மகேஷ்/பொறுப்பு

மழை நீர் வேகமாய் அடித்தளத்தில் பாய்ந்தது. புத்தக அலமாரியின் கடைசித் தட்டில் இருந்த புத்தகங்கள் அலறின. மேல்தட்டில் மௌனமாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு பழைய புத்தகம்.

“தாத்தா ஏதாவது செய்.. நீர் வந்து கொண்டே இருக்கிறது. நைந்து கூழாகிவிடுவோம்..”

தாத்தா புத்தகத்து நூறுக்கு மேல் வயதிருக்கும். ஞானியைப் போல்
எந்தச் சலனமில்லாமல் சுற்று முற்றும் பார்த்தது. இந்த இரவுக்குள்
அலமாரியில் இருக்கும் நூற்றுக்கணக்கான நூல்கள் அழிந்து விடும்.

“நாம் முக்தி பெரும் நேரம். எதற்கு கூக்குரல். கண்மூடி பிரார்த்தனை
செய்யுங்கள். “

இவற்றையெல்லாம் ஆசையாசையாய்ச் சேகரித்தவர் மறைந்து விட்டார்.
மகனுக்கு படிப்பதில் அக்கறையில்லை. குப்பைகளோடு குப்பையாய் கராஜில் போட்டிருக்கிறான். அம்மாவிற்காக. அப்பாவின் நினைவுகளை
இந்தக் குப்பைகளில் அம்மா தேக்கி வைத்திருக்கிறாள்..

அவரும் அவளும் படித்துக் கொண்டே இருப்பார்கள். படிப்பு பேச்சு
விவாதம் சண்டை ஜன்னல் மழை காஃபி முந்திரி..

எல்லாப் புத்தகத்திலும் அவரின் கையெழுத்து வாங்கிய தேதியுடன்… சிவப்பு மசியில் அடிக்கோடுகள்..

நீர் மட்டம் ஏற ஆரம்பித்தது .. புத்தகங்கள் மிதந்தன.. சில தாத்தா புத்தகத்தின் கையோரம் ஒதுங்கின.

காலபுருஷன் அழித்துக்கொண்டே போகிறான்.

எத்தனையோ மனிதர்களின் வாழ்நாள் உழைப்பு. கண்ட சத்தியங்களைக்
காப்பாற்ற இன்றைய யாருக்கும் பொறுமையில்லை.. விருப்பமில்லை.

அறிதலை விட பொழுது போக்கில் காலம் கழிக்கும் தலைமுறை.
முட்டாள்களாய் அழிந்து போவதில் கவலை கொள்ளா மனப்பாங்கு.

தாத்தா நகர்ந்தது.. ஒட்டியிருந்த நூல்கள் மூழ்கின..

2 Comments on “மகேஷ்/பொறுப்பு”

  1. அருமையாக உள்ளது.
    மனம் தான் எல்லாம் பார்த்து வேதனை அடைகிறது.
    புத்தகங்களின் அருமை தெரிந்தவர்கள் குறைந்து விட்டது.

  2. பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் பல படிமங்களை உள்ளடக்கிய படைப்பு

Comments are closed.