
நவம்பர் மாதம் வந்தாலே மனசு பரபரக்க ஆரம்பித்து விடும். லைப் சர்டிபிகேட் கொடுக்க நாங்கள் வேலை பார்த்த மத்திய அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே.
ஓய்வு பெற்ற தோழிகள் ஒருவரை ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்று செல்லலாம் என்று தீர்மானித்துக் கொள்வோம். இது வருடத்தில் ஒரு முறை நாங்கள் சந்திக்க ஒரு வாய்ப்பாயிற்றே. “இப்போது தான் டிஜிட்டலில் ஆன்லைனில் கொடுக்கலாம் என்று வந்து விட்டதே? எதுக்குமா வீணா அலைச்சல் ?”என்றான் மகன்.
நான் அவனுக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. குறிப்பிட்ட நாளில் சுறுசுறுப்பாக காலையில் சீக்கிரமே எழுந்து சமையலை முடித்துவிட்டு எத்திராஜ் சாலையில் இருக்கும் அலுவலகத்திற்கு ஆட்டோ பிடித்து சென்றாகி விட்டது. இன்னும் தோழிகள் யாரும் வரவில்லை.
உள்ளே சென்றபோது ஒரு நாற்காலியில் சோர்வாக ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார். அருகில் போனதும் தான் அது என் தோழி சுகந்தா என்று தெரிந்தது. என்னை பார்த்ததும் உற்சாகமாக நாற்காலியை விட்டு எழுந்த சுகந்தா ” நீ எப்படிடீ இருக்க?” என்று என்னை கட்டிக் கொண்டாள்.
இரண்டு வருடங்களாக கேன்சரில் துன்புற்று பிழைத்து வந்திருக்கிறாள் அவள். ஒவ்வொருவராக எங்கள் நெருங்கிய தோழிகள் நாலு பேர் வந்து விட்டார்கள். எல்லோருமே சுகந்தாவைப் பார்த்ததும் பதறிப் போய் ” நீ ஏண்டி சிரமப்பட்டு வந்த? பேசாம ஆன்லைன்ல கொடுத்து இருக்கலாம் இல்ல?” என்று தான் முதலில் கேட்டார்கள்.
” இரண்டு வருஷமா வர முடியல. ஆன்லைன்ல தான் கொடுத்தேன். இந்த வருஷம் நான் உயிரோடு தான் இருக்கேன்னு நம்ம ஆபீஸ்க்கு மட்டுமல்ல . உங்களுக்கெல்லாமும் காட்டிட்டு போகலாம்னு வந்தேன்” என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள்.
” உயிரோடு மட்டும் இல்ல. சுகந்தா உயிர்ப்போடவும் இருக்கேன்னு எங்களுக்கு காட்டி விட்டாய். ” என்று நாங்கள் மிக்க அன்புடன் சுகந்தாவை கட்டி தழுவி கொண்டோம்.

சிறிய சிறப்பான கதை.
அருமை! உயிரின் விலை எவர் கற்பனைக்கும் எட்டாத து !
அதன் ஈடு அது மட்டுமே!