ஆர்க்கே/துயர் கடத்தல்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் -61

எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று நமது நண்பர் ஆர்கே அவர்கள் எழுதி பூபாளம் இலக்கிய இதழ் கீதம் 25 , ஜூன் 2023 இல் வெளிவந்த இந்தக் கவிதை. மென்மையாக மனம் வருடி நம்பிக்கை ஊட்டும் கவிதை.

ஒன்றும் அவசரமில்லை

துயர அலைகள்
அடங்கிக் கரையேறட்டும்

சூறாவளி சுழற்சியுதிர்த்து
மென்காற்றாய் உருப்பெறட்டும்

எரித்த சூரியன்
தன கிரணங்கள்
மெல்ல மடக்கட்டும்

உப்பருவியோடிய
முகத்தடத்தில்
மெல்லப் புன்னகை
குடியேறட்டும்

கனவும் வலியும்
துக்கமும் துன்பமும்
அவரவர் மனங்களின்
அக அந்தரங்கங்கள்

புரிதலன்றி உணர்தல்
சாத்தியமற்றது

ஒன்றும் அவசரமில்லை

மெல்லத் துயர் துடைத்து
முகம் துலக்கமுற வா

இனி நீ வருகையில்
உன்னியல்பினை மட்டும்
பொதுவினில் பகிர்ந்து
உள்ளத்து வலிகளை
உனக்குள்ளே பூட்டி வை

தனிமையும் உளத் தளர்வும்
உனக்கேயான பிரத்தியேகங்கள்

மெல்ல இயல்புக்கு வா
ஒன்றும் அவசரமில்லை

—————-