(பாரதியார் சரித்திரம்)

எங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. அந்த சமயங்களில், நாங்கள் நம்பிக்கையெல்லாம் இழந்த பிறகுங்கூட, யாராவது ஒரு நண்பர் சமய சஞ்சீவியாகத் தோன்றி ஒத்தாசை செய்வது சாதாரணமாக நடந்து வந்தது. அம்மாதிரியே பாரதியார் மேற்கண்ட விதம் பெரிய சங்கடத்துக்குள்ளாகியிருந்தபோது, அகஸ்மாத்தாகக் ‘குவளை’ கிருஷ்ணமாச்சாரியார், எங்கிருந்தோ வந்து தோன்றினார். பாரதியாருடன் கலந்து பேசி நிலைமைத் தெரிந்து கொண்டார். மற்றுமொரு நண்பரான ஸ்ரீ சுந்தரேசய்யரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வேறு வீட்டிற்கு ஸ்ரீ பாரதியார் புக ஸ்ரீ சுந்தரேசய்யரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இருள் நீங்கிற்று, ஒளி பிரகாசித்தது.
இந்த சம்பவத்தைத்தான் “கண்ணன் என் சேவகன்” என்னும் பாட்டில், ‘எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்’ என்று சந்தோஷமாகக் கூறியிருக்கின்றார் பாரதியார்; அளவளாவ நண்பர் இல்லாததால் வருந்திக் கொண்டிருந்த ஸ்ரீ பாரதியாருக்குச் சென்னையிலிருந்து நண்பர் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் வந்து சேர்ந்தார். அவர் புதுச்சேரியில் வசித்தவராகையால் பலரை அறிமுகப்படுத்தி வைத்தார், எப்படியோ தனியாகச் சமாளிக்க தைரியமுண்டாகிவிட்டது. புதுவையிலேயே போலீஸ் தொந்தரவின்றி நிம்மதியாக இருந்து விடலாமென்று நம்பினார். அந்த ஊரின் கடற்கரையும், மடுவும், தோட்டங்களும், வீதிகளும், ஒதுக்குப்புறமான சோலைகளும் அவர் மனதைக் கவர்ந்தன.
புதுச்சேரி சேர்ந்த ஒரு மாதத்திற்கெல்லாம், ‘இந்தியா’ பத்திரிகையும் புதுவை வந்து அவரது அக்ஞாதவாசத்தைத் தானும் அனுபவித்தது. ஆனால் இந்த நண்பர் இருவருக்கும் அதற்குள்ளாக ஆயிரம் யோசனைகள் வந்து உதித்தன. ‘இந்தியா’வின் சொந்தக்காரரான ஸ்ரீ என்.திருமலாச்சாரி யாரையும் சேர்த்துக்கொண்டு ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்யவேண்டுமென்று தீர்மானித்தார்கள். அதனால் பத்திரிகையைச் செம்மையாக நடத்தி வந்த ஸ்ரீ எம்.பி.திருமலாச்சாரியாரைப் புதுவையிலேயே பத்திரிகையை நடத்தும்படி கூறிவிட்டு, தாங்கள் மூவரும் ஐரோப்பா செல்ல வேண்டியதற்கான ஆயத்தங்களைச் செய்யலானார்கள். பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஏனெனில் ஸ்ரீ பாரதியாரின் மேற்படி நண்பர்கள் இருவரும் செலவழிக்கக் கூடியவர்களே. இன்னொரு நண்பரும் தைரியம் கூறினார்.
ஆனால் எதிர்பாராத விதமாக இந்தத் திருமூர்த்திகளின் யாத்திரை தடங்கல் பட்டது. பத்திரிகை நடத்த வேண்டு மென்று பொறுப்பிட்டிருந்த ஸ்ரீ எம்.பி. திருமலாச்சாரியரே ஐரோப்பா செல்வதற்கு ஆயத்தமாகி விட்டார்; புறப்பட்டும் சென்று விட்டார்.
புதுவையிலோ ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்துவதற்கு அனேக சங்கடங்கள், அவ்வூர் சட்டப்படி சர்க்காருக்கு ஜாமீனாக, பிரெஞ்சு இந்தியாவில் பிறந்த ஒருவர் வேண்டும். வில்லியனூர் வாசியான ஸ்ரீமான் ஸ்ரீனிவாஸாச்சாரியாரின் நண்பர் ஸ்ரீ லஷ்மி நாராயணய்யர் என்பவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஸ்ரீதிருமலாச்சாரியார் பத்திரிகாலயமாக இரு வீட்டைக் குடிக் கூலிக்கு அமர்த்தி, சென்னை சென்று, அச்சு சாமான்களையும் உடனிருந்து நடத்த ஸ்ரீ சங்கர நாராயணய்யர் என்பவரையும் அனுப்பிச் சிறிது காலத்திற் கெல்லாம் தாமும் வந்து கலந்துகொண்டார். இந்த ஏற்பாடெல்லாம் நடந்தபொழுது நான் கடையத்தில் என் பிதாவின் கிருஹத்தில் இருந்து வந்தேன்.
பூர்ண கர்ப்பிணியானதால் என்னைத் தனியே விட்டு விட்டுத் தாம் ஐரோப்பா யாத்திரை செல்வதிலும் பாரதியாருக்கு அவ்வளவு திருப்தியில்லை.
‘இந்தியா’ வெளிவர ஆரம்பித்ததும் பாரதியாருக்கும் சற்று நிம்மதியாயிருக்க முடிந்தது. எனக்குச் செலவுக்குச் சற்றுத் தாராளமாயிருக்க முடிந்தது. எனக்குச் செலவுக்கு சற்றுத் தாராளமாகப் பணம் அனுப்பியும் வந்தார். அடிக்கடி மனதைக் கலங்கவிடாமல் தைரியமாயிருக்கும்படி கடிதம் எழுதுவார்.
எனக்குப் பெண் குழந்தை பிறந்தது. அச்சமயம் காளிதாசன் எழுதிய ‘சாகுந்தலம்’ என்னும் ஸம்ஸ்கிருத நாடகத்தைப் பாரதியார் மிகவும் ஆர்வத்தோடு வாசித்து வந்தார். எனவே, பெண் குழந்தை பிறந்த விஷயம் தெரிந்ததும், அக்குழந்தைக்கு ‘சகுந்தலா’ என்று பெயர் வைக்கும்படி கடிதம் எழுதியிருந்தார். குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கெல்லாம் நானும் புதுவை வந்து சேர்ந்தேன்.
