ஜெயதேவன் கவிதை

பறவை ஊசாலாடிவிட்டு பறந்த
கிளையில் இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறது பறவை.

தாத்தா அமர்ந்திருந்து எழுந்த பின்னிருக்கும் நாற்காலி சூட்டிலும்
தாத்தா இருக்கிறார்.

கலவி முடிந்து விலகிய பின்னும் கொஞ்சம் எஞ்சியே இருக்கிறது நிறைவுறாத கலவி.

திருமணம் முடிந்து கணவன்
வீடு சென்ற பின்னும் மகள் இருக்கிறாள் பிறந்த வீட்டில்.

தலைவன் பேசி முடித்து கூட்டம்
கலைந்த பின்னும் இன்னும்
பேசிக் கொண்டே இருக்கிறான்
வந்தவரிடையே.

மழை நின்ற பின்னும்
மழை பெய்யவே செய்கிறது
மனதில்

முடிந்தவையெல்லாம் முற்றும் அல்ல
முற்றும் என்பது என்றும்
முடிவுறாதது