நாகேந்திரபாரதி/இணைய வழிக் கவியரங்கம் – 65

எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் எட்டாவது கவிதையாக இன்று சுஜாதாவின் ‘ கணையாழியின் கடைசிப் பக்கங்கள் ‘ புத்தகத்தில் உள்ள ‘ தமிழ்நாட்டு கவிஞர்களுக்கு ஒரு விண்ணப்பம் ‘ கட்டுரையில் இருந்து இந்தக் கவிதை .

‘உண்மையான கவிதைக்கு இதயத்தில் கொஞ்சம் ரத்தக் கசிவு வேண்டும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது ‘ என்ற கருத்துடன் சுஜாதா அவர்கள் கவிஞர் ஜெயபாலன் அவர்களின் இந்தக் கவிதையைக் குறிப்பிட்டு உள்ளார்.

யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் ப்ராங்போர்ட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

நானோ
வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம் போல்
ஓஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா ?

பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழியவிட்டு
தொலைதேசம் வந்தவன் நான்

என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத்தோட்டம் ?

——————–ஜெயபாலன்