ஆகாசமூர்த்தி/நீர்வழிப் படூஉம்

நீர்வழிப் படூஉம் நாவல் கலை நேர்த்தியில் உள்ளடக்கச் செறிவில் உன்னதத்தை அடைந்த நாவல்.

நேற்று காலை முகநூலில் வாழ்த்துச் செய்திகளைப் பார்த்தவன், உடனே தேவிபாரதிக்கு அழைத்துப் பேசினேன். அவர் அப்படியா. இன்னும் அறிவிக்க வில்லையே ஏன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

சாகித்ய அகாடமி விருது கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன… தலைமுறைகள் கடந்த படைப்புகள் எதுவும் விருதை முன்னிட்டு நின்று கொண்டிருக்கவில்லை. பொய்த்தேவு, பசித்த மானுடம், புயலிலே ஒரு தோணி போன்ற எத்தனையோ கிளாசிக் நாவல்கள் வெளிவந்த சமயங்களில் எத்தனை விருதுகளை வாங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் நீர்வழிப் படூஉம் நாவல் ஒரு காவிய நாவல். குடி நாவிதர்கள் வாழ்வியலை அச்சு அசலாக அழகியல் நேர்த்தியுடன் முன்வைத்த படைப்பு. எந்த இசங்களுக்கும் இடம்கொடாத ஒரு இனக்குழுவின் வரைவியலை ஊடுபாவாக கொங்கு வட்டார மொழியில் சொல்லிச் செல்கிறது.

இலக்கியங்கள் அனைத்துமே மேல்வர்க்க மேல்சாதிக்காரர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் மாறிவிட்டது. பின்நவீனத்துவ உலகில் ஆதியில் மருத்துவர்களாக இருந்து, பிறகு ஒடுக்கப்பட்டவர்களாக மாறிய சமூகத்தின் குரலை மிக நாகரீகமாக கதையாடிச் செல்கிறார் தேவிபாரதி. அடங்கிய குரலில் என்று சொல்லமுடியாது. ஆகச்சிறந்த மொழியின் செப்பமான வடிவ எழுச்சியோடு.

ஒரு குடும்பம் அவர்களின் உற்றார் உறவினர்களைச் சுற்றி நிகழும் அக புறச் சிக்கல்களை, மாறாத நேசத்தை, பிரிவை, அலைக்கழிப்பை, மரணத்தை பேசுகிறது நாவல். என்றாலும் அதிலிருந்து ஒரு இனக் குழுவின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் விதத்தில் தொன்மத்திற்கும் நவீன வாழ்விற்கும் இடையே கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சிதறிக் கிடக்கும் பண்பாட்டு விழுமிய கண்ணிகளைப் பிணைத்து ஒரு சங்கிலியாக்கித் தந்ததில் தேவிபாரதி வெற்றி கண்டிருக்கிறார்.

பிற சாதிகளைவிட ஒடுக்கப்பட்ட சமூகங்களே பழக்க வழக்கம் நாகரிகத்தில் உயர்ந்ததாகக் கருதவேண்டும். அவர்கள் குரலை அவர்களின் கிளர்ச்சி மனநிலையை தங்கள் அளவிலேயே ஒடுக்கிக்கொண்டு பிற சமூக மக்களோடு உறவைப் பேணி வருகின்றார்கள். தேவிபாரதி அதே நாகரிகத்தோடு அவர்களின் அழுத்தப்பட்ட குரலைப் பகிரங்கப்படுத்துகிறார்.

நீர்வழிப் படூஉம் நாவலில் இப்படியான தடங்கள் ஏராளம் உண்டு. கவுண்டர் சாதி வீடுகளில் சொற்ப கூலிக்கு கல்யாண வீட்டிலிருந்து கருமாதி வீடுவரைக்கும் சகலமும் ஒரே நாவிதர், அல்லது உடன் அவர் மனைவி, இருவர்தான் தலைமேல் கொண்டு பாடு தொலைக்கிறார்கள். ஓடாய்த் தேய்ந்து மாய்கிறார்கள்.

காரு மாமா எனும் கதாபாத்திரம் நாவிதர் வாழ்வில் மட்டுமல்ல பொதுவாக குடும்ப அமைப்பியல் முறையில் ஒரு பொறுப்பான தந்தையின் பிரதி. தன் குடும்பத்துக்காக இரத்தம் சிந்தி என்ன பாடுபடுகிறார். பேரன்பு கொண்டவர்.

தன் மனைவி வேறொரு உறவைத் தேடிப் போய்விடுகிறார், குழந்தைகளை அழைத்துக் கொண்டு. காருமாமா காடு மேடாய் அலைந்து திரிகின்றார். எங்கு பார்க்கிலும் தன் மகளைப் பார்க்கிறார். ஏமாறுகிறார். கண்ணீர் வராமல் கடக்கமுடியாத பகுதிகளை தேவிபாரதி கலையமைதி குறையாமல் பதிவு செய்கிறார்.

குறிப்பாக இந்த நாவலில் வரும் பெண்கள் மனம் கவர்கிறார்கள். காரு மாமா கடைசியில் ஒரு மண் உதிரும் குடிசையில் ஒடுங்கிய பிறகு அக்கறை காட்டும் பெண்கள் வருகின்றார்கள். அவர்களின் உளவியலை நுட்பமாக சித்தரித்து இருப்பார்.

தேவிபாரதியின் ஆவணப்படம், பேட்டிகளில் அவ்வாறே ஒரு நெகிழவைக்கும் பண்பை அன்புக்கு நெக்குறுகும் ஒரு இயல்பை அவரிடம் கண்டேன்.

நீர் வழிப்படூ உம் நாவல் சாகித்ய அகாதமி விருது பெறுவதற்கு முழுத் தகுதி பெற்றது. நவீன இலக்கிய வாசக வெளியும் அதை உறுதி செய்திருக்கின்றன. தேவிபாரதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.