
63 ஆவது இணைய காலக் கவியரங்கம்
மாலை 5.43 மணி
கருவறைக்கும் கல்லறைக்கும்
நடுவில் பாதை நீள்கிறது!
தடைக்கற்கள் பல!
மாயத்திரைகள் பல!
போர்வாள் சுழற்றித்
திரைகளைக் கிழித்துக்
கற்களை அகற்றி
நடந்து நடந்து
கால்கள் ஓய்கின்றன!
கருநிறப் போர்வையாக
இருள் மேகங்கள் சூழ்கின்றன!
இருளை விரட்டியடிக்க
ஒளி தீபம் ஏற்றி ஏற்றிக்
கரங்கள் ஓய்கின்றன!
முதுகில் ஏறிய சுமைகள்
பாரமாய் கனக்க
இறக்க முடியா இயலாமை!
நடையில் தள்ளாட்டம்
உடலும் ஓய்கிறது!
வழியில் சிதறிக் கிடக்கும்
கனவுகளின் மிச்சங்களை
வாழ்க்கையின் எச்சங்களைத்
திரட்டி சேகரித்து
சுவைக்கப் பார்க்கையில்
நிறைவுறுகிறது இந்த
நீண்ட பயணம்!
