
சொல் புதிது இணைய கால கவியரங்கம் 62
தேதி: 20/12/23
நேரம்: மாலை 5.35
வாசித்தது : ஆர் வத்ஸலா
…………………….
உனக்கு நேரமில்லை
என்னிடம் பேசவோ
குறுஞ்செய்தி அனுப்பவோ
என்னைப்பற்றி
நினைக்கவோ
என் மேல் கொள்ளை அன்பு இருந்தாலும்
உனது பணிகளை
அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்றாற்போல்
வரிசை படுத்திக் கொள்கிறாய்
தினமும் காலையில்
அவ்வரிசைப்படி
தினமும்
காலை முதல் இரவு வரை
முடிக்கிறாய் பணிகளை
ஒவ்வொன்றாக
நேர்மையுடன்
பல பணிகளை முடித்தாலும்
மிச்சம் இருந்து விடுகின்றன
ஒரு சில
எப்போதும்
பட்டியலின்
கடைசியில்-
என்னிடம் பேசுவது
அல்லது
குறுஞ்செய்தி அனுப்புவது
போன்றவை
மறுநாளும்
அதற்கு மறுநாளும்
அதற்கு மறுநாளும்
அதற்கு மறுநாளும்
தயாராகிறது
பட்டியல்
அதே போல
“அம்ருதா” அக்டோபர் 2023
