதிது, இணைய கால, 53வது கவி அரங்கம், தேதி 11.12.2023 கிழமை திங்கள் , நேரம் மாலை 05.10, “நின்று விட்டேன் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
அந்த அடர்ந்த காட்டில்
வெளிச்சமே உட்புக அச்சப்படுமோ
என நினைக்கும் வண்ணம்
இருள் சூழ்ந்து நின்றது.
வெளிச்சத்தைத் தேடி
இருளில் பலநாள் ஓடினேன்
மூச்சிரைக்க ஓடினேன்
இருளே தொடர்ந்தது.
சோர்வாகத் தளர்ந்தேன்
உடல் ஓய்வு கேட்டது
மேலே செல்லத் தயங்கினேன்
வெளிச்சம் வரவேயில்லை.
தளர்வு உந்தித்தள்ள
கால்கள் நின்றுவிட
இருளே வாழ்வென்று
அங்கேயே நின்று விட்டேன்.
எனக்குப் பின்னால் வெளிச்சம்
என்னைத் துரத்திக் கொண்டு
மெதுவாக வருவது தெரியாமல்
இருளில் நின்று விட்டேன்.
சிட்லபாக்கம்
11.12.2023 மாலை 05.10
