புவனா சந்திரசேகரன்/சாலைகளின் வாக்குமூலம்

சொல் புதிது
அழகிய சிங்கரின் 65 ஆவது இணைய காலக் கவியரங்கம்

23/12/2023

பூமியில் கிறுக்கப்பட்ட கோடுகளாக
வளைந்தும் நெளிந்தும் நீண்டும்
இலக்கில்லாமல் நடந்து கொண்டே
எங்கெங்கோ திரிகிறோம்!

காலடிச் சுவடுகளைக் காலச் சுவடிகளில்
காவியங்களாகப் பதிந்து கொண்டு
கவலையில்லாமல் நாங்களும்
மௌன மொழியில் பேசுகிறோம்!

வாகனங்களின் சக்கரங்கள் ஓயாமல்
உருண்டு உருண்டு உரசித் தேய்க்கையில்
காயங்களையும் வலிகளையும்
தாங்கி வலுவேற்றிக் கொண்டு
கண்ணீரை மழைநீரில் கரைக்கிறோம்!

குழந்தைகளின் காலடிகள் பூக்களின் வருடல்!
மகிழ்ச்சி கீதம் பாடுகிறோம் நாங்கள்
!
பிழைக்க வழியின்றிப்
பெட்டி படுக்கையுடன்
புலம் பெயரும் ஏழைகளின் காலடிகள் நெருஞ்சி முட்களாக இதயத்தில்
தைக்கையில்
சோக கீதம் பாடுகிறோம்!

தொற்று பரவிய காலகட்டத்தில்
ஆளில்லாச் சாலைகளாக நாங்கள் வெறிச்சோடி நின்றபோது
மரணப்பூக்களின் மணம் காற்றில் பரவிட
நிலை கொள்ளாமல்  தவித்து நின்றோம்!

இன்பமோ, துன்பமோ  அனைத்தையும் கடந்து
மனிதர்களை விலங்குகளை முடிந்தவரை அலுக்காமல் சளைக்காமல்
பயணிக்க வைத்தபடி
தொடர்கிறோம் எங்கள் வாழ்வை!

One Comment on “புவனா சந்திரசேகரன்/சாலைகளின் வாக்குமூலம்”

  1. அருமை.
    வாழ்வின் நிஜம் அப்படியே
    சொல்வழி கவிதை ஆகி
    பரிமளித்து நெஞ்சைக் கரைய செய்கிறது.

Comments are closed.