சாந்தி ரஸவாதி/39 சைஸ்

புதிய மாதவி அவர்களுடைய கதை மிகப் புதுமையானது. இதை படித்த உடனே தட்டிய பொறி. கதையின் கரு_
அவன் அவள் அது.

அவன் _ நாயகன் கடைசிவரை வரவே இல்லை. அவன் வருவானா என்பது தான் இதில் பெரிய கேள்விக்குறி.

அவள் _ நாயகி ஒரு நேர்காணலுக்காக சென்னை வருகிறாள். ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போவதாக சொன்ன அவன் வரவில்லை. குறுஞ்செய்தி மட்டும் – “நான் வர முடியாது உன்னை சந்திக்க விருப்பமில்லை”.

அது _ 39 சைஸ் ஷர்ட்.

இடிந்து போய் ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளும் அவளுடைய பெட்டியும் அனாதையாக.

கையில் இருந்த சொற்ப பணத்தில் டாக்ஸி பிடித்து தோழி வீட்டுக்கு சென்றவள், அவனுடைய நம்பரை கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். மீண்டும் ஒரு குறும் செய்தி “உன்னோடு பேச விருப்பமில்லை”

அழுகை பொங்கி வருகிறது தோழியிடம் காண்பித்துக் கொள்ளாமல் கனவும் தூக்கமுமாக இரவைக் கழித்து ஒருவேளை இன்றைக்கு வருவானோ என்று எதிர்பார்த்து அவனுக்கு பிடித்த வெளிர் மஞ்சள் நிற சேலை கட்டி நேர்காணலுக்கு புறப்படுகிறாள். கையில் காசு இல்லாததால் ட்ரெயினில் பயணித்து செல்கிறாள். புது கார் வாங்கி இருப்பதாகவும் அதில் தன்னை வைத்து அழைத்து செல்ல போவதாகவும் அவன் கூறின வார்த்தைகளின் ஈரம் என்னும் காயவில்லை.

நேர்காணல் அதிகாரிகள் குழு. அதில் அவன் பெயர் கொண்டவர். அவன் இல்லை. அதை பார்த்ததும் அவளுக்குள் இருக்கும் கணக்கு ப்புலி சீறி எழுந்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவளுடைய நேர்காணல் ஒரு கணக்கு டீச்சர் வேலைக்காக. வேலை உறுதியாகிவிட்டது. நாயகி கணக்கில் ரொம்ப ஸ்ட்ராங். எத்தனை ஒரு குழப்பமான மனநிலையிலும் கணக்கு கை கொடுத்தது நிறைவாக இருந்தது. இதே ஊரில் இருந்தால் அவன் வருவானா? மீண்டும் மீண்டும் அதே கேள்வி.

பசிக்கு ஒரு வேர்க்கடலை பொட்டலம் வாங்கி ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி மெரினா கடற்கரை. அங்கே மாநிலக் கல்லூரி பெஞ்ச். அங்கேயும் அவன் நிழல். அண்ணா சமாதி எம்ஜிஆர் சமாதி கடந்து அந்தப் பெண்ணோடு சமாதி கண்கலங்க வைக்கிறது. இறுதி ஊர்வலத்தில் வண்டியில் இருந்து தள்ளி விடப்பட்ட காணொளி காட்சி வந்து போகிறது. அடிப்பாவி இந்த இடத்தில் இந்த மனுஷன் கூட வந்து உறங்குதியே. இதுதான் உன் வெற்றியா?
அவளுக்காக அழ வேண்டும் போல இருந்தது ஒரு பெஞ்சில் உட்கார்ந்து அவளுக்காகவும் தனக்காகவும் அழுது தீர்த்தாள்.

கடற்கரையில் ஆண் பெண்ணாக நிறைய பேர் ஒவ்வொரு பெண்ணிடமும் போய் கேட்க வேண்டும் போல இருந்தது இவன் நாளை வரவில்லை என்றால் என்ன செய்வாய்? எப்படி இருக்கும்? பதில்கள்:, நாளை வரா விட்டால் அடுத்த நாள் வருவான். வராவிட்டால் என்ன இன்னொருவன் வருவான். வராவிட்டால் எனக்கு என்ன நஷ்டம் அவனுக்கு தான் நஷ்டம். இந்த மாதிரி பதில்கள் வருமோ என்று தோன்றியது.

டிரெயினைப் பிடிக்க பிளாட்பார்ம் வந்தாயிற்று. அடியில் குளிரில் படுத்திருந்த மனிதனுக்கு அந்த 39 சைஸ் ஷர்ட்டை போர்த்தி விடலாமா என்று தோன்றியது. சட்டையின் விலை 4499 அவளுடைய 7000 சம்பளத்தில் அது ரொம்ப்ப் பெரிய பட்ஜெட்ட அந்த கடனை அடைக்க இன்னும் ஆறு மாதமாகும்.

நினைத்து நினைத்து உருகி உருகி அவளே இரு கூறாக பிரிந்து ஒருத்தி மற்றவளை சமாதானப்படுத்தி படுக்க வைக்கிறார் என்று தோன்றுகிறது.

இந்த இடத்தில் காலம் அப்படிங்குற பரிமாணம் வருது. ரொம்ப நாள் ஆகியும் இதே நிலைமைதான் என்று தோன்றுகிறது மெலிந்து போன உடலைக் கிடத்தி லேபிளை கிழித்து சட்டையை மேலே போர்த்துகிறாள் அவள். சகுந்தலை ஆதிரை எல்லோரும் நினைவுக்கு வருகிறார்கள். எல்லோரும் காத்துக் கொண்டிருப்பவர்கள் தான்.
39 சைஸ் ஷர்ட் அவள் மீது கிடக்கும்போது அவன் ஆக்கிரமிப்பதாக நினைத்து சட்டையை கழற்றி எறிகிறாள். கனவுகள் அழுகை. கண்ணீரே மயக்கமாக்கி தூங்க வைக்கிறது.

அந்த 39 சைஸ் ஷர்ட் பாரசூட் மாதிரி விரிந்து நீல நிற ஆகாயத்தில் அவளை தூக்கிக்கொண்டு பறக்கிறது. மெல்லிய சிறகு ஒன்று காற்றில் படபடக்கிறது. கதை இப்படி முடிகிறது.

ரொம்ப சூட்சுமமாக சொல்லப்பட்ட விஷயங்கள். அவர்களின் பிரத்யேக தருணங்கள். அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை நம்முடைய யூகத்துக்கே விட்டுவிட்டார் கதாசிரியர். படிப்பவர்கள் புத்திசாலிகள். அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம் மீது நம்பிக்கை வைத்து எழுதி இருக்கிறார்.

இதுல ஒரு ஆன்மீக கோணம் கூட தெரிகிறது. கடவுளை நினைத்து நினைத்து உருகி இறுதியில் அவருடன் கலக்கும் அந்த நிலை, ஜீவசமாதி இதெல்லாம் தோன்றுகிறது.

கதை மிகச் சிறப்பு அவன் அவள் அவர்களை பற்றி எந்த தகவலும் நமக்கு தெரியாது. ஆனாலும் இந்த கதை மனதில் எப்பொழுதும் இருக்கப் போகிறது. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள் கதை படிக்க வாய்ப்பு கொடுத்த அழகிய சிங்கர் அவர்களுக்கு நன்றி. 🙏🏻