கல்யாண்ஜி கவிதை

நடமாட்டமில்லாத கோவில் கல் மண்டபங்களில்
பச்சைப் பாசியாக அப்பியிருப்பார்.
புது உடுப்புகளை மழைக் காலத்தில்
அடுத்தடுத்து அணிந்து நனைந்தும் நனையாமல்
மழைக்கோட்டுடன் வருகிற ஒரு சகா ,
முந்திய ஊர் அலுவலகத்தில் இருந்தார்.
அகாலத்தில் வாட்சாப் அனுப்பியிருக்கும் சிநேகிதிக்கு
அவருடைய அம்மாவுக்குப் பிடித்த
கனகாம்பரமும் கருகமணியும்
நினைவுக்கு வந்துவிட்டது.
வெட்டிய சிகரெட் அட்டைகளில் குப்பு ஆச்சி நாய்க்குட்டிகள்
செய்யத் துவங்குவது ,
வாசலில் மழைக்கொப்புளங்கள் நகரும் போதுதான்.
மழைக்காலம் நகர்ந்து சென்றுவிடக் கூடாது
என்று தான் செய்யும் கடிகார ரிப்பேரை
நிறுத்திவிடுவார் கோவில் வாசல் கடைக்காரர்.
மழைச்சத்தம் மட்டும் கேட்கும்படி
கதவுகளை அடைத்துக்கொண்டு
எதுவும் அணியாமல் இருப்பேன் என்கிறார்
விடுதி அறையில் தங்கி
வார இறுதியில் ஊருக்குச் செல்லும் நடுத்தரர்.
முன்பு கடலில் மழை
பெய்வதைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிய எனக்கு
எங்கள் ஊர் மயானச் சிதையில்
எரிய வேண்டும் போல இருக்கிறது இன்று.