நாகேந்திர பாரதி/குப்பைத் தொட்டில்

அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட கதை


மடியில் இருக்கும் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது . இப்படித்தானே சிரித்துக் கிடந்தார்கள் அவள் பெற்ற மகனும் மகளும் ஒரு காலத்தில் அவள் மடியில் இரட்டைக் குழந்தைகளாய் .

கைம்பெண்ணான நான்கே மாதங்களில் வயிறு திறந்தது . வந்து விழுந்தார்கள் . ‘தன் வாழ்க்கையும் திறக்கும் . அவர்களால் சிறக்கும் ‘என்று சீராட்டிப் பாராட்டி வளர்த்தாளே . எத்தனை வீடுகளில் பாத்திரங்கள் தேய்த்து , வீட்டு வேலை பார்த்து , படிக்க வைத்து , மகனுக்கும் மகளுக்கும் பிடித்தவர்க்கே மணமுடித்துக் கொடுத்து .

அவ்வளவுதான் போய் விட்டார்கள் .மகன் மாமியார் வீட்டோடு. மகளும் வருவதில்லை . எல்லாம் இவள் உடம்பில் தெரிந்த வெண் புள்ளிகள் பரவி ஏற்பட்ட இந்த வெண்மை நிறத்தால் . இது ஒட்டுகின்ற வெண் குஷ்டம் இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார் . இருந்தும் நெருங்கப் பயம் அவர்களுக்கு . தங்களுக்கும் பரவி விடுமோ , தங்கள் குழந்தைகளுக்கும் வந்து விடுமோ . டாக்டர் சொல்வதை நம்பத் தயாராய் இல்லை . ஒதுங்கி விட்டார்கள் . இல்லை , ஒதுக்கி விட்டார்கள் .

வாழ்வின் பிடித்தம் போய் வெறுப்பே வந்து விட்டது இவளுக்கு . உடல் முழுக்கப் போர்த்தியபடி ஒதுங்கி விட்டாள் . தன் மேலே வெறுப்போடு . தன் உடல் பார்க்கத் தானே தயக்கப்பட்டு .

இனி ஏன் வாழ்க்கை என்று முடிவெடுத்த அன்று தான் அது நடந்தது . வீதியில் நடந்து வரும்போது ஓரத்துக் குப்பைத் தொட்டியில் இருந்து அழுகைச் சப்தம் . பிறந்து சில மாதங்கள் இருக்கலாம் . இவள் தூக்க , அழுகை அடங்கி இவளைப் பார்த்துச் சிரித்தது . இவள் தூக்கி அணைக்க அவள் தோளில் ஒட்டிக் கொண்டது . அருகில் கிடந்த உடைந்த சேரில் கவனமாக உட்கார்ந்து அந்தச் சிசுவையே கவனித்தாள் .

‘நெருங்கப் பயப்பட்ட பலர் நடுவே என் நெருக்கம் விரும்பும் இவன் . இவனை விட்டுப். போக மாட்டேன் . என் வெண்மை நோயைப் பற்றிப் பயப்படாமல் நெருங்கிக் கிடக்கும் இவன் வளர்வான் , இந்த வெண்மை நோய் அம்மாவுடன் சேர்ந்தே . இந்த நோயைப் பற்றிப் பயப்படாமல் , கவலைப்படாமல் . நிச்சயம் . இவனின் இந்தச் சிரிப்பு என்றும் நிலைக்கும் என்னிடம் . என் தோள் கிடந்து , என் கைபிடித்து ஒட்டி உரசியபடி நடந்தபடி வளர்வான் . இந்தக் குப்பைத் தொட்டியே எங்களை வாழ வைக்கும் . குப்பை பொறுக்கி , கிடைத்த வேலை செய்து இவனை வளர்ப்பேன் . ‘

எண்ணங்களில் இருந்து விடுபட்டு ஒரு நிம்மதியோடு , குப்பைத் தொட்டி அருகே கிடந்த அந்த பாதி உடைந்த அழுக்குச் சேரை விட்டுக் கவனமாக எழுந்தாள் . வாழ்க்கைப் பிடிப்பு கிடைத்த உறுதியோடு தன் குடிசை நோக்கி நடந்தாள் . அவளோடு இறுக்கிக் கிடந்த அந்தக் குழந்தையின் வாய் மலர்ந்து ‘ ம்மா ‘ என்றது .

————-

One Comment on “நாகேந்திர பாரதி/குப்பைத் தொட்டில்”

Comments are closed.